கரூர்,செப்.24-
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளரின் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் 4 ஆவது நாளாக சோதனை நடத்தினர். கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரின் ஜவுளி ஏற்றுமதி, நிதி நிறுவனங்கள், ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கரின் கட்டுமான நிறுவனங்கள், வீடுகள் என பல இடங்களில் கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் 21 ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள ஆர்த்தி ஏ-1 டிரேடர்ஸ் உள்ளிட்ட இடங்களில் 21 ஆம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஒப்பந்ததாரர் சங்கரிடம் விசாரணை நடத்தி அவர் அளித்த தகவல் அடிப்படையில் 2 ஆவது நாள் சோதனை மேற்கொண்டனர். மேலும் சரவணன் என்பவ ருக்கு சொந்தமான திண்டுக்கல் சாலையில் உள்ள நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.

3 நாட்கள் நடத்திய சோதனையில் ரூ.1.2 கோடி உள்ளிட்ட ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள், ரூ.60 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு ஆகியவை கண்டறியப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பலரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்கிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.ஆர்த்தி ஏ- 1 டிரேடர்ஸ் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தொடர்ந்து 4 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் முடிவில் 2 பெட்டிகளில் ஆவணங்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.