சென்னை, செப். 22 –
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.கருப்பையா காலமானார். அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், எம்.பி., ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரா.முத்தரசன் இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான தோழர்.ஆர்.கருப்பையா வெள்ளியன்று (22.09.2017) காலை 10 மணிக்கு காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போதைய கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் ராமசாமிபிள்ளை – செல்லத்தம்மாள் தம்பதியரின் மகனாக 1926 ஆகஸ்ட் 23 ஆம் தேதி பிறந்தவர் தோழர்.ஆர்.கருப்பையா. பள்ளிப்படிப்பை முடித்து ரயில்வே நிர்வாகத்தில் எழுத்தராகப் பணியாற்றிய காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகளில் இணைந்து செயல்படத் தொடங்கியவர். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதால் தலைமறைவாக செயல்பட்ட தலைவர்களோடு இடைவிடா தொடர்பில் இருந்து கட்சி, தொழிற்சங்கப் பணிகளை செய்துவந்தவர்.

கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சியைத் தடுக்க ஆட்சியாளர்கள் புனைந்துபோட்ட திருச்சி சதிவழக்கில் கைது செய்யப்பட்டவர். பலமுறை சிறைதண்டனை அனுபவித்தவர். 1957 ஆம் ஆண்டில் கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டவர். பெட்டவாய்த் தலை சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களை சங்க அமைப்பில் அணிதிரட்டியவர். இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக உள்ள டி.கே.ரங்கராஜன் போன்றவர்களை கட்சி வாழ்க்கையில் இணைத்தவர். 1980 ஆம் ஆண்டு குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். சட்டமன்றக் குழு துணைத் தலைவராக பணிபுரிந்தவர்.

1983 முதல் 1988 வரையிலும் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராகவும் பணியாற்றியவர். கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர், தொழிற்சங்க அமைப்பில் மாநில செயலாளர், அரசு அமைத்த பல்வேறு குழுக்களில் உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணிபுரிந்தவர். சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். தோழர். ஆர்.கருப்பையாவிற்கு ஆர்.கே.சரஸ்வதி என்ற மனைவியும், 5 மகன்கள் மற்றும் 2 மகள்களும் உள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சி நெறிகளோடு பொதுவாழ்வை மேற்கொண்ட தோழர்.ஆர்.கருப்பையாவின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது. தோழர்.ஆர்.கருப்பையாவின் இறுதி நிகழ்ச்சி 23.09.2017 அன்று காலையில் குளித்தலையில் நடைபெறும். சிபிஎம் இரங்கல் தோழர் கருப்பையா மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.