திருப்பூர், செப்.25 –
திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் வசதி கோரியும், பள்ளிக்குச் சென்று வர சரியான நேரத்தில் பேருந்து வசதி கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவிநாசி வட்டம் பஞ்சலிங்கம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பள்ளியில் சேவூர், பாப்பாங்குளம், பங்களா ஸ்டாப் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறோம்.

இந்நிலையில் எங்கள் பகுதி மாணவர்கள் மாலை நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் நடந்தே செல்கின்றனர். இதனால் மாலை நேரம் வீட்டுக்கு செல்ல வெகுநேரம் ஆகிறது. ஆகவே மாணவர்களின் நலன்கருதி எங்கள் பகுதிக்கு பள்ளியில் இருந்து பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

குடிநீர் கோரி:
மூலனூர் எம். குமாரபாளையம் ஊராட்சி கருடன்கோட்டை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து மனு அளித்தனர். அப்போது, எங்கள் கிராமத்தில் 300 குடும்பங்கள் 3 ஆண்டுகளாக குடிநீர் வசதி இன்றி சிரமப்படுகிறோம். கடந்த 3 மாதங்களாக எங்களுக்கு சுத்தமாக குடிநீர் கிடைக்கவில்லை. ஆடு, மாடுகளும் குடிநீரின்றி அவதிப்படுகிறது. இந்நிலையில் தற்போது 3 கி.மீ., தூரம் சென்று குடிநீர் பிடித்துவருகிறோம்.போர்க்கால அடிப்படையில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
அதேபோல், காங்கயம் வட்டம் கொடுவாய் அருகே எல்லைப்பாளையம் புதூர் ஊராட்சி புள்ளக்காளிபாளையம் கிராம மக்களும் காலிக்குடங்களுடன் வந்து அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 226 குடும்பங்கள் உள்ளது.

எங்களுக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் இல்லை. அனைவரும் விவசாய கூலி வேலையில் ஈடுபட்டுள்ளோம். தற்போது ரூ. 350 கொடுத்து நீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். ஆழ்குழாய்களை சரிசெய்து குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்றனர்.

மதுபான கடைக்கு எதிர்ப்பு:
திருப்பூர் 35-வது வார்டு விஜயாபுரம் பகுதி பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதி ஒத்தக்கடை பிரிவில் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்க உள்ளதாக தெரிகிறது. அரசு, தனியார் பள்ளிகள்,பெண்கள் பணியாற்றும் பின்னலாடை நிறுவனங்கள், வழிபாட்டுத்தலம் ஆகியவை உள்ளன. ஆகவே எங்கள் பகுதியின் பொதுஅமைதியை குலைக்கும் வகையில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என்றனர்.

மயான வசதி:
மங்கலம் அருகே நீலி கணபதிபாளையம், எம்.செட்டிபாளையத்தில் அருந்ததியருக்கு மயான வசதி செய்துதரக்கோரியும்,மங்கலம் புக்குளிபாளையம் அருந்ததியர் மயானத்துக்கு நிழற்குடை கட்டித்தரக்கோரியும், சுல்தான்பேட்டை, புக்குளிபாளையம், ராஜகணபதி நகர் வாழும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என கோரியும் திராவிட மக்கள் நல்வாழ்வு கட்சியினர் மனு அளித்தனர்.

மேலும், பல்லடம் வட்டம் கரைப்புதூர் ஊராட்சி பாச்சாங்காட்டுபாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 750-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். 10 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இதில் மழைபெய்யும் காலங்களில் நிரம்பினால், நிலத்தடி நீர் உயர்ந்து அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு குடிநீராக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் சமீபகாலமாக சாயக்கழிவுநீர் முறைகேடாக வெளியேற்றுவதால்,நிலத்தடிநீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் அழிந்துவிட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எங்கள் குடிநீர் ஆதாரம், விவசாயம் மற்றும் குளத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.