திருப்பூர், செப்.24 –
திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் அ.ப., என்றழைக்கப்படும் அ.பழனிசாமியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் இடுவாய், மங்கலம், 63 வேலம்பாளையம் வட்டாரத்தில் செங்கொடி இயக்
கத்தை கட்டி வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் அ.பழனிச்சாமி. சிறுவயதில் பனியன் தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் தொடங்கி அவர், சிஐடியு சங்கத்தில் சேர்ந்து பனியன் மற்றும் விசைத்தறித் தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் முன்னணியில் இருந்து செயல்பட்டார். பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகள், வழக்குகள், கொலை முயற்சி உள்ளிட்டவற்றை எதிர்கொண்டு துணிச்சலுடன் செயல்பட்ட அ.ப., கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி சீராணம்பாளையத்தில் உள்ள தமது இல்லத்தில் காலமானார்.

அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று இடுவாய் மார்க்சிஸ்ட் கட்சி கிளை அலுவலகத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், மாநிலக்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.முத்துசாமி உள்ளிட்டோர் அ.ப.வை நினைவு கூர்ந்து உரையாற்றினர். முன்னதாக அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிறைவாக கிளைச் செயலாளர் கே.கருப்புசாமி நன்றி கூறினார்.

தீக்கதிர் சந்தா வழங்கல் முன்னதாக, அ.ப.,வின் இல்லத்தில் அவரது மனைவி அ.ப.லட்சுமி மற்றும் மகன்கள், மருமகள்கள் உள்ளிட்ட குடும்பத்தார் அ.ப.வின் நினைவைப் போற்றும் வகையில், தீக்கதிர் நாளிதழுக்கு 12 ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ.18 ஆயிரத்தை அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.மோகன், கிளைச் செயலாளர் கே.கருப்புசாமி ஆகியோர் முன்னிலையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.