திருப்பூர், செப்.22-
திருப்பூர் செல்லம்நகர் பிரிவில் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடை நீண்ட தொடர் போராட்டத்தின் விளைவாக நிரந்தரமாக மூடப்பட்டது. இதையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருப்பூர் செல்லம்நகர் பிரிவில் பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடை எண் 1978 அமைந்திருந்தது. கேவி ஆர் நகர் சாலையில் தனியார் பள்ளி உள்பட சுற்று வட்டாரத்தில் ஏராளமான பனியன் தொழிற்சாலைகள் உள்ளன. தொழிலாளர் அடர்த்தியாக வசிக்கும் பகுதியாகவும் உள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண் தொழிலாளர்கள், முதியோர் என பலதரப்பினரும் அன்றாடம் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பயணம் செய்து வருகின்றனர். ஆனால் மேற்படி மதுபானக் கடையில் குடிக்க வரும் மதுபிரியர்களால் இவர்களுக்கு மிகப்பெரும் இன்னல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் மேற்படி கடையை இங்கிருந்து அகற்ற வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தொடர்ச்சியாக பல கட்டப் போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டத்தின் விளைவாக இந்த கடையை அகற்ற வேண்டிய கட்டாயம் அரசு நிர்வாகத்துக்கு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக மதுபானக் கடை மூடப்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை மாதர் சங்கத்தினர் இப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததை அடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: