ஈரோடு, செப். 26-
ஈரோடு மாவட்டத்தில் 33 ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து ஈரோட்டில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 235 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் பெண்கள் உட்பட 33 ஒப்பந்த தொழிலாளர்களை பிஎஸ்என்எல் நிர்வாகம் எவ்வித காரணமுமின்றி திடீரென பணிநீக்கம் செய்துள்ளது. இதனை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன்ஒருபகுதியாக செவ்வாய்கிழமை முதல் மாநிலந் தழுவிய தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். ஈரோடு பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு தொலைத்தொடர்பு தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன், சி.வினோத் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் எல்.பரமேஸ்வரன், ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கே.பழனிசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

மாநில அமைப்பு செயலர் வி.மணியன், ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள், பிஎஸ்என்எல் ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.