மக்களுக்கான தொண்டு சாராத அரசியலில் அரண்மனை ரகசியங்கள் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடியவை. தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பொய்யைப் பற்றிப் பேசியிருப்பது அப்படிப்பட்டதுதான். முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதெல்லாம் உண்மைதானா என்ற ஐயத்தை எழுப்புகிறது அவரது குற்றச்சாட்டு.

மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிடுகிறார், சிரித்துப் பேசுகிறார் என்று முன்பு சொன்னதெல்லாம் பொய் என்று கூறியிருக்கிறார். அப்படிச் சொல்லவைத்தது அப்போது ஜெயலலிதாவின் உற்ற தோழி என்ற நிலையில் மட்டுமே இருந்த சசிகலா என்றும், மருத்துவமனைக்குள் அவரைத் தவிர வேறு யாருமே அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார் சீனிவாசன். மதுரையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மேடையில் இதைக் கூறியவர், இதுவரையில் இதர இடங்களில் நடந்த இதே விழாக்களில் ஏன் எதுவும் சொல்லவில்லை? முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமியோ, அவரோடு இணைந்துகொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமோ ஏன் சொல்லவில்லை?

ஒருவேளை, சசிகலா அரசுத் தலைமைக்கு ஆசைப்படாமல் கட்சித் தலைமையோடு நின்றிருந்தால் அமைச்சரிடமிருந்து இந்த ‘உண்மைகள்’ வெளிவந்திருக்குமா? மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவே இல்லையெனில், ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை என அறிந்ததெப்படி? அமைச்சர் இவ்வாறு பேசிய பிறகு, தன்னிடம் உள்ள சிகிச்சைக்கான காணொளிப் பதிவு ‘உரிய நேரத்தில்’ வெளியிடப்படும் என்கிறார் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்ட தினகரன். உண்மையிலேயே அப்படியொரு சாட்சியம் இருக்குமானால் அதை ஏன் இதுவரையில் வெளியிடவில்லை? அந்த ‘உரிய நேரம்’ எது?

அன்றைக்கு சசிகலாவோடு சேர்ந்து சொன்னது பொய்யா? அல்லது இன்றைக்கு சசிகலா அணியை ஓரங்கட்டிய பிறகு சொல்வது பொய்யா? ஊடகங்களாலும் ஊடுருவ முடியாத படி தடைகள் எழுப்பப்பட்ட அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் செய்திக்குறிப்புகள் பொய்யா? லண்டன் மருத்துவர் செய்தியாளர் களிடம் சான்றளித்தது பொய்யா? இந்தப்பொய் மட்டும்தானா, வேறு பொய்களும் உண்டா? இக்கேள்விகளுக்கான விடை, முதலமைச்சர் அறிவித்த விசாரணைக் குழுவிடமிருந்து வரக்கூடும்.

ஆனால், குழுவை அமைப்பதற்கானஎந்த நடவடிக்கையையும் முதலமைச்சர் எடுக்க வில்லையே! இதையொரு நிபந்தனை யாக முன்வைத்ததாகக் கூறும் துணை முதலமைச்சரும் அதை வலியுறுத்துவதாகத் தெரிய வில்லையே! இவர்களை நம்ப முடியாது என்பதால், நீதிமன்றமே பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைத்தால்தான் உண்டு. அமைச்சர் மன்னிப்புக் கோரியிருந்தாலும், இவ்வளவு பெரியபொய்யை அதிமுக-வின் எளிய உறுப்பினர் களோ பொதுமக்களோ எளிதாக மறந்து மன்னித்துவிடமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.

Leave A Reply

%d bloggers like this: