தா.பாண்டியன், சிபிஐ தேசியக் கவுன்சில் உறுப்பினர்.
பாரதியார், 1917 இல் அதாவது ரஷ்யாவில் ஜார் மன்னனை தூக்கியெறிந்த புரட்சி நடந்தபோது, புதுச்சேரியிலே அரசியல் அகதியாக இருந்தார். அங்கு ஆசிரமம் அமைத்து தங்கியிருந்த அரவிந்தரோடு அடிக்கடி சந்திப்பது வழக்கம். அரவிந்தரோடு துணையாக பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒரு அம்மையார் ( பிளாசி ராக்கேல் மி) இருந்தார்.
அவர் தான் ஆசிரமத்தை நிறுவியவர். அந்த அம்மையாருக்கு பிரெஞ்சு நாட்டு பத்திரிகைகள் வரும். இந்தியாவில் வெள்ளையர் ஆட்சியும் புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியும் நடந்ததை அறிவோம். புதுச்சேரிக்கு வரும் பத்திரிகைகளில் உலகச் செய்திகள் அனைத்தும் வரும். பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்தும் கட்டுரைகள் வரும். பிரெஞ்சு நாட்டு எழுத்தாளர்கள் பெரும்பாலும் முற்போக்காளர்களாகவே இருந்தனர்.
எனவே தான் இந்தியாவில் பிற மாநில மக்களால், ரஷ்யப் புரட்சியை பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லை. இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு பாரதி புதுச்சேரியில் தங்கிய காரணத்தினால், பிரெஞ்சு பத்திரிகைகள் மூலம் நடைபெறும் செய்திகளை தெரிந்து கொண்டார். எனவே தான் அவர் நடத்திய பத்திரிகைகளில் முதலில் கிழக்கில் இருந்து பறந்து வந்த காக்கை ஒன்று ரஷ்யாவில் நடைபெற்ற மகத்தான புரட்சியை மகிழ்ச்சியோடு கூறியதாக ஒரு பாட்டு எழுதினார்.
ஏனெனில் பெயர் தேதிபோட்டு எழுதினால் தணிக்கை என்ற பெயரால் வெள்ளை ஓநாய்கள் அச்செய்தியை சாகடித்திருப்பார்கள். எனவே தான் காக்கை கதை மூலம் நடந்து முடிந்த ரஷ்யப் புரட்சியைப் பற்றிய செய்தி யுகப்புரட்சி என்று அறிவித்தார். சில நாட்களுக்குப் பிறகு ” ஆகாயென்றெழுந்தது பார் யுகப்புரட்சி ” என்று எழுதினார். இந்தப் பகுதிப் பாடல் எழுதப்பட்ட போது அருகில் இருந்தவர் பாரதிதாசனார். அவர் தனது நினைவுக்குறிப்பில் இந்தப் பாட்டின் ஒவ்வொரு வரியை எழுதும்போதும் பாரதி எழுந்து ஒரு மாணவன் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பதுபோல் குதித்தபின் தான் அடுத்த வரியை எழுதுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பாட்டின் மூலம் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு யுகப்புரட்சிப் பற்றி செய்தியே தெரிந்தது.
ரஷ்யாவைப் பற்றி அமைந்த புதிய ஆட்சியைப் பற்றி பொய்புளுகுகளையே வெள்ளை அரசுக்கு வெஞ்சாமரம் வீசியவர்கள் எழுதி வந்தனர். அப்போது பொதுவுடைமைப் பற்றி பேசவோ அல்லது இவர்கள் சொல்வதுபோல் அநியாயம் நடக்கவில்லை என்று எழுதவோ கம்யூனிஸ்ட் கட்சி இல்லை.ஆனால் அதுப்பற்றி தெரிந்திருந்த ம.சிங்காரவேலர், சர்க்கரைச் செட்டியார் போன்றோர் இருந்தனர்.
ஆனால் செய்தியைப் பரப்பியவர் பாரதியார் தான். அவர் தான் லெனினையும் அறிமுகம் செய்யும்போது ” கற்றறிந்த ஞானி கடவுளையே நேர் ஆவான் ” என்று வர்ணித்தார். பிறகு புரட்சியால் ஏற்பட்ட மாற்றத்தையும் விவரித்தார்.
ரஷ்யாவைப் பற்றிய அவதூறுகளை மறுத்த போது, ” கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு, இவர்கள் புளுகு எத்தனை மணிநேரம் ” என எழுதினார்.இதன் பிறகு பசியோடு, பட்டினியோடு திருவல்லிக்கேணி வந்து சேர்ந்த பாரதியார்
” முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை
-வாழ்க!”
என்றப் பாடலை எழுதினார்.
சென்னை கடற்கரையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டமொன்று நடைபெற்றது. மெலிந்த உடலோடு கடற்கரை மணலில் கேட்போர் கூட்டத்திற்குள் அமர்ந்திருந்தார் பாரதி. மேடையில் பேச வந்தவர்கள் ஆங்கிலத்தில் தான் பேசக் கூடியவர்கள். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் தெலுங்கு பேசும் தேசியவாதிகள். அவர்கள் பாரதியாரைப் பார்த்தவுடன் கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்று ஒருபாட்டுப் பாடுங்கள் என்றார்களாம்.
பாரதியார், என் பாட்டு பொதுடைமை பற்றியது அதை வரவேற்றுப் பாடப்போகிறேன். பாடலாமா எனக்கேட்டாராம். அவர்கள் அனுமதியோடு, பல கையில் வலதுகையால் தட்டிக்கொண்டே,
” முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை
-வாழ்க!”
என்ற பாடலை உரத்த குரலில் பாடினாராம். மக்கள் மீண்டும் பாடச் சொல்லவும் இரண்டு முறை பாடினாராம்.
நலிந்திருந்த காலத்திலும் அவருடைய குரல் கம்பீரமாக கேட்டது என்று வா.ரா.பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.புரட்சிப்பற்றியும், லெனினைப் பற்றியும் இந்திய மக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி பிறப்பதற்கு முன்பே முழக்கமிட்டவர் தான் அமரக் கவிஞர் பாரதியார். அவரை கம்யூனிஸ்ட்டுகளின் முன்னோடி என்று சொல்லலாம்.அவர் உரைநடை கட்டுரை ஒன்றில் எழுதும்போது
சமத்துவத்திற்கும் நியாயத்திற்கும் போராடும் இந்தப் பொதுவுடைமைக் கட்சி ஒரு நாட்டில் வெற்றியே பெற்று விட்டது. வேறு சில நாடுகளில் தீவிரமாக போராடி வருகிறது.
ஆனால் இந்தியாவில் இன்னும் தோன்றாமல் இருப்பது வேதனையை தருகிறது. விரைவில் அக்கட்சி அமையும் என்று நம்புகிறேன் என்றும் எழுதியுள்ளார்.
அதேப் போல ” முப்பது கோடி
சங்கம் பாடலில்
இந்தியா உலகிற் களிக்கும்
-ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்
– வாழ்க!”
என்று எழுதி முடித்திருப்பது அவருடைய தணியாத வேட்கையைக் காட்டுகிறது.
அத்துடன் அவரது இறுதி லட்சிய மூச்சும் அதுதான் என்பதை காட்டுகிறது.
எனவே கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமலேயே கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மறைந்தவர் தான் அமர கவிஞர் பாரதியார்.
நன்றி: ஜனசக்தி(செப்.17)

Leave a Reply

You must be logged in to post a comment.