கோவை, செப்.25-
வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக விற்பனை செய்த குற்றவாளிகளை பிடிக்க தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிஐடியு சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தனர்.வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களிடம் சில இடைதரகர்கள் வேலை வாங்கி தருவதாக நம்பவைத்து, கொத்தடிமைகளாக விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதியன்று வட மாநிலத்தை சேர்ந்த8 பேரை தலா ரூ.8 ஆயிரத்திற்கு உளுந்தூர்பேட்டையில் ஆழ்துளை கிணறு தோண்டும் நிறுவன உரிமையாளருக்கு இடைதரகர்கள் விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த சிஐடியு சங்கத்தினர் அவர்களை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதன்பின் அவர்களை சத்திஸ்கர் மாநில காவல்துறையினரிடம், கோவை காவல்துறையினர் ஒப்படைத்தனர்.அதேநேரம், இத்தகைய செயல்களில் ஈடுபடும் இடைத்தரகர்களை பிடிக்க வேண்டும் என சிஐடியு சார்பில் வலியுறுத்தியும், காவல்துறையினர் எல்லை பிரச்சனையை காரணம்காட்டி தப்பவிட்டுள்ளனர். ஆகவே, குற்றவாளிகளை தப்பவிட்ட காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்மந்தப்பட்ட இடைதரகர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு கோவை மாவட்ட பொது ஒப்பந்த மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சி.சந்திரன், பொதுச்செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: