கோவை, செப்.25-
தலித் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் தங்களுக்கு குடிநீர் விநியோகிக்காமல் அலட்சியம் செய்வதாக கூறி கோவை அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அக்ரஹார சாமக்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் வெள்ளமடை சாலையில் தொட்டிபாளையம், அக்ரஹார சாமக்குளம் இடையே தலித் மக்கள் குடியிருப்புகள் உள்ளது. இங்கு கடந்த மூன்று மாதங்களுக்காக குடிநீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குழாய் இணைப்புகள் சரியாக இருந்தும் குடிநீர் வராததால் பலமுறை உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் திங்களன்று வெள்ளமடை – கோயில்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவ்வ
ழியே வந்த அரசுப் பேருந்துகளையும் சிறைபிடித்தனர். இப்போராட்டம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மற்ற பகுதிகளுக்கு மட்டும் சரியாக குடிநீர் விநியோகிக்கிறார்கள். தலித் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் எங்களை அலட்சியம் செய்கின்றனர். மூன்று மாதமாக குடிநீர் குழாய் கசிவுள்ள இடத்தில் குழி தோண்டி அதில் கிடைக்கும் நீரைத்தான் குடிக்கவே பயன்படுத்தி வந்தோம். அதுவும் இல்லாதபோது பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என ஆவேசமாக தெரிவித்தனர்.

சுமார் நான்கு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி, ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக தற்காலிக ஏற்பாட்டின் பேரில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து மறியலைக் கைவிட்டனர். முன்னதாக, இப்போராட்டத்தில் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.