கோவை, செப்.22-
துப்புரவு பணியாளர்களின் சம்பளத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய உத்தரவிட்டார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் தலைமையில் வெள்ளியன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வின்போது பள்ளி, கல்லூரிகளில் இடஓதுக்கீடு, பஞ்சமி நிலம், துப்புரவு பணியாளர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஆணைய துணை தலைவர் முருகன் கூறுகையில்,கடந்த ஜூன் மாதம் கோவையில் நடைபெற்ற ஆய்வின் அடிப்படையில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டம் முழுவதும் 348.85 ஏக்கர் பஞ்சமி நிலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலம் தொடர்பாக 60 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சமி நிலங்கள் இருப்பது தொடர்பான ஆவணங்கள் யாராவது அளித்தால் அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தனியார் பள்ளி இட ஒதுக்கீட்டு தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 12 சதவிகிதமாக இருந்த ஒதுக்கீடு, 19 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கான அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும் என மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மீறும் ஒப்பந்ததாரர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தார். மேலும், அரசாணை 92ஐ பின்பற்றாத கல்லூரி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், கோவை மாநகராட்சியில் தண்ணீர் வரி பிரச்சனையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.