திருப்பூர், செப்.26 –
காவிரித் தீர்ப்புக்கு மாறாக கீழ்பவானி மற்றும் பழைய பவானி பாசனங்களுக்கு பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஈரோடு மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திருப்பதாகக் கூறி, அப்படித் தண்ணீர் திறந்துவிட்டால் பந்த், சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம் கடந்த ஞாயிறன்று சென்னிமலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: கீழ்பவானிக்கு 14.9 டி.எம்.சி.யும், பழைய பவானி பாசனங்களுக்கு 11 டி.எம்.சி.யும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் திறந்துவிட மாநில அரசுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. ஆலைகள் கொண்டிருக்கும் ஆளுமை காரணமாக விருப்பு, வெறுப்பு மற்றும் ஆதாய அடிப்படையிலான பரிந்துரையாகும் இது என கீழ்பவானி விவசாயிகள் சங்கம் சந்தேகிக்கிறது. காவிரித் தீர்ப்புக்கு மாறான பரிந்துரையை ஏற்று அரசு நீர் திறப்பு ஆணைபிறப்பித்தால் பந்த் அறிவிக்கப்படும்.

பாசனப்பகுதியில் கடையடைப்பு நடக்கும். இரண்டாவது கட்டமாக பாசனப் பகுதியில் 8 தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் வீடுகள் முற்றுகையிடப்படும். பல்லாயிரக்கணக்கான பாசனப்பயனாளிகள் பங்கேற்கும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.