அடிக்கடி பேச்சில் அடிபடும் அந்த ஒன்றரைக் கோடித் தொண்டர்களும் … இந்தப் பேச்சை எப்படி எளிதாகக் கடந்து செல்கிறார்கள் என்று தெரியவில்லை.
அவர் பெயர் திண்டுக்கல் சீனிவாசனாம். அமைச்சராக இருக்கிறார். கொள்ளையடிப்பதைத் தவிற வேறென்ன கற்றுவைத்திருப்பார்கள் இவர்களெல்லாம்? என்று சந்தேகத்தோடு இருந்துவந்தேன். அவர்கள் நிறையவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
நீங்களும் கேட்டீர்களா? … இன்னொரு முறை கேட்டுப்பாருங்கள்.

அவர் மன்னிப்புக் கோருகிறார். ஜெயா மரணம் குறித்து தமக்கு எதுவுமே தெரியாது. தமக்கு மட்டுமல்ல சக அமைச்சர்கள் யாருக்கும் தெரியாது என்கிறார்.
மேலும் அவர் சொல்வதைக் கேட்டீர்களானால், ‘பிரதமர் நரேந்திர மோடி வருவதாகச் சொன்னார்கள். ஆனால் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், ஆளுநர் (அவர் மொழியில் தளபதி), காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி என எல்லோருமே மருத்துவர் அரையோடு நின்று திரும்பினார்கள் என்கிறார். மேலும் போகிற போக்கில் ஜெயலலிதா கொல்லப்பட்டார் என்கிறார். கட்சி கட்டுப்பாட்டுக்காக பொய் சொன்னதாக சால்ஜாப்பு சொல்கிறார்.
ஜெயலலிதா தன் வாழ்நாளில் ஒரேயொரு உண்மைத் தொண்டனைக் கூட சம்பாதிக்கவில்லை போலிருக்கிறது.
அதிகார மமதையில் செயல்பட்டவர்தான். இந்தப் பொய்யர்களையும், ஊழல்வாதிகளையும் அவரே உருவாக்கினார். மோடியிடம் நட்பு பாராட்டி வளர்த்தார். ஆம், ஆனாலும் அவர்பற்றி என்ன கவலை என்று இருக்க முடியாது. அவர் வெறும் ஜெயாவாகச் சாகவில்லை – மாநிலத்தின் முதல்வராகச் செத்திருக்கிறார். சாவே மர்மமானது என்று அமைச்சர்கள் பேசுகிறார்கள். தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று சாதிக்கிறார்கள். மத்திய நிதியமைச்சரும், பிரதமரும், ஆளுநரும் கூட தெரிந்தே அவரை பாதுகாக்கத் தவறியதாகச் சொல்கிறார்கள்.
இதன் பொருள் … இந்த நாட்டின் உயர் பதவியில் உள்ள முதல்வர்களின் உயிரைக் கூட பாதுகாக்கும் லட்சணத்தில் இல்லை மோடி அரசு. அமைச்சர்கள் விழாக்களில் பேசிக் கொண்டு திரிகிறார்கள். அப்படி நடந்திருந்தால், அந்த நொடியே ஆட்சி செலுத்துகிற திறனை மாநில அரசாங்கம் இழந்துவிட்டது. இவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படவேண்டியவர்கள் மட்டும் அல்ல சிறையிலடைக்கப்படவேண்டியவர்கள்.
அருண் ஜேட்லியும், வெங்கய்யா நாயிடுவும், ஆளுநர் வித்தியாசாகரும், மத்திய மாநில உளவுத்துறைகளும் – இந்தக் கும்பலின் பெருந்தலைவனும் கூண்டோடு கைது செய்யப்படவேண்டும்.
நாமெல்லாம் காலசாட்சியாக இவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதே காலகட்டத்தில் செத்துப்போன நூற்றுக்கணக்கான விவசாயிகள், அனிதா உள்ளிட்ட மாணவியர் – ஆன்மாக்களே நம்மை உலுக்கும். அந்த பரிதாப ஆன்மா … செத்தபிறகும் குற்றவாளியென தீர்ப்புப் பெற்ற ஆன்மா. இப்போது, இந்தப் பொய்யர்களின் பெருங்கூட்டத்திற்கா தலைவராய் இருந்தீர் என்ற காரணத்துக்காக நம்மை உச்சுக் கொட்ட வைக்கிறது.
அவர் ஆன்மாவாக்கப்பட்டார். இப்போது மாநில உரிமைகளை ஐசியூவில் அனுமதித்திருக்கிறார்கள். குடிமக்களை ‘இட்டிலி’ சாப்பிடச் சொல்கிறார்கள். தொடர்கிறது பொய்யர்களின் ஆட்சி. தலைமேட்டில் குழவிக்கல்லோடு நிற்கிறார்கள் பாஜக கொலைபாதகர்களும், அதிமுக பொய்யர்களும் கைகோர்த்தபடி.

  • Ra Sindhan

Leave a Reply

You must be logged in to post a comment.