சில வாரங்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். எப்போதும் கிரிக்கெட் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் அவர்களது வீட்டில் அன்றைய தினம் புரோ கபடி தொடர் ஓடிக் கொண்டு இருந்தது. அப்படியே அவரிடம் பேச்சு கொடுத்த போது சூப்பர் டேக்கில், சூப்பர் ரைடு என்று புரோ கபடியின் விதிமுறைகள் அனைத்தையும் அள்ளி வீசினார். இதற்கு மேல் இவரிடம் வாயைக் கொடுக்கக் கூடாது என்று அமைதியாக சாப்பிட அமர்ந்து விட்டேன்.

இது போன்று பல வீடுகளிலும் இருக்கலாம். தமிழர்களின் வீர விளையாட்டான கபடி இப்போது அனைவரின் வீடுகளிலும் இடம் பிடிக்கத் தொடங்கி விட்டது என்பதற்கு இது சிறந்த உதாரணம். அதற்கு முக்கிய காரணம் புரோ கபடி தொடர். ஐபிஎல்லுக்கு அடுத்தபடியாக அதிகம் பேர் பார்க்கும் தொடராக புரோ கபடி தொடர் வலம் வந்து கொண்டு இருக்கிறது. பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடர் வரும் செப் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்த ஏழு நாட்களில் தமிழ் தலைவாஸ் அணி 6 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் முறையாக சென்னையில் சர்வதேச அளவிலான கபடி போட்டியைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இளம் வீரர்கள்:
தமிழ்தலைவாஸ் அணியில் உள்ள சர்வதேச வீரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு அணி முழுவதும் இளம் வீரர்கள் நிரம்பி உள்ளனர். அணியில் உள்ள 25 வீரர்களில் 15 வீரர்கள் 15 வயதிற்குட்பட்டவர்கள். இரண்டு பேர் மட்டும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். 25 வீரர்களில் 11 வீரர்கள் மட்டும் இதுவரை புரோ கபடி தொடரில் விளையாடியுள்ளனர். இப்படி இளம் வீரர்களை நம்பிதான் தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் களம் இறங்கி விளையாடிவருகிறது.

அசத்தல் அஜய்:
கடந்த ஆண்டு இந்தியா ஈரான் இடையே நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்தவர்கள் அஜய் தாகூரை மறந்திருக்கமாட்டார்கள். அந்தப் போட்டியில் இவரின் 12 ரைடு பாய்ண்டுகள்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏர் இந்தியாவில் பணியாற்றி வரும் அஜய் தாகூர் புரொபசனல் கபடியில் 14 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். 2016 கபடி உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற இவரை தமிழ் தலைவாஸ் அணி 63 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

மிரட்டல் பிரபஞ்சன்:
சென்னை அணியில் உள்ள தமிழக வீரர்களின் மிக முக்கியமானவர் ரைடர் பிரபஞ்சன். ரைட் இன் பொசிசனில் விளையாடும் பிரபஞ்சன் இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் யூ மும்பா அணிக்காக விளையாடினார். நான்காவது சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி இவரை ஐந்தாவது சீசனுக்காக சென்னை அணி ஏலம் எடுத்தது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இவர் எடுத்துள்ள 67 பாய்ண்டுகளில் 46 பாய்ண்ட்டுகள் இந்த சீசனில் எடுக்கப்பட்டவையாகும். அஜய் தாகூருக்கு அடுத்தபடியாக சென்னை அணியில் ரைட்டில் கலக்குபவர் பிரபஞ்சன் தான்.

கார்னர் கிங்ஸ்:
எதிர் அணியில் இருந்து ரைடு வருபவர்களை உடும்புப் பிடி பிடித்து தப்பிக்கவிடாமல் செய்வது கார்னரில் இருப்பவரின் மிக முக்கியப் பணி. இந்த பணியை ரைட் கார்னரில் அமித் கோடாவும், லெப்ட் கார்னரில் அனில் குமாரும் சிறப்பாக செய்து வருகின்றனர். 21 வயதான அமித் இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் பாட்னா பைரேட்ஸ் அணியில் விளையாடினார். இரண்டாவது சீசனில் இவரின் ஸ்ட்ரைக் ரேட் 51. 21 ஆகும். கடந்த சீசனில் 50 டேக்கில் புள்ளிகளை எடுத்த இரண்டு வீரர்களில் அமித்தும் ஒருவர் ஆவார். சென்ற சீசனில் தான் முதல் முறையாக களம் இறங்கிய இவர் 60 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இவர்களைத் தவிர்த்து விஜின் தங்கதுரை, டாங் லீ, சி. அருண் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பலம்- பலவீனம்:
அஜய் தாகூர், அமித் ஆகிய நட்சத்திர வீரர்கள் இருப்பது மிகப் பெரிய பலம். ஆனால் முழுவதும் இவர்களையே நம்பி இருப்பது தான் மிகப் பெரிய பலவீனம். அருண், தங்க துரை, அனில் குமார் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் இளம் வீரர்கள். இவர்களில் பலர் இப்போது தான் முதல் முதலாக புரோ கபடி தொடரில் விளையாட இருக்கிறார்கள். எனவே நட்சத்திர வீரர்களுக்கு துணையாக நின்று விளையாடும் அளவிற்கு ஓரளவு அனுபவம் கொண்ட வீரர்கள் இல்லாதது பலவீனம்.

பயிற்சியாளர்:
தஞ்சாவூரில் பிறந்து இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத் தந்த பாஸ்கரன்தான் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர். இவர் இந்திய அணிக்காக பல சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2014 ஆம் ஆண்டு இவரது அணியான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி புரோ கபடி கோப்பையை தட்டிச் சென்றது. கடந்த ஆண்டு இவரின் கீழ் செயல்பட்ட புனேரி பால்டன் அணி மூன்றாவது இடத்தைச் தட்டிச் சென்றது. இந்த சீசனில் சென்னை அணியை வழி நடத்தி சென்று கொண்டிருக்கும் இவரின் முதல் இலக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவது தான்.

சென்னை ரசிகர்களும் சரி, தமிழ் ரசிகர்களும் சரி ஒரு விளை யாட்டை உணர்வுப்பூர்வமாக நேசிப்பார்கள். அந்த உணர்ச்சியின் குரல் தான் இப்போது சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்காகவும், நேரு விளையாட்டு மைதானத்தில் சென்னையின் எப்சிக்காகவும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட உணர்ச்சி பூர்வ ரசிகர்களை மடக்கிப் பிடிப்பார்களா தமிழ் தலைவாஸ் அணியினர். பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.