கொச்சி, செப்.24-
புதிய தாராளமயக் கொள்கைகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு இடதுசாரிகள் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு இடதுசாரிகளால் வெற்றி பெற முடியாத இடங்களில் வலதுசாரி சக்திகளும், பிற்போக்கு சக்திகளும் வெற்றி பெறுவார்கள். அவர்கள் கடைப்பிடிப்பதும் புதிய தாராளமயக் கொள்கைகளைத்தான் என்பதை சமீபத்திய ஐரோப்பிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி சீத்தாராம் யெச்சூரி பேசினார். கொச்சியில் சனியன்று தெற்காசிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாட்டை துவக்கி வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மேலும் பேசியதாவது: சமூக பதற்றத்தையும், புதிய பொருளாதார தாக்குதல்களையும் எதிர்கொள்ள வர்க்கப்போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுக்க வேண்டும்.

தெற்காசிய நாடுகளில் கம்யூனிஸ்ட்-இடதுசாரி கட்சிகள் சக்தியாகவும், தனித்துவத்தோடும் அதற்கு தயாராக வேண்டும். சமூக முன்னேற்றம், தேசிய இறையாண்மையை பாதுகாப்பது, பிரிவினைவாதத்தை தடுப்பது, வேற்றுமைகளை களைவது ஆகிய நான்கு கடமைகளை கம்யூனிஸ்ட் – தொழிலாளர் கட்சிகள் நிறைவேற்ற வேண்டும். பாரபட்சத்திற்கு எதிராகவும், அந்தந்த நாடுகளில் உள்ள மக்கள் விடுதலை பெறவும் இந்த நான்கிலும் வெற்றி பெற வேண்டும். பிரிவினைகளை தகர்க்க வலுவான போராட்டம் இல்லாத நாடுகளில் புரட்சிகர முன்னேற்றம் சாத்தியமில்லை. சமூக -பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாடுகளில் ஒற்றுமையை பாதுகாப்பதற்கான போராட்டங்கள் தகர்ந்து கொண்டே இருக்கும். மக்களுக்கான போராட்டங்கள் மூலம் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்தினால் மட்டுமே இதனை சீராக்க முடியும்.

ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் சமூக சீர்திருத்தவாதம் வெற்றி பெற்ற இடங்களில் எல்லாம் வலதுசாரி, மததீவிரவாதம் கோலோச்சுகின்றன. தங்களுக்கு எதிராக குரலெழுப்பும் இடதுசாரிகளையும், முற்போக்கு சக்திகளையும் அழித்தொழிப்பது அவர்களது லட்சியமாக உள்ளது. இராக்கில் அமெரிக்க ராணுவம் அங்கு மதரீதியிலான செயல்பாட்டுக்கு உதவியிருக்கிறது. முன்பு ஈரானில் ஷாவின் ஆட்சி அதிகாரத்தை அமெரிக்கா நிலைநிறுத்தியதை தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகளையும், முற்போக்கு தேசியவாதிகளையும் கொடூரமாக வேட்டையாடினர். ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் உதவியுடன் நடந்துவந்த அரசை அமெரிக்கா தகர்த்தது. அதன் பலனாக முஜாஹிதீன் – தலிபான் அமைப்புகளுடன் ஒசாமா பின்லேடனும் உருவெடுத்தார்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலாளித்துவம் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. 1930 களில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை விட கடுமையான சூழ்நிலையை இன்று உலக முதலாளித்துவம் எதிர்கொண்டு வருகிறது. இன்றைய நடவடிக்கைகள் மூலம் இந்த சூழ்நிலையை கடந்து செல்ல முதலாளித்துவத்தால் முடியாது. இது போன்ற நிலைமைகள் உள்ள போதிலும் முதலாளித்துவம் தானாக தகர்ந்து விடாது. முதலாளித்துவத்துக்கு எதிரான சக்திகளின் பலத்தை அதிகரித்து போராட்டங்களை வலுப்படுத்துவதே கம்யூனிஸ்ட் -தொழிலாளி வர்க்க கட்சிகளின் கடமை என யெச்சூரி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.