பெங்களூரு;
தமிழக அமைச்சர்களை, தலையாட்டி பொம்மைகளாக மாற்றி ஆட்டுவிப்பது பாஜக-தான் என்று முதன்முறையாக அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

‘ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ளவும், வருமான வரி ரெய்டுக்குப் பயந்தும்தான் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் பாஜக சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறார்கள்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில், “அவரைச் சந்தித்ததாகவும், அவர் இட்லி சாப்பிடுவதாகவும் கூறிய தகவல்கள் முழுவதும் பொய்” என்றும், “அந்த பொய்களை சொன்னதற்காக மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்” என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்ட மதுரைப் பொதுக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருந்தார்.

“ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் அவரை நேரில் பார்க்கவில்லை; எங்களை பார்க்க சசிகலா குடும்பத்தினர் விடவில்லை” என்றும் குற்றம்சாட்டிய சீனிவாசன், “கட்சியின் ரகசியத்தை காப்பாற்றவேண்டும் என்பதற்காகத்தான்; ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம்” என்று கூறி இரண்டு கைகளையும் உயர்த்தி மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையம், விரைவில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டார்.
“ஜெயலலிதா இயற்கையாக மரணம் அடையவில்லை; இயற்கையாக மரணம் அடைந்தது போல எல்லோரையும் நம்ப வைத்து, உண்மையில் ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்திருக்கிறார்கள்” என்று ஏற்கெனவே திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியிருந்தார்.

சசிகலா – டிடிவி தினகரன் குடும்பத்தினருக்கு எதிராக அடுத்தடுத்து சீனிவாசன் வைத்துவரும் குற்றச்சாட்டுக்கள், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.டிடிவி தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேருடன், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் நிலையில், அவரிடம் சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, “சீனிவாசன் வயதில் மூத்தவர்; அவரை விமர்சிக்க நான் விரும்பவில்லை; அவர்களைப் போல் தரம் தாழ்ந்து பேசவும் விரும்பவில்லை” என்று குறிப்பிட்ட தினகரன், “பல ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் பதவியில் அவர் இருக்கிறார்; அதை தக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே, தற்போது ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை என பேசுகிறார்; அவர் பேசும் கருத்துக்கள் முரணானது” என்று தெரிவித்தார்.“நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் எடப்பாடி ஆட்சி கவிழும் என்ற பயத்தில் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்கிறார்கள்; நாங்கள் அதிமுக என்ற கட்சியை காப்பாற்றப் போராடுகிறோம்; ஆனால் அவர்கள் பதவியைக் காப்பாற்றப் போராடுகிறார்கள்”என்று சாடிய தினகரன், “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சிசிடிவி கட்சிகள் தங்களிடம் உள்ளதாகவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடந்தால் அந்தக் காட்சிகளை அளிப்போம்; எனவே, விசாரணை ஆணையத்தை பற்றி எங்களுக்கு பயம் இல்லை;

சரியான நேரத்தில் நாங்கள் சிசிடிவி காட்சிகளை வெளியிடுவோம்” என்றும் பதிலளித்தார்.
“அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பிறகு ஜெயலலிதாவை சந்திக்க சசிகலாவையே கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை; இதனால் கடைசி 65 நாட்களாக சசிகலாவும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை; எப்போதாவது 10 நிமிடம் நேரம் கொடுப்பார்கள்; அப்போது மட்டுமே சசிகலா ஜெயலலிதாவை பார்த்து விட்டு வந்தார்” என்ற புதிய தகவலையும் தினகரன் வெளியிட்டார்.

பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக அனைத்து அமைச்சர்களும் எதையாவது பேசிக் கொண்டிருப்பதாக மீண்டும் சாடிய தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேகர் ரெட்டியுடன் கைகோர்த்துக் கொண்டு ஏராளமான ஊழல்களைச் செய்துள்ள நிலையில், அதுதொடர்பாக வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.“எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுக்கு பச்சைத் துரோகம் செய்துவிட்டார்; எடப்பாடியும், ஓ. பன்னீர்செல்வமும் சேகர் ரெட்டியுடன் தொடர்புடையவர்கள்; எடப்பாடியின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு அவரது மகனும், அவரது சம்பந்தியும் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து ஏராளமான முறைகேடுகளில் சிக்கியுள்ளனர்;

இது சேகர் ரெட்டி குறித்து வைத்துள்ள டைரியில் உள்ளது; இதன்மூலம் எடப்பாடி குடும்பத்தினரும், ஓ. பன்னீர்செல்வமும் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்; அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டும் நடந்தது; இந்த முறைகேடுகளுக்கும், ரெய்டுக்கும் பயந்து கொண்டுதான் பாஜக சொல்வதை கேட்டுக் கொண்டு இவர்கள் தலையாட்டி வருகின்றனர்” என்று தினகரன் கூறினார்.

ஊழல் பேர்வழிகளாக உள்ள தமிழக அமைச்சர்களை வருமான வரித்துறையைக் காட்டி பாஜக, தங்களின் கைப்பாவையாக மாற்றி வைத்துள்ளது என்று எதிர்க்கட்சிகளும், அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், டிடிவி தினகரன் அதுபற்றி வாய் திறக்காமலேயே சமாளித்து வந்தார். செய்தியாளர்கள் கேட்கும்போது கூட, ‘யார் தலையீடு இருக்கிறது என்று நீங்கள் சொல்லுங்கள்?’ கேள்வியை திருப்பிப் போட்டு பதிலளித்து வந்தார். ஆனால், முதன்முறையாக பாஜகதான் தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களை ஆட்டுவிக்கிறது என்பதை வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: