பாஜக அரசின் எதேச்சதிகாரமும், மதவெறித் தாக்குதலும் உயர்கல்வி நிலையங்களைப் பதம் பார்த்துக்கொண்டுள்ளது. மாணவர் இயக்கங்கள் அதற்கெதிராகத் தொடர்ந்து போராடிவருகின்றன. குறிப்பாக, அடுத்தடுத்த தாக்குதல்களை எதிர்கொண்ட தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகமும் ஏகோபித்த குரலில் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளன. ஜேஎன்யு மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பேரவையின் பொதுச்செயலாளராக இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஸ்ரீகிருஷ்ணா துக்கிராலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக வளாகத்தில் அவரைச் சந்தித்தோம். அவரது நேர்காணல்:-   

*திருமண வீடுகளில் உணவு பரிமாறுதல், சினிமாவில் ஒப்பனை உதவியாளர் என வேலை செய்த நீங்கள், கடும் போராட்டத்திற்குப் பிறகு ஜேஎன்யுமாணவராக உங்கள் வாழ்க்கையைத் தொடங்கி யுள்ளீர்கள். போராட்டம் மிகுந்த உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்…
ஆந்திராவில் நெல்லூருக்கு அருகேயுள்ள ஒரு கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். ஊரும் சேரியுமாகப்பிரிந்து, சாதிப் பாகுபாடுகள் நிலவும் கிராமத்திலேயே எனது பெற்றோர் வசிக்கின்றனர். மாமா, காங்கிரஸ் கட்சியில் செயல்படுகிறார். அவர் எனது படிப்பில் அக்கறைகொண்டார். மேலும், அவரைப் பார்த்து, நமக்கு அரசியல் அவசியமானது என்பதை சிறு வயதிலேயே உணர்ந்தேன். 4 ஆம் வகுப்பு வரை கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் படித்தேன். பிறகு சமூக நலத்துறை பள்ளியில் சேர்க்கப்பட்டேன். முதல் வகுப்பிலிருந்தே விடுதி வாழ்க்கைதான்.

ஹைதராபாத்தில் நிஜாம் கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியில் படித்தபோது அங்கே பல அமைப்புகள் இருந்தன. தேர்தல் நடந்ததில்லை என்றபோதிலும் மாணவர்கள் தங்கள் தேவைகளுக்காக அடிக்கடி போராடுவார்கள். பல மாணவர் இயக்கங்கள் இருந்தன. அங்கே ஏபிவிபியும் கூட இருந்தது. ஆனால், அவர்களின் மதவாத அரசியல் என்னை ஈர்க்கவில்லை. எனவே, இந்திய மாணவர் சங்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்டேன். இந்திய மாண வர் சங்கம் மாணவர் பிரச்சனைகளுக்காகவும், அனைத்து சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடு கிறது. அதன் முழக்கங்கள் என்னை ஈர்த்தன.

ஜே.என்.யுவில் சேர்வதற்கு முன், 7 ஆண்டுகள் இடைவெளியில் 17 விதமான வேலைகளைச் செய்தேன். உயர் கல்வியில் நுழைவதற்கு தேவையான பணம் சேர்க்க வேண்டும். அதற்காக மட்டுமே அந்த வேலைகளில் ஈடுபட்டேன். கடும் முயற்சிகளுக்குப் பின் 2013 ஆம் ஆண்டில் ஜே.என்.யுவில் நுழைந்தேன்.

* உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது, எங்கள் அனிதா நினைவுக்கு வருகிறார். மருத்துவக் கல்விக்கான 12 ஆண்டுப் போராட்டத்தில் மிகச்சிறந்த மதிப்பெண்களைப் பெற்றார். ஆனால், நீட்நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்ட நிலையில் அவரின் கனவு எட்டாமல் போனது. அவர் எதிர்பாராதவகையில் தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் மரணத்தை ஒட்டி தமிழகத்தில் எஸ்.எப்.ஐயும், மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்…

கல்வி ஒரு வணிகமாக மாற்றப்படுகிறது. ஆட்சி யாளர்கள் ஜே.என்.யு போன்ற கல்விநிலையங்களை தாக்குகின்றனர். பாடப்புத்தகத்தை, பாடத்திட்டங் களை மாற்றுகின்றனர். எனவே, அனிதாவின் மரணம் என்பது எதிர்பாராத ஒன்றல்ல. ஒடுக்கப்பட்ட பிரிவினரின் கல்வி வாய்ப்புகள் மீது இந்த அரசு செலுத்திவருகின்ற திட்டமிட்ட தாக்குதல்களின் ஒரு பகுதியே நீட் நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டதும் ஆகும். சமூக நல அடிப்படையிலான கல்வி ஏற்பாடுகளின் பலன் என்ன என்பதை என் சொந்த வாழ்க்கை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகள் என்.ஜி.ஓ வகை யிலானவை, அதிலிருந்து சமூக நல விடுதிப் பள்ளிக்கு மாற்றலானேன். பின் எம்.செட் தேர்வுக்காக நுழைவுத்தேர்வு பயிற்சிக்கும் சென்றிருக்கிறேன். இத்தகைய பயிற்சி மையங்களில் மாணவர்களை ஏ, பி, சி என பிரிவுகளாகப் பிரிப்பார்கள். அதில் முதல் வகுப்பில் மட்டும் கூடுதலாக அக்கறை செலுத்துவார்கள். அப்படித்தான் அதிகமான ரேங்க் பெற முடியும். இப்படி நுழைவுத்தேர்வுகள் ஒரு தொழிலாக ஆகிப்போயிருக்கிறது.  மாணவர்கள் உணர்வற்ற உயிர்களல்ல, ஒவ்வொருவரையும் சமமாக நடத்த வேண்டும். அதில் தவறும்போது, ஏராளமான அனிதாக்களை நாம் இழக்க நேரிடும்.

கல்வி வணிகமாகும்போது, கல்வி தொழிலாகும்போது, ஏழை எளிய மாணவர்கள் துயரத்தில் தள்ளப்படுகின்றனர். அது ஏன் புரிவதில்லை? கல்வி வணிகமும், காவிமயமும் மட்டுமே இந்த அரசின் நோக்கமாக இருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு மிக ஆபத்தானது. தமிழகத்தின் மாணவர்கள் சமூக நீதி ஏற்பாட்டைப் பாதுகாக்க போராடுகின்றனர். அவர்களுக்கு எனது நேரடியான வேண்டுகோள், அரசமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்துள்ள கல்வி உரிமையைப் பாதுகாக்க ஒரு ஒன்றுபட்ட போராட்டம் தேவை.

*ஜே.என்.யுவில் படித்த சேலத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணனின் தற்கொலையை மறக்க முடியாது. உயர் கல்வி நிலையங்களில் சாதி ஒதுக்குதல் ஒரு பிரச்சனையாக இருப்பது உண்மைதான். ஒரு தலித் மாணவரான நீங்கள், சாதி அடிப்படையிலான ஒதுக்குதலை உணர்ந்தீர்களா?
ஆம். எல்லா இடங்களிலும் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும். இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து அதற்கான போராட்டங்களை நடத்து
கிறது. அதே சமயம், இங்கே தேர்தலில் போட்டியிட்டு,
மாணவர் பேரவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்கு இங்கு நிலவுகின்ற அனைவரையும் உள்ளடக்கும் தன்மை
தான் காரணம். அவ்வகையில் மற்ற கல்விநிலை யங்களிலிருந்து ஜே.என்.யு மாறுபட்டது.

* ஜே.என்.யு மாணவர் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 2082 வாக்குகளுடன் ஒரு அமோக வெற்றியைப் பெற்றுள்ளீர்கள். இப்போது உங்கள் உணர்வு எப்படியிருக்கிறது?
இந்த வெற்றி, பொறுப்பை உணர்த்துவதாக உள்ளது. ஜே.என்.யு பல்கலைக் கழகத்தின் கொள்கை
சார் முடிவுகளில் உரிய தலையீடுகளைச் செய்ய வேண்டும். இந்தப் பல்கலைக் கழகத்தின் சமூக உள்ளடக்க குணாம்சத்தையும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும் பாதுகாக்க வேண்டும்.
கடந்த 4 மாதங்களாக மாணவர்ளுக்கு உதவித்தொகைநிறுத்தப்பட்டிருந்தது.  ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்புகளைத் தடுக்க தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன. எனவே அவற்றை முறியடிக்க வேண்டும்.
அதே போல,  விமர்சனக் குரல்கள் ஒடுக்கப்படு
கின்றன. தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, பங்கஜ்
மிஸ்ரா, சமீபத்தில் கெளரி லங்கேஷ் எனப் படுகொலைகள் தொடர்கின்றன. அரசியலமைப்பின் மாண்பு தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதுபோன்ற வைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பும் ஜே.என்.யு வைத் தாக்குவதையும் அவர்கள் செய்துவருகின்றனர். எனவே ஒரு மாணவராக மட்டுமல்ல, இந்தியாவின் குடிமகனாகவும் இவற்றை எதிர்க்கவேண்டியது நம் கடமை.

*ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் கொள்கைகள் மாணவர்களை எவ்வாறு பாதிக்கின்றன?
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா போராடினார். அதற்காகத் துணை வேந்தர் அப்பா ராவால் அவர் தண்டிக்கப் பட்டார். நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டார். தற்கொலைக்குத் தள்ளப்பட்டார். இப்போதும் அப்பாராவ் துணைவேந்தராகத் தொடர்கிறார். நீதி எங்கிருக்கிறது? உயர்கல்வி நிலையங்களில் சாதிப் பாகுபாட்டைத் தடுக்கும் ‘வெமுலா சட்டம்’ வந்துவிட்டதா? …  ரோஹித் வெமுலா பிற்படுத்தப்பட்டவர் என்றே இன்னும் அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். பாஜக ஆட்சிக்கு வரும்போது ‘மினிமம் கவர்மெண்ட், மேக்சிமம் கவர்னன்ஸ்’(குறைந்த அரசாங்கம், அதிகபட்ச நிர்வாகம்) என்றார்கள். ஆனால் இங்கே ‘மேக்சிமம் அட்ராசிட்டீஸ்’ (அதிகபட்ச வன்கொடுமைகள்) என்ற நிலைமைதான் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜே.என்.யு மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை மத்திய அரசு குறைக்கிறது. மாணவர்கள் போராடுவதற்காகப் பயன்படுத்திவந்த இடத்தை, தடை செய்யப்பட்ட பகுதியாக ஆக்கிவிட்டனர். போராடினால் அபராதம் விதிக்கின்றனர். சென்ற ஆண்டு மாணவர் தலைவர் மோஹித் பாண்டேவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்திருக்கின்றனர். எனவே, இந்திய குடிமகனாகவும், ஒரு சாதாரண மாணவராகவும் இந்த நாடு எங்கே செல்கிறது என்ற கவலை எழு கிறது. நாம் அமைதி காப்போமென்றால் ஜனநாயக அமைப்புகளை எப்படி பாதுகாப்பது?

*ஜே.என்.யுவின் சூழலைப் பாதுகாப்பது ஒரு சாதாரண மாணவருக்கும் கூட முக்கியம் என்கிறீர்கள். மாணவர் இயக்கங்களில் இல்லாத வர்கள் ஏன் அதுபற்றி கவலைப்பட வேண்டும்?
நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம், இந்த பல்கலைக் கழகத்தில் நிலவுகின்ற அனைத்து தரப்பு மாணவர்களையும் உள்ளடக்கும் பண்பேயாகும். இங்கே கடந்தகாலத்தில் செயல்பட்ட எஸ்.எப்.ஐ மாணவர்களும், பிற முற்போக்கு மாணவர் இயக்கங்களும் இந்தச் சூழலை ஏற்படுத்தியுள்ளனர். அதனாலேயே என்னால் இங்கே நுழைய முடிந்தது. இந்தப் பல்கலைக்கழ கத்திற்கு ஒரு மாணவனாக நுழைந்தபோது என்னிடம் ஒரே ஒரு ரூபாய் கூடக் கையிருப்பாக இல்லை. ஆனால் இப்போது எனது முதுநிலைக் கல்வியை முடித்துத் தற்போது எம்.பில் படிப்பில் நுழைந்திருக்கிறேன்.

இங்கு வருவதற்கு முன்பாக, ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் சில நாட்கள் படித்தேன். அங்கே கல்வி உதவித்தொகை ரூ.700 கொடுப்பார்கள். ஆனால் ஜே.என்.யுவில் எம்.ஏ மாணவர் களுக்கு ரூ.2000, எம்.பில். மாணவர்களுக்கு ரூ.5000, முனைவர் படிப்புக்கு ரூ.8000 கல்வி உதவித்தொகை தருகின்றனர். ஹாஸ்டல் வாடகை 6 மாதங்களுக்கு ரூ.600 மட்டுமே. இதற்கெல்லாம் காரணம் மாணவர் ஒற்றுமையும், இங்கே நிலவுகின்ற அரசியல் சூழலுமாகும். சாதாரண மாணவர்கள் கூட இங்கேபடிக்க முடியும். பிற்பட்ட மாவட்டங்கள், பெண்கள் என அனைவரும் இடம்பெறத் தக்க சமூக நீதி ஏற்பாடு உள்ளது. நான் எனது ஜே.என்.யு நுழைவுத்தேர்வை தெலுங்கில் எழுதினேன். மாநில மொழிகளில் தேர்வு எழுத முடியும் என்பது மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்க ஏற்பாடாகும். இவற்றையெல்லாம் பாதுகாப்பது ஒவ்வொரு மாணவரின் கடமை.

*உங்கள் வெற்றி, உயர்கல்வி மாணவர்களிடையே வலுப்பெற்றிருக்கும் எதிர்க் குரலைக் காட்டுகிறது. நிறைவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
துணைவேந்தரின் நடவடிக்கைகள் மட்டுமல்ல, மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், புதிய விதி களைத் திணிக்கும் பல்கலைக்கழக மானியக்குழுவும் அதற்குப் பின் இருந்து இயக்கும் மத்திய அரசும் எதிர்க்கப்படவேண்டியவை. இவை அனைத்துக்கும் எதிராக ஒன்றுபட்டு போராடுவோம். மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்துப் போராடும் வரலாறு, ஜே.என்.யுவுக்கு உண்டு. ஜே.என்.யு வில் இட ஒதுக்கீட்டையும், 900க்கும் அதிகமான இடங்களை குறைப்பதையும் செய்துள்ளனர். இவற்றிற்கு எதிராக ஜே.என்.யுவை பாதுகாக்கும் போராட்டத்தில் தொடர்ந்து முன்செல்வோம்.

அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள ஒவ்வொரு உரிமையும் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. கருத்துரிமைக்கு எதிராக ‘தேச விரோதி’ என்ற முத்திரை எழுகிறது. விமர்சனக் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. பெண்களை நோக்கி ஆபாச வசவுகளை வீசும் நபர்கள் ‘பாரத மாதா வாழ்க’ என்கிறார்கள். நமக்கும் பாரத மாதாவின் மீது நேசமிருக்கிறது. ரோஹித் வெமுலாவின் அம்மாவும்,  நஜீப்பின் அம்மாவும், என்னுடைய அம்மாவும் – இவர்களைப் போன்றோரும் பாரதமாதாவின் வடிவங்கள்தான். எங்கள் அம்மாக்களுக்கு நீதி மறுக்கப்படும்போது அது தேசத்திற்கு நீதி மறுக்கப்படுவதாகும்.

வரும் காலங்களில் நமக்கு ஒரு பெரும் கடமையுள்ளது. பாஜக மதவெறியர்களுக்கு எதிராக ஒற்றுமையை உருவாக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில்ஒரு முழக்கத்தை முன்வைத்தோம். அதையே இங்கும் குறிப்பிடு கிறேன்… “தாக்குவது உங்கள் குணமென் றால், எதிர்த்து வீழ்த்துவது எங்கள் குணம்.”

ஜே.என்.யு முன்னாள் மாணவர் ஸ்ருதி தேவபிரகாஷ் உதவியுடன், நேர்காணல்: இரா.சிந்தன்

Leave A Reply