===இ.எம் ஜோசப் ===
1980-களின் இறுதி ஆண்டுகள் உலகின் முதல் சோஷலிச நாடான சோவியத் ஒன்றியத்திற்கு பின்னடைவுகள் தொடங்கிய காலம். இதைத் தொடர்ந்து, ‘முதலாளித்துவமே வரலாற்றின் இறுதி’ என பிரான்சிஸ் ஃபுகுயோமா என்ற மேற்கத்திய அறிஞர் ஒருவர் அறுதியிட்டு அறிவித்தார்.
2008-ம் ஆண்டில், அமெரிக்காவின் நிதித்துறையில் தோன்றிய பிரம்மாண்டமான நெருக்கடி உலகத்தை ஆட்டிப் படைத்த பின்னரும், முதலாளித்துவத்தின் மகத்துவம் குறித்த பரப்புரைகள் நின்ற பாடில்லை. தொழிலாளர்கள், செவிலியர்கள், நடுத்தர வர்க்கத்தினர், முதியவர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் வால் ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் அவை தடையில்லாமல் தொடர்ந்தன.
வலது பயணத்தில் வழித்தடைகள்!
உலகில் ஒரு வலதுசாரி திருப்பம் உருவாகியிருக்கிறது, இந்நிலையில் ‘இடது திருப்பம் எளிதல்ல’ என்ற மதிப்பீட்டின் பின்னணியில், வலதுசாரிகளின் தத்துவார்த்த கர்வம் மேலும் அதிகரித்தது. முதலாளித்துவமே வரலாற்றின் இறுதி என உண்மையிலேயே அவர்கள் நம்பத் தொடங்கி விட்டனர். இந்தப் பின்னணியில், வலதுசாரிகளுக்கு மாற்று வலதுசாரிகளே (Alt-right or Alternative Right) என்ற கருத்துருவும் உருவாக்கப் பட்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலை இடதுசாரிகளுக்கு ஒரு வேளை சோர்வினை ஏற்படுத்தக் கூடும். எனினும், வலது நோக்கிய பயணத்தில் இன்று நவீன தாராளவாதம் சந்திக்கும் வழித் தடைகளை சற்று உற்று நோக்கிப் புரிந்து கொள்ளும் போது, இந்தச் சோர்வினைக் களைய முடியும். அவ்வகையில், அண்மைக் காலங்களில் உலகின் சில வளர்ச்சியடைந்த நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மக்களின் மன நிலை குறித்த சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அமெரிக்க தேர்தலில் பெர்னி சாண்டர்ஸ்
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் மிகவும் சுவையானது. வழக்கமாக, இறுதிச் சுற்றில் மோதும் இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களின் பேச்சுக்களே ஊடகங்களின் கவனத்தைப் பெறும். ஆனால், இம்முறை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்விற்கான சுற்றுக்களிலேயே தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. ஜனநாயக (டெமாக்ரடிக்) கட்சிக்குள் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக பெர்னி சாண்டர்ஸ் போட்டியிட்டார். சில நாட்களுக்குள்ளாகவே, அவரைப் பற்றி குடியரசுக் (ரிபப்ளிகன்) கட்சி பொரிந்து தள்ளத் தொடங்கியது. சாண்டர்ஸ் ஒரு கம்யூனிஸ்ட் என்றும், அவர் அமெரிக்காவை கம்யூனிஸ்ட் பாதையில் கொண்டு சென்று விடுவார் என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். விஷயம் வேறொன்றுமில்லை.
அவர் அடிப்படையில் பொதுவாக இடதுசாரிகள் எழுப்பும் பிரச்சினைகளை எழுப்பினார் என்பதே அவர்களின் கோபத்திற்குக் காரணம். 2009-ம் ஆண்டிலிருந்து தேங்கி நிற்கும் குறைந்த பட்ச ஊதியம் உயர்த்தப்பட வேண்டும்; ‘ஒபாமா கேர்’ என்று அழைக்கப்பட்ட அமெரிக்க மருத்துவ சேவை மேலும் வலுப்படுத்த வேண்டும் போன்ற சில பிரச்சனைகள்.
ரிபப்ளிகன் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இந்த இரண்டு விஷயங்களையும் கடுமையாக எதிர்த்தார். அமெரிக்க தொழிலாளர்கள் மிக அதிக ஊதியம் பெறுகிறார்கள் என்பதும், ஒபாமா கேர் திட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதும் அவரது வாதம். ஆனால், சாண்டர்சின் பிரச்சாரத்தினால், ஒரு கட்டத்தில், அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியம் குறைவானதே என்பதை டிரம்ப் ஏற்றுக் கொண்டு அறிக்கை விட வேண்டி வந்தது. சாண்டர்ஸ் தனது கட்சியின் வேட்பாளர் தேர்வில் ஹிலாரி கிளிண்டனிடம் தோற்றுப் போனார். சாண்டர்ஸ் ஒரு வேளை டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால், அவர் டிரம்பைத் தோற்கடித்திருப்பார் எனக் கருதப்படுகிறது. இன்றும், டெமாக்ரடிக் கட்சிக்குள், வெர்மாண்ட் மாகாகணத்தின் செனட்டரான சாண்டர்சின் கருத்துக்களுக்கான செல்வாக்கு தொடர்கிறது.
அமெரிக்கத் தேர்தல்களில் மற்றொரு சுவையான செய்தி ஒன்றும் உண்டு. டிரம்ப், தேர்தலில் வெற்றி பெற்று விட்டார் என்பது உண்மை எனினும், மக்களின் நேரடி வாக்குகளில், டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 28.5 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார். அண்மைக்கால வரலாற்றில் இப்படி ஒன்று நடந்ததே இல்லை. ஒரு மாநிலத்தில் யார் வெற்றி பெறுகின்றாரோ அவருக்கு தோற்ற வேட்பாளரின் வாக்குகளும் சென்று விடும்  என்ற அமெரிக்க தேர்தல் முறையின் காரணமாகவே டிரம்ப் வெற்றி பெற முடிந்தது.
டிரம்ப் வெற்றி – வித்தியாசமான எதிர்வினைகள்
தேர்தலுக்குப் பின்னர் நடந்தவை இன்னும் சுவையானவை. டிரம்ப் பதவி ஏற்ற சிறிது நேரத்திலேயே, அவருக்கு எதிராக பல லட்சம் பேர் பங்கேற்ற பெண்களின் பேரணி நடைபெற்றது. அமெரிக்க வரலாற்றில் இது வரை நடந்த ஒரு நாள் பேரணிகளில் இதுவே மிகப் பெரியது என ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
இதைத் தொடர்ந்து, அமெரிக்கத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் 7.5 டாலரிலிருந்து சுமார் 50 சதவீதம் உயர்ந்திருக்கிறது. நியூயார்க் போன்ற நகரங்களில் 2018க்குள் இது மேலும் உயரும் எனவும் தெரிகிறது.
மறுபுறத்தில் ஒபாமா கேர் திட்டத்தை வெட்டிச் சுருக்குவதற்காக டிரம்ப் முன்வைத்த சட்ட மசோதாவினை எதிர்க்கட்சி மட்டுமல்லாது டிரம்பின் ரிபப்ளிகன் கட்சி செனட்டர்களும் சேர்ந்து தோற்கடித்திருக்கின்றனர்.
சாண்டர்சின் ஆதரவாளர்களில் 69 சதவீதத்தினரும், ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்களில் 52 சதவீதத்தினரும் சோஷலிசத்திற்கு ஆதரவான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என நியூயார்க் டைம்ஸ் நாளேடு கருத்துக் கணிப்பினை வெளியிட்டது. இது, இந்த தேர்தல்களில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு செய்தி.
30 வயதுக்கு உட்பட்டவர்களில் 49 சதவீத அமெரிக்கர்கள் சோஷலிச ஆதரவு கருத்து கொண்டவர்கள் என 2011-ம் ஆண்டில் பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையுடனும், வால் ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டத்திற்கு பிந்தைய கால மக்கள் மன நிலையுடனும் இது கணிசமான அளவில் ஒத்துப் போவதாகக் கொள்ளலாம். 2008-ம் ஆண்டு அமெரிக்க நெருக்கடியினையடுத்து தோன்றிய “டீ பார்ட்டி” என்ற தீவிர வலதுசாரி இயக்கம் இப்போது அதிகப்படியான வெள்ளையர்கள், ஆண்கள் என அடையாள அரசியலின் ஒரு பகுதியாக மாறி, இளைஞர்களின் செல்வாக்கினை இழந்து விட்டது. இந்த இயக்கத்தினை டிரம்ப் வெகுவாகப் புகழ்ந்து பேசிய போதும், அது அவருக்கு அரசியல் ரீதியாக பெரிதாக உதவவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன.
பிரிட்டனில் ஜெர்மி கோர்பின்
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கிரீஸ் தேர்தல்களும் மக்களின் வலதுசாரி எதிர்ப்பு மன நிலையினையே பிரதிபலிப்பவையாக இருக்கின்றன.
பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, ‘ப்ரெக்சிட் (ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது என்ற திட்டம்) உணர்வுகளின் பின்னணியில் பெரிய வெற்றியினைப் பெற்று விட முடியும் என நம்பி, நாடாளுமன்றத் தேர்தல்களை உரிய காலத்திற்கு முன்பாகவே நடத்தினார். ஆனால், அக்கட்சியால் பெரும்பான்மை இடங்களைப் பெற இயலவில்லை. மற்றொரு கட்சியின் ஆதரவுடன் ஒரு மைனாரிட்டி அரசையே அமைக்க முடிந்தது. பிரிட்டன் தேர்தல்களில் போட்டியிட்ட லேபர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பின் தனது பிரச்சாரங்களில் தெளிவாக இடதுசாரி அரசியலை முன் வைத்தார். காரல் மார்க்சின் போதனைகளை தயக்கமின்றி மேற்கோள் காட்டினார். உலகமய அரசியலை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தத் தேர்தலில் அவரால் ஆட்சி அமைக்க முடியாமல் போய் விட்டாலும், வரலாறு காணா வகையில் லேபர் கட்சி 40 சதவீத வாக்குகளையும், கூடுதலாக 34 இடங்களையும் பெற்றிருக்கிறது.
கடந்த ஆண்டில் லேபர் கட்சியின் 172 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதே ஜெர்மி கோர்பினுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தினை நிறைவேற்றி அவரை இழிவு படுத்தினர் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இவர் தலைமையில் லேபர் கட்சி தேராது என ஊடகங்கள் பல ஆரூடம் கூறியிருந்தன. ஆனால், மக்கள் மன நிலையோ வேறு விதமாக இருந்தது. யூகவ் அமைப்பு நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பின்படி, 40 வயதிற்கு கீழ் உள்ளவர்களில் 61.5 சதவீதத்தினர் ஜெர்மி கோர்பினின் லேபர் கட்சியினை ஆதரிக்கிறார்கள் எனவும், 23 சதவீத இளைஞர்களே கன்சர்வேடிவ் கட்சியினை ஆதரிக்கிறார்கள் எனவும் தெரிகிறது. 
பிரான்சில் ஜான் லக் மெலங்கன்
பிரான்சில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் மக்களின் மன நிலை வலது சாரி மாற்றினை விரும்பவில்லை என்பதனையே காட்டுகிறது. அதன் முதற் சுற்றில் இப்போது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் இமானுவேல் மக்ரான் பெற்ற வாக்குகளை விட, கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்த இடதுசாரி வேட்பாளர் ஜான் லக் மெலங்கன் குறைவாகப் பெற்ற வாக்குகளின் வித்தியாசம் சுமார் 4 சதவீதம் மட்டுமே.
இறுதியில் தீவிர வலதுசாரி வேட்பாளரான லீ பென் வெற்றி பெறக் கூடாது என்ற மக்களின் மன நிலை காரணமாக, பெருவாரியான வாக்குகள் மக்ரானுக்கு சென்றன. வலதுசாரிக்கு மாற்றாக தீவிர வலதுசாரி என்பதை பிரெஞ்சு மக்கள் ஏற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
தீர்வு என்ன?
நவீன தாராளவாதத்தின் கேடுகளுக்கான தீர்வினை, முதலாளித்துவச் சட்டகத்திற்குள்ளேயே தேடி பயனில்லை. இதைத் தான், கிரீஸ் நாட்டு அனுபவமும், வெனிசுலா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்களும் உணர்த்துகின்றன.
கிரீஸ் நாட்டு மக்கள், பொருளாதார நெருக்கடியிலிருந்தும் ஐரோப்பிய யூனியனின் நிர்ப்பந்தங்களிலிருந்தும் மீள்வதற்காக ஒரு இடதுசாரிக் கட்சி அரசாங்கத்தினை தேர்ந்தெடுத்த போதும், அக்கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தினை ஆட்டிப்படைக்கும் ஐரோப்பிய மத்திய வங்கி உள்ளிட்ட நவீன தாராளவாத சக்திகளுடன் செய்து கொண்ட சமரசம் அந்நாட்டினை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.
முடிவாக…
உலக ஏகாதிபத்தியத்திற்கு தலைமை தாங்கும் அமெரிக்கா இன்று சந்திக்கும் கொள்கை நெருக்கடியினை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். உலகமயமே உத்தமமானது என்று ஊருக்கெல்லாம் உபதேசித்து வந்த அமெரிக்கா இன்றைக்கு அதனை எதிர்த்துப் பேசும் அளவிற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டிரம்ப் இப்போது பேசுவது அமெரிக்க தேசியம் தானே? ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரிட்டனின் “பிரெக்சிட்” உணர்வுகளும் இந்த வகைப்பட்டதே. முதலாளித்துவமே வரலாற்றின் இறுதி என்ற கொக்கரிப்பு இப்போது எங்கே போனது? முதலாளித்துவம் தனது இறுதியினை நோக்கி நகர்வதைத் தானே இது காட்டுகிறது!
எனினும், வலது பயணத்தில் வழித்தடைகள் உண்டு என்பதால் மட்டுமே, அதன் பயணம் நின்று விடும் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு விடக் கூடாது. அத்தடைகளைப் பயன்படுத்தி, பயணத்தின் திசை வழியினை இடது பக்கம் திருப்புவதற்கான பணியினையும், குறைந்தபட்சம் பயணம் மேலும் தொடர விடாமல் தடுப்பதற்கான பணியினையும், தொழிலாளி வர்க்கம் தனது முக்கிய கடமைகளில் ஒன்றாகக் கொள்ள வேண்டும். இதில் கிளர்ச்சியும், பிரச்சாரமும் ஒன்றிணைய வேண்டும்.
‘வளர்ந்து வரும் வரலாறு வட்டமிட்டு நிற்பதில்லை; வளையமிட்டு வந்தாலும் வான் நோக்கி மேலுயரும்’ (The growth of history is not circular; it is spiral) என்ற இயக்கவியல் தத்துவத்தினை உணர்ந்தவர்கள், வரலாற்றின் இந்த வலது திருப்பம் குறித்து சோர்வடைந்து விடுவதில்லை. பாதகமான எதார்த்தச் சூழ்நிலையினை புரிந்து உள்வாங்கிக் கொள்வது என்பது வேறு. அடுத்த வாய்ப்பிற்காக பொறுமையோடு காத்திருப்பதும், அதற்காக போராடுவதும், வாய்ப்புக்கள் வரும் போது அவற்றைப் பயன்படுத்தி முன்னேறுவது என்பதும் வேறு. பொறுமையும் போராட்டத்தின் ஒரு பகுதியே என்பதனை இங்கு மறந்து விடக் கூடாது. உலகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் போராட்டங்களும், அரசியல் வினைகளும் எதிர்வினைகளும் இதைத்தான் உணர்த்துகின்றன.
எனவே, எளிதல்ல என்பவை எல்லாம் இயலாதவை அல்ல.

Leave a Reply

You must be logged in to post a comment.