புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்திரனை காவல் துறையினர் கைது செய்தனர்.புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்க வேண்டும், அரசுப் பள்ளிகளில் சிறந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், கிராமங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிறன்று (செப். 25) மும்முனைபிரச்சாரம் செய்வது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருவள்ளூர் மாவட்டக் குழு திட்டமிட்டு இருந்தது. இது தொடர்பாக காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அலமாதி எடப்பாளையம், ஊத்துக்கோட்டை, திருநின்றவூர் ஆகிய மூன்று மையங்களில் இருந்து துவங்கி மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை என்றும், மீறி பிரச்சாரம் செய்தால் கைது செய்யப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறித் திரண்ட வாலிபர் சங்கத்தின்ர் ஊத்துக்கோட்டையில் தபால் நிலையத்திலிருந்து ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை அண்ணாசிலை அருகேகாவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், சாலையில் அமர்ந்து முழக்கமிட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.இந்தப் போராட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தேவேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் என்.கங்காதரன், பொருளாளர் விஜயகுமார், மாவட்டத் துணை நிர்வாகிகள் மோசஸ்பிரபு, டி.சண்முகசுந்தரம், குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டு கைதாகினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.