கோவை, செப். 25-
அன்னூரில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 39 பேர் காயமடைந்தனர். இதில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டம், அன்னூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக திங்களன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும், கோவையில் இருந்து சத்தியமங்கலம் சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காயமடைந்தவர்களையும், பேருந்துகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணித்த மொத்தம் 39 பேர் காயமடைந்தனர். இவர்களில் 13 பேர் பலத்த காயமடைந்த நிலையில், ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பேருந்துகளை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். விபத்து காரணமாக சிறிது நேரம் கோவை சத்தியமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மற்றொரு விபத்து:
இதற்கிடையே, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.