நம் முன்னோர்களால் போற்றி வளர்க்ப்பட்ட மரங்களில் முக்கியமானதான பனை மரங்கள். காலப்போக்கில் மெல்ல, மெல்ல குறைந்து தற்போது இதனை காணக்கிடைப்பதே அரிது என்றாகிவிட்டது. முப்பது அடி வரை அறுபது ஆண்டுகள் வரை வளரும் பனை மரங்கள் வேர் முதல் அதன் நுனி வரை மனிதர்களுக்கு பயன் தரக்கூடியது. மேலும்,  இவை மண் அரிப்பை தடுத்து நம் நீர்நிலைகளை காக்க வல்லது. இதனாலேயே நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் தாங்கள் வெட்டிய குளம், குட்டைகள் மற்றும் நதிக்கரைகளில் பனை மரங்களை வரிசையாய் நட்டு வளர்த்தனர். இதேபோல், எவ்வித பராமரிப்பும், தேவையின்றி கடும் வறட்சியிலும் செழித்து வளர்ந்து கோகோடை காலத்தில் குளிர்ச்சியான நுங்கினை தரும் இப்பனை மரங்களின் ஓலைகளையே தங்களது எழுதுப்பணிக்கும் ஓலை சுவடிகளாக பயன்படுத்தி வந்தனர்.

இதன் சிறப்புகள் சிலப்பதிகாரம், தொல்காப்பியம் மற்றும் திருக்குறளிலும் விளக்கப்பட்டுள்ளது. பூமியின் கற்பக விருட்சம் என போற்றப்படும் பனை மரமே தமிழக அரசின் மரமாக உள்ள போதிலும் தமிழகத்தில் இம்மரங்களின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து கொண்டே செல்கிறது. அதுவும், நவீன வேளாண்மையில் பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது என வேதனை தெரிவிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். இந்நிலையில் ஒரு காலத்தில் ஏராளமான பனைமரங்களோடு காட்சி தந்த கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் பகுதியில் மீண்டும் பனை மரங்களை வளர்க்கும் முயற்சியை சிக்காரம்பாளையம் கிராம இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர். வாரத்தின் விடுமறை நாளான ஒவ்வொரு ஞயிறன்றும் ஒன்று கூடும் இப்பகுதி மாணவ மாணவிகள், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் அன்று மட்டும் ஆயிரம் பனை மர விதைகளை நட்டு வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலரும் பனை வளர்ப்பு திட்டத்தின் ஒருங்கினைப்பாளருமான ஞானசேகரன் கூறுகையில், வாரந்தோறும் ஆயிரம் வீதம் என்ற கணக்கீட்டில் மொத்தம் இருபைந்தையிரம் பனை மரக்கன்றுகளை நடுவதே எங்களது இலக்கு. சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் மட்டுமின்றி மேட்டுப்பாளையம் பகுதி முழுவதும் தொடர்ந்து இப்பணியினை மேற்க்கொள்ள தமிழக அரசின் வேளாண் துறையும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.ஏனெனில், தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரத்தோடு ஒன்றிப்போன பனைமரங்களின் அழிவே நமது நீர்நிலைகளின் அழிவிற்கும் முக்கிய காரணம். நம் மாநில மரத்தை மீட்டெடுக்கப்படுவதன் அவசியம் பற்றி புரிந்து கொண்ட கிராமத்து இளைஞர்கள் பலரும் வாரத்தில் ஒருநாள் மூன்று மணிநேரங்களை ஒதுக்கி வருங்கால சந்ததியினரின் நலன் காக்க பனை மரங்களை வளர்த்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
(ந.நி)

Leave A Reply