திருச்செங்கொடு, செப்.24-
திருச்செங்கோடு பேருந்து நிலையம் சுகாதார சீர்கேட்டின் அடையாளமாக திகழ்வதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இப்பேருந்து நிலையம் மிகுந்த சுகாதார சீர்கேட்டு மையமாக காணப்படுகிறது. குறிப்பாக இங்கிருக்கும் பொது சிறுநீர் கழிப்பிடம் சுத்தம் செய்யப்பட்டு பல மாதமான நிலையில், பெரும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பொதுமக்கள் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் குடிநீர் குழாயிலிருந்து சிதறி வெளியேறும் நீர் அங்கிருக்கும் பயணிகள் அமரும் இருக்கையின் அருகில் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் இருக்கையில் அமர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், அவ்விடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்களுக்கான காரணியாக மாறியுள்ளது.

இதுதவிர பேருந்து நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை பெய்யும் பொழுது, தண்ணீர் வெளியேற வசதியின்றி ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. எனவே, இத்தகைய சுகாதார சீர்கேட்டின் அடையாளமாக திகழும் திருச்செங்கோடு பேருந்து நிலையத்தை முறையாக பராமரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.