திருப்பூர், செப்.25-
ஓவியம் aமிகச்சிறந்த ஆயுதம், அதைப் பார்த்து பலர் பயப்படுகின்றனர் என நீதிபதி கே.சந்துரு தெரிவித்தார். நேர்மை மக்கள் இயக்கம் மற்றும் பதியம் இலக்கிய அமைப்பு சார்பில் ஓவியர் புகழேந்தியின் நானும் எனது நிறமும் நூல் வெளியீட்டு விழா திருப்பூரில் ஞாயிறன்று நடந்தது. இந்நிகழ்விற்கு நேர்மை மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.ரகுபதி தலைமை வகித்தார். பதியம் இலக்கிய அமைப்பின் பாரதிவாசன் வரவேற்றார். இந்நூலை ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு வெளியிட, சர்க்கரைத்துறை கூடுதல் இயக்குநர் மு.செந்தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி கே.சந்துரு பேசுகையில், நாட்டில், ஓவியத்தை பார்த்து பலர் அச்சப்படும் சூழல் இன்றைக்கு உள்ளது. ஓவியம் மிகச்சிறந்த ஆயுதம். உலக புகழ் பெற்ற ஓவியரான எம்எப் உசேன் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. அவருக்கு தாய்நாடு இல்லாத சூழல் ஏற்பட்டது. ஒரு ஓவியரைப் பார்த்து நாடே அச்சப்பட்டது. ஓவியர்களைப் பற்றி அச்சப்படும் சூழலில் அரசு இருக்கிறது என்றால், ஒரு ஓவியரின் பலத்தையும் அவர் படைப்பின் பலத்தையும் நாம் அறிய வேண்டும். மருத்துவர், பொறியாளராக ஆசைப்படும் பெற்றோர், தனது மகன் ஓவியராக விரும்புவதில்லை. ஆனால், புகழேந்தி ஓவியத்தை ஒரு இயக்கமாக மாற்றி வருகிறார்.

திறமையான கலை, ஓவியக்கலை. மிகவும் நுண்ணியமான கலை. உருவம், உள்ளடக்கம் இலக்கியத்திலும் உண்டு; ஓவியத்திலும் உண்டு. உருவம், உள்ளடக்கம் தாண்டி சமூகப்பணி புகழேந்தியின் ஓவியங்களில் உள்ளது. சாதித்தவர்கள், சாதனையை பதிவு செய்யமுடியும். அப்படி சாதித்த ஓவியர் புகழேந்தி இந்த நூலில் அதனை பதிவு செய்துள்ளார். ஓவியம் போன்ற கலைகளால், சமூகத்தை நிச்சயம் மாற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் நூலின் ஆசிரியர் ஓவியர் புகழேந்தி ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக வெள்ளியங்காடு தாய்த்தமிழ் பள்ளிக் குழந்தைகளின் பறை இசையும், நடனமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.