கோவை, செப்.26-
இருகூர் அரசு நூலகம் சமூக விரோதிகள் குடிப்பதற்கும், கும்மாளம் அடிப்பதற்குமான இடமாய் மாறியிருப்பது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. கோவை ஒண்டிப்புதூரை அடுத்த இருகூர் பேரூராட்சியில் புதிய மேம்பாலம் அருகில் அரசுபொது நூலகம் உள்ளது. ஏற்கனவே அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த இந்த நூலகம் தற்போது இருகூர் வாசகர்களின் கோரிக்கையை ஏற்று ஊருக்கு அருகாமையில் உள்ளஅரசு ஆரம்பப்பள்ளி பழைய கட்டடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. இதன்காரணமாக தற்போது நாள்தோறும் ஏராளமான வாசகர்கள் நூலகத்திற்கு வந்து வாசித்து செல்லும் இடமாய் மாறியுள்ளது.

இந்நிலையில் ஊருக்கு நான்கு மதுக்கடையை திறக்க அக்கறை காட்டும் தமிழக அரசு, நூலகத்தின் மேம்பாட்டிற்கு அக்கறை காட்டாது என்பதற்கு உதாரணமாய் மாறி வருகிறது இருகூர் அரசு நூலக கட்டடம். இந்த நூலக கட்டடத்தை இரவில்சமூக விரோதிகள் மது அருந்தும் பாராகவும், கஞ்சா போன்றபோதை வாஸ்துகள் பயன்படுத்தும் இடமாய் மாற்றியிருப்பதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இருகூர் கிளை நிர்வாகிகள் கூறுகையில், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக இந்த நூலக கட்டடத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து, இருகூர் பகுதியில் ரோந்து வரும் சிங்காநல்லூர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தோம்.

மேலும், இப்பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இருப்பினும் காவல்துறையினர் இதுகுறித்து எந்த அக்கறையும் காட்டியதாக தெரியவில்லை. முன்பு, ஓரிருவர் வந்து மது அருந்தும் நிலையில் இருந்து, தற்போது எவ்வித பயமுமின்றி ஏராளமானோர் மது அருந்தும் மதுக்கூடமாகவே மாற்றப்பட்டு விட்டது. இனியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அரசு நூலக கட்டடத்தை பாதுகாக்க நாங்களே நேரிடையாக களமிறங்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நூலகத்திற்கு நாளிதழ் விநியோகிக்கும் முகவர் ஒருவர் கூறுகையில், நாள்தோறும் அதிகாலை ஐந்து மணிக்கு இந்த நூலகத்திற்கு நாளிதழை போடுவதற்காக வருவேன். ஒவ்வொரு நாளும் நூலகத்தின் வெளிப்புறத்தில் உள்ள வளாகம் முழுவதும் மதுபாட்டில்கள் மற்றும் காண்டம் உள்ளிட்ட பொருட்கள் சிதறியிருக்கும். சில நேரங்களில் மதுபாட்டில்கள் உடைந்து கண்ணாடி சில்களாக கிடக்கும். இதுகுறித்து பலரிடம் முறையிட்டேன். இருப்பினும் எவ்வித முன்னேற்றமும் இல்லையென வேதனை தெரிவித்தார்.

ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது என்கிற பொன்மொழியை பொய்யாக்கி, ஒரு நூலகத்தின் கதவு மூடப்படும்போது ஒரு மதுக்கூடம் திறக்கிறது என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கும் சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை காவல்துறையினர் ஒடுக்க வேண்டும் என்பதே இருகூர் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

– அ.ர.பாபு.

Leave a Reply

You must be logged in to post a comment.