ஒரு கவிதைப் புத்தகத்தை அதன் கவித்துவ அழகிற்காக படிக்கலாம். ஒரு சிறுகதையை அதன் உள்ளடக்கத்திற்காகப் படிக்கலாம். ஒரு நாவலை அதன் உள்ளடக்கச் செறிவை விளக்கும் சொல் ஆளுமைக்காகப் படிக்கலாம். ஆனால் ஒரு கட்டுரைத் தொகுப்பு கவிதைப் புத்தகத்தின் கவித்துவத் தோடும், புதுமையான உள்ளடக்கத் தோடும் ஒரு நாவலின் சொல் ஆளுமை யோடும் வந்திருப்பதை ‘பயங்கரவாதி என புனையப்பட்டேன்’ எனும் தொகுப்பின் மூலம் உணர முடிந்தது.

தில்லி மொகமது ஆமீர்கானால் எழுதப்பட்ட தமிழில் அப்பணசாமி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டதன் வரலாற்று நூல்தான் அந்த மாயாஜாலங்களை நிகழ்த்தியுள்ளது. நூல் முழுவதும் ஒரு மர்மத்தின் வாசம் வீசிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பக்கமும் அது கூடிக்கொண்டே போகிறது. நாம் படித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இதே நூற்றாண்டில் ஒரு இளைஞன் ரத்தமும் சதையுமாய் அனுபவித்து அதன் நம்பகத்தன்மையை நாம் 100 விழுக்காடு உள்வாங்கும் வகையில் இன்றும் தொடரும் புற உலக நிகழ்வுகள் அதற்குள் நம்மைக் கட்டிப்போட்டு விடுகின்றன.

1997ல் இந்தியாவில் மூன்று இடங்களில் குண்டு வெடிக்கிறது. இதைப் பாகிஸ்தானின் சதி என்று அரசு சொல்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு தீவிரவாத அமைப்பு இதற்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறது. பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் முஸ்லிம் மத துவேஷத்தை நாடு முழுவதும் பரவலாக்கிவிடப்பட்டிருந்த நிலையில் தில்லியைச் சேர்ந்த முகமது ஆமிர்கான் உளவுத்துறையினரால் கடத்தப்பட்டு, குண்டுவெடிப்புத் தீவிரவாதியென முத்திரை குத்தப்பட்டு சிறைக்கொட்டடியில் அடைக்கப்படுகிறார். மூளைச்சலவை செய்யும் உபதேசங்கள், உயிர்பிதுங்கும் சித்ரவதைகளுக்கு நடுவில் தன் நிலை உணர்ந்து தன் விடுதலைக்கான வழிவகைகளை ஆராய்ந்துணர்ந்து சட்டத்தின் துணையோடு போராடி இறுதியில் நிரபராதி என வெளியில் வருகிறார் ஆமிர்கான். இடையில் 14 ஆண்டுகள் கடந்திருந்தன.

ஆமிர் மீது குற்றச்சாட்டை புனைவதற்கு உளவுத்துறை 2 மாதகாலம் எடுத்துக்கொண்டது. நேசத்திற்குரிய தன் நாடு தன்மேல் சுமத்திய வீண் பழியை அந்நாட்டு சட்டத்தின் துணைகொண்டே உடைத்தெறிந்த போராளியாய் ஆமிர் வெளிப்படுகிறார். அதற்கான சம்பவங்களும் இந்தப் போலி வழக்கை எதிர்கொள்ள எடுத்தாண்ட சாட்சிகளும் வாதங்களும் இவ்வழக்கில் ஆமிர்கானின் எதிர்நீச்சலை நம்பகத் தன்மையோடு கொண்டு செல்கிறது. மனம் வலிக்க உண்மையின் துணைகொண்டு எழுதிய ஆமிர்கானின் உணர்வுப் போராட்டத்தை நூறு விழுக்காடு நம்பகத் தன்மையோடு தமிழ் வாசகர்களுக்கு மொழி பெயர்த்துத் தருவ
தில் அப்பணசாமி வெற்றி பெற்றிருக்கிறார்.

இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் ஆமிர்கானாக ஒரு முறை வாழ்ந்து பார்க்கலாம். வாசித்து முடித்த பின்னும் ரத்தக்கவுச்சி வீசும் சிறைச்சாலை சித்ரவதைக் கூடம் கண்முன்னே வந்து மருட்டுகிறது. மதவெறி அரசியலின் மனிதாபிமானமற்ற பிற்போக்குத் தனங்களும் பாசிச வெறித்தனங்களும் ஒவ்வொரு பக்கமும் வெடிகுண்டுகளாய் வெடிக்கிறது. அவர் வெளியில் வரும்பொழுது ரூ.60 லட்சம் வழங்க உத்தரவு. வழங்கியதோ ரூ.5.62 லட்சம் தான். இதுவரை காவல் துறையிலிருந்து யாரும் தண்டிக்கப்படவில்லை.17 வழக்குகளில் இருந்த ஆமிர் விடுவிக்கப்படுகிறார். தீவிரவாதமும் மதவெறியும் சாதிவெறியும் தலைவிரித்தாடும் இன்றைய சூழலில்ஆமிர்கான் போல ஒவ்வொருவரும் சட்டத்தோடு போராட முடியுமா? மதவெறி மேலும் மேலும் தீவிரப்பட்டுவரும் இன்றைய காலச் சூழலில் விடுவிக்கப்படாமல் இன்னும் எத்தனை ஆமிர்கான்களோ? ஏகப்பட்ட கேள்விகளை முன்னிறுத்துகிறது இந்நூல். அதோடு இன்றைய அரசுகளின் அபாயகரப் போக்கை மததுவேஷத்தை ஒற்றை வரியில் தலைப்பாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. புத்தகத்தின் மூச்சு முட்டும் போக்கை குறைக்க அங்கங்கே வரும்குடும்ப நிகழ்வுகள் கொஞ்சம் இளைப்பாறச் செய்கிறது.

காத்திருந்து ஆமிரைக் கைப்பிடித்த ஆலியாபோல அத்தனை இடர்பாடுகள் நடுவிலும் ஒரு சில பரிசுகளையும் வாழ்க்கை பொதிந்தே வைத்துள்ளது. இந்நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளிச்சம் தந்துள்ள ‘எதிர்’ வெளியீட்டு நிறுவனத்தை மனம் திறந்து பாராட்டவேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: