திருப்பூர், செப்.26-
திருப்பூர் பூலுவப்பட்டி விக்னேஷ்வரா நகரை சேர்ந்தவர் தண்டபாணி. சிறிய அளவில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (15). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். ஞாயிறன்று சிறுவன் சந்தோசுக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தண்டபாணி, திருப்பூர் புது பேருந்து நிலையம் அருகில் உள்ள குமரன் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு சிறுவனுக்கு ஊசி போட்டு, மாத்
திரை எழுதி தந்ததாக கூறப்படுகிறது.

இரவு மாத்திரையை சாப்பிட்டு விட்டு தூங்கிய சிறுவன் திங்களன்று, வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் சிறுவனை எழுப்ப சென்றுள்ளனர். அப்போது வாயில் நுரை தள்ளிய நிலையில், மாணவன் இறந்து கிடந்துள்ளான். இதனால் கதறி துடித்த பெற்றோர், உறவினர்களுடன் அந்த தனியார் மருத்துவமனையில் முற்றுகையிட்டு, தவறான சிகிச்சையால் தான் தங்க
ளது மகன் இறந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, திருப்பூர் உதவி கமிஷனர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார், பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்தால் தான், இறப்புக்கான காரணம் தெரிய வரும் என தெரிவித்தனர். ஆனால், இதற்கு உடன்படாத பெற்றோர், பிரேத பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து, சிறுவனின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று விட்டனர்.

இதுகுறித்து சிறுவனின் உறவினர்கள் கூறுகையில், தவறான சிகிச்சையால் தான் சிறுவன் உயிரிழந்துள்ளான். மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, வெகு நேரம் காத்திருந்த பின்னரே சிகிச்சை அளித்து ஊசி போட்டுள்ளனர். இரவு அவர்கள் எழுதிக்கொடுத்த மாத்திரையை மாணவன் சாப்பிட்டு தூங்க சென்றுள்ளான். காலையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்துக் கிடந்துள்ளான். மேலும் அவனது உடல் நிறமும் கருப்பாக மாறியிருந்தது என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.