வாரணாசி,
இந்து பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
காசியில் உள்ள இந்து பல்கலைக்கழகத்தில் பெரும் கலவரம், தடியடி ஆகியவை நடந்துள்ளது.
பாஜக சார்பில் சாமியார் யோகி ஆத்தியநாத் ஆட்சி நடைபெற்று வரும் உத்தரபிரதேச மாநிலம் காசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது.  இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை சிலர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், அந்த புகாருக்கு இதுவரை பல்கலைக்கழக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நூற்றுக்கணக்கான மாணவர்களும், மாணவிகளும் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.   துணைவேந்தர் பதவி வகிக்கும் கிரிஷ் சந்திர திரிபாதியை சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  ஆனால் பல்கலை நிர்வாகம் அதை மறுத்து விட்டது.  கிரிஷ் சந்திர திரிபாதியின் இல்லம் அதே வளாகத்தில் உள்ளது.  மாணவர்கள் அங்கு சென்று அவர் வீட்டின் முன்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.  கிரீஷ் அவர்களை சந்திக்க முடியாது என தெரிவித்து விட்டார்.
இதையடுத்து ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் மாணவ மாணவிகளை கலந்து செல்லுமாறு மிரட்டல் விடுத்தனர்.  இதையடுத்து காவல் துறையினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது..
இந்த தடியடியில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.  அவர்களுக்கு பல்கலைக் கழக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  போலீசார் 1200 மாணவர்கள் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளனர்.  சுமார் 12 பேரை கலவரத்தை தூண்டிய குற்றத்தில் கைது செய்துள்ளனர்.
மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற உத்திரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புனியா உட்பட பல காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் தடுத்து கைது செய்துள்ளனர்.  இந்த விவகாரம் மாநிலம் எங்கும் பரவவே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல எதிர்கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.  இந்த கலவரத்தை குறித்து மாணவர் ஒருவர், “கடந்த வியாழக்கிழமை அன்று முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் பல்கலை வளாகத்தில் உள்ள விடுதிக்கு வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவரை சுற்றி வந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.  அப்போது அங்கிருந்த காவலர்களும் அதை கண்டுக் கொள்ளவில்லை.  அதனால் அந்த மாணவி வார்டனிடமும் நிர்வாகத்திடமும் புகார் கொடுத்தார்.  அவர்கள் அந்த மாணவி லேட்டாக வந்ததால் தான் இந்த விளைவு எனவும் அதற்கு அந்த மாணவிதான் பொறுப்பு எனவும் கூறி உள்ளனர்.  அந்த மாணவியின் பெயரை தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை.  அவருக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு எதிராக நாங்கள் போராட்டத்தை துவக்கினோம்” என கூறி உள்ளார்.
மோடி காசிக்கு வருகை தந்து திரும்பிச் சென்ற சில மணி நேரங்களில் இந்த தடியடி சம்பவம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.