ஈரோடு, செப்.25-
பவானிசாகரில் உள்ள நீர் இருப்புப்படி, முழுமையான பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் அளவுக்கு இருப்பு இல்லை என ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார். பவானிசாகர் அணையில் தற்போது 80.17 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்த பவானி ஆற்றில் 150 கனஅடியும், கால்வாயில் 5 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது. இதற்கிடையே, மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், சாகுபடியை எதிர்பார்த்து விவசாய பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே, அணையில் இருந்து செப்.25 ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காளிங்கராயன் பாசன சபை மற்றும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன சபை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதேபோல், அக்.1 ஆம் தேதிக்குள் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், அதுவும் முழுமையான ஒரு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கீழ்பவானி பாசன சங்கங்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவிக்கையில், மாவட்ட அளவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும், பவானிசாகர் அணைக்காக நீர் பிடிப்பு பகுதியில், குறைந்த அளவே மழை பெய்துள்ளது. அதனால், அணைக்கான நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இருப்பினும், தற்போது 15.7 டி.எம்.சி., தண்ணீர் அணையில் உள்ளது. அதேநேரம், மேல் அணைகளில் திருப்தி அளிக்கும் வகையில் நீர் இருப்பு இல்லை. ஆகவே, இந்த அளவிற்கான நீரை வைத்து, மூன்று பாசனத்திற்கும் முழுமையாக தண்ணீர் வழங்க இயலாது. இதனால் கடந்த முறை போல, தண்ணீர் மட்டம் குறைந்ததும் தண்ணீரை நிறுத்தும் நிலை ஏற்படும். அதேநேரம், முறை வைத்து தண்ணீர் திறந்தால், ஓரளவுக்கு முழு சாகுபடிக்கும் தண்ணீர் வழங்க வாய்ப்புள்ளது. இருப்பினும் தற்போது மழை பெய்து வருவதால், சற்று காத்திருக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.