திருநெல்வேலி;
குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மழைபெய்யாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. ஆனாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
குற்றாலத்தில் கடந்தவாரம் பெய்த கன மழை காரணமாக அனைத்து அருவிகளிலும்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இரண்டு நாட்கள் நீடித்தது. அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து கன மழை காரணமாக அருவிகளில்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மழை பெய்யவில்லை. இதனால் நாளுக்கு நாள்அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.
மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் மிதமாகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் 4 கிளைகளில் மிதமாக தண்ணீர் கொட்டுகிறது. பழையகுற்றால அருவியில் குறைவாக தண்ணீர் விழுகிறது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது.
அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. தற்போது பள்ளிகளில் காலாண்டுத்தேர்வு முடிந்து விடுமுறை துவங்கி விட்டது. இதனால் வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்துள்ளது.
மேலும் நவராத்திரி திருவிழா துவங்கியதால் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் தினமும் காலை, மாலை நேரங்களில்; குற்றாலம் அருவியில் புனித நீராடி செல்வது வழக்கமாக இருக்கிறது. கேரள மாநிலம் தென்மலை அருகே பாலருவி, அச்சன்கோவில் அருகே கும்பாவுருட்டி அருவி, மணலாறு அருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து தாராளமாக இருக்கிறது. இதனால் இங்கும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.