நாமக்கல், செப். 22-
நாமக்கல்லில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவன் விஸ்வேஸ்வரனின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அவ்வமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ப.ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதிக்குட்பட்ட சித்தம்புண்டி கிராமத்தை சேர்ந்த சின்னராசு என்பவரின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன். விட்டம்பாளையம் அரசு பள்ளி விடுதியில் தங்கி 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதியன்று கிரிக்கெட் விளையாடும் பொழுது, குப்புசாமி என்ற ஆசிரியரின் கையிலிருந்த கிரிக்கெட் மட்டை நழுவி மாணவன் விஸ்வேஸ்வரன் மீது தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாணவன் விஸ்வேஸ்வரன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து ஆசிரியர் குப்புசாமி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட தலித் அருந்ததியினர் குடும்பத்தை சார்ந்த விஸ்வேஸ்வரன் குடும்பத்திற்கு வன் கொடுமை விதிகளின் படி நிதி உதவி கிடைக்கும். இருப்பினும் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த விஸ்வேஸ்வரன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி
வழங்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாமக்கல் மாவட்ட குழுவின் சார்பில் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: