சென்னை, செப். 24-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அக்கால கட்டத்தில் அவர் உடல்நிலை குறித்து பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. சர்ச்சைகளை எழுப்பியவர்கள் மீது வதந்தி பரப்பியதாக காவல்துறை வழக்குப் போட்டதுடன், கைதும் செய்தனர்.

முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டார். அப்போது, ஜெயலலிதா மரணம் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களைக் குறிப்பிட்டு, விசாரணை நடத்த வேண்டும் என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். தற்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா மரணம் குறித்து பேசியுள்ளார். அதில் ஜெயலலிதா மருத்துவ மனையில் இருந்த காலத்தில் அவர் உடல்நிலை குறித்து தாங்கள் பொய்யான தகவல்களைத் தெரிவித்ததாகவும், அவரைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் பேசியுள்ளார். மேலும் ஜெயலலிதா கொல்லப்பட்டதாகவும் சந்தேகம் எழுப்பி யுள்ளார்.

ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அப்போது அவரின் பாதுகாப்பு குறித்து மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறைகள் என்ன செய்தன என்ற கேள்வி வருவதுடன் – ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுவந்த இஜட் ப்ளஸ் பாதுகாப்பு யாருடைய உத்தரவின் பேரில் விலக்கிக் கொள்ளப்பட்டது?ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஏன் அமைதிகாத்தார்கள்? அவர்கள் அமைதிகாத்ததன் நோக்கம் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. பதவியில் உள்ள அமைச்சர்கள் பொய்யான தகவல்களைப் பரப்பியதானது, தாங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கும், அரசியலைமைப்புக்கும் விரோதமாக செயல்பட்டதாகும்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில் அமைச்சரக இலாக்காக் கள் மாற்றப்பட்டன. அதிகாரிகள், அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப் பட்டது. அவரது கைரேகையைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்அனுப்பப்பட்டிருந்தது. இப்போது அந்த ஒவ்வொரு முடிவுகளின் மீதும் சந்தேகத்தின் நிழல் படிந்திருக்கிறது.  அவர் மரணமடைந்ததை அறிவித்த இரவிலேயே புதிய அமைச்சரவை பதவியேற்றதுடன், இக்காலகட்டம் முழுவதும் பதவியைக் கைப்பற்றவும், பேரத்திற்காகவும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருகிறது.  எனவே, ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரிக்கப்பட வேண்டியுள்ளதால், நீதிமன்ற வழிகாட்டு தலின் அடிப்படையிலான விசாரணைக் குழு அமைக்கப்படவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. உடனடியாக, பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், விசாரணை நடத்தப்படவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.