கொச்சி;
தெற்காசிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கொச்சியில் துவக்கி வைத்தார்.
தெற்காசிய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி கட்சிகளின் மாநாடு கொச்சியில் உள்ள போல்காட்டி பாலஸில் இன்று துவங்கியது. துவக்கி நிகழச்சிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமை வகித்தார். 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
சாரக் நாடுகளில் உள்ள மக்கள் எதிர் கொண்டு வரும் பிரச்சனைகள் குறித்தும், நாடுகளுக்கிடையே உள்ள உறவுகள் குறித்தும் மாநாடு விவாதிக்க உள்ளது. இந்த நாடுகள் சந்திக்கும் சமூக பதற்றம், தேசிய முழக்கங்கள், பிரிவினைகள் போன்ற மிக முக்கய பிரச்சனைகளும் விவாதிக்கப்பட உள்ளன. இதுபோன்ற பிரச்சனைகளின் மீது அந்தந்த தளங்களில் உள்ள கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ளவும், உரிய ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ளவும் உதவும் வயைில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.
வங்காளதேசம், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, போன்ற நாடுகளின் பிரதிநிதிகளுடன், இந்தியாவில் உள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து வரவேண்டிய பிரதிநிதிகளுக்கு விசா இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்பது உறதியாகி உள்ளது. வெளிநாடுகளிலிருந்து 13 பிரதிநிதிகளும், சிபிஐஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் 11 பேரும், சிபிஐ பொதுச்செயலாளர், தேசிய செயலாளர், தேசிய கட்சிப்பள்ளியின் முதல்வர் ஆகிய 3 பேரும் பிரதிநிதிகளான மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். சார்க் நாடுகள் தமக்குள் கூடிப்பேசுவதும், உச்சிமாநாடுகளை நடத்துவதும் வழக்கம். ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக அதுபோன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை. சார்க் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறாத நிலையில் இந்த நாடுகளில் உள்ள சாதாரண மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். இந்த பின்னணியில் தெற்காசிய தொழிலாளி வர்க்க கட்சிகளின் மாநாட்டை சிபிஐஎம் நடத்துகிறது. மாநாட்டின் நிறைவையொட்டி
நாளை மாலை செம்படை பேரணி கொச்சி ராஜேந்திரா திடலிலிருந்து நடைபெறுகிறது. மரைன்டிரைவில் நடைபெறும் பொதுமாநாட்டை சீத்தாராம் யெச்சூரி துவக்கி வைக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.