கோவை, செப். 24-
கோவை சோமனூர் பகுதியில் பேருந்துநிலைய கட்டடம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, அரசு சார்பில் எவ்வித நிதியுதவியும் வழங்கப்படவில்லை எனக் கூறி அவர்களது உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சோமனூர் பகுதியில் கடந்த 7ம் தேதி பேருந்து நிலைய கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயங்களுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும், காயமடைந்தவர்களை பார்வையிட்ட தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட அதிகாரிகள், காயமடைந்தவர்களுக்கான முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் என உறுதியளித்திருந்தனர்.

இதனிடையே, கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற லதா என்ற கல்லூரி மாணவிக்கு இடது கால் மூட்டு மற்றும் வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் உடல்நிலை தேறிய அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் தெக்கலூர் பகுதியை சேர்ந்த 91 வயதான மாரப்பன் என்பவரும் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முதியவர் மாரப்பன் இதுவரை மருத்துவ செலவாக ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் மருத்துவமனைக்கு செலுத்தியுள்ளனர். மேலும் இரண்டு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் எனவும், அப்போதுதான் மாரப்பனை டிஸ்சார்ஜ் செய்ய முடி
யும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் மாரப்பன் மற்றும் மாணவி லதா ஆகியோரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக தர்ணா போராடத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசே முழு செலவையும் ஏற்கும் என அமைச்சர் உறுதியளித்தும் இதுவரை எவ்வித நிதியுதவியும் கிடைக்கவில்லை.

ஆகவே, அமைச்சர்கள் ஏற்கனவே அறிவித்தபடி எங்களது சிகிச்சை செலவுகள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும். சம்பவம் நடைபெற்ற தினத்தில் மட்டும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டதாகவும், இதுவரை எந்த உதவியும் தங்களுக்கு அரசு சார்பில் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.