===பி.கிருஷ்ண பிரசாத்===
கூட்டுறவு என்பது ஒரு சமூகத்தால் அமைக்கப்பட்டு இயங்கும் நிறுவனம். உலகில் கூட்டுறவு என்பது தொழிலாளிகளின் மிக பழமையான நிறுவன அமைப்பு. தொழிலாளிகளின் கூட்டு செயல்பாடு, ஒற்றுமை, சக மக்களுக்கான உதவி மற்றும் முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளிகளின் ஒன்றுபட்ட செயல்பாட்டின் வெளிப்பாடே கூட்டுறவு.

உலகில் ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட அரசியல் பொருளாதார நிலைமைக்கேற்ப சமூக உற்பத்தியில் கூட்டுறவு முறை பங்காற்றுகிறது. இந்த கூட்டுறவு முறை பல்வேறு சமூக அமைப்பில் ஒரு மைய செயல்பாடாக விளங்குவது மட்டுமன்றி அது உற்பத்தி பயனை அடைவதற்கு ஒரு நெம்பு கோலாகவும் சமூக செயல்பாட்டின் கருவாகவும் விளங்கி உற்பத்தித் திறனை பெருக்கி ஒழுங்கு முறையற்ற லாப வெறி நோக்கினை தடுக்கிறது.

ஆனால் முதலாளித்துவ கட்டமைப்பில் கூட்டுறவு, அரசால் நடத்தப்பட்டு அந்த முதலாளித்துவம் வளர்வதற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்படுகிறது. எனவே அது முதலாளித்துவத்திற்கு சாதகமாக செயல்படுவது மட்டுமின்றி முதலாளித்துவத்தின் கேடுகளான ஊழல், ஆணவபோக்கு, தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளை பற்றி ஒரு உணர்வற்ற போக்கினைதான் கொண்டிருக்கும்.

சமூக கூட்டுறவு
ஒரு புறம் அரசின் தலையீடு, கூட்டுறவை நடத்தும் உயர் அதிகாரிகள் மறுபுறம் கீழிருந்து விவசாயிகளும், தொழிலாளிகளும் ஒன்றுபட்ட முயற்சியில் முறைப்படுத்தப்பட்ட சமூக கூட்டுறவாக செயல்படுத்த முயல வேண்டும். இத்தகைய சமூக கூட்டுறவு அமைப்பு முதலாளித்துவத்தில் அதன் சுரண்டலை எதிர்த்து நடத்தப்படும் வர்க்கப் போராட்டத்திற்கு சாதகமாக முடியும். இத்தகைய சமூக கூட்டுறவு அரசு தலையீட்டிலிருந்தும், அதிகாரப் போக்கிலிருந்தும், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்டமைப்பிலிருந்து விடுபட சாதகமாக அமையும். இத்தகைய செயல்பாடு பிற்காலத்தில் விவசாயிகள், தொழிலாளிகள் உற்பத்தியினை ஜனநாயகமாக்கியும் நிர்வகித்தும் எல்லோரும் சமம் என்ற ஒரு அரச கட்டமைப்புக்கு ஊக்கமளிக்கும்.

கேரளாவில் வயநாடு பகுதியில் பிரம்மகிரி வளர்ச்சித் திட்டம் 1999-இல் ஒரு சமூக கூட்டுறவாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த கூட்டுறவு ஒரு பிரம்மாண்டமான ரூ.24கோடி திட்டத்தினை உருவாக்கி இன்று அது நவீன இறைச்சி வெட்டும் ஆலையாகவும், அதன் பொருட்களை விற்கும் ஒரு சந்தை வலைப் பின்னலை உருவாக்கியும், விவசாயிகளுக்கு இது ஒரு சிறிய சூப்பர் மார்க்கெட்டாகவும் விளங்குகிறது. இன்று அது விவசாயிகளாலும் தொழிலாளிகளாலும் ஏழை முதல் பணக்காரர்கள் வரை உணவளித்துக் கொண்டிருக்கிறது.

கூட்டு விவசாய முறை
பல மாநிலங்களில் தரிசு நிலங்கள் விவசாயம் செய்ய பயனில்லை என்றோ அல்லது வேறு தொழில்களுக்கு விடப்பட்டதாலோ அப்படியே வீணாகக் கிடக்கிறது. சில மாநிலங்களில் நில சட்டங்கள் காரணங்களால் தரிசு நிலங்களை பயன்படுத்துவது சட்டத்தால் தடுக்கப்பட்டிருக்கிறது. பெருவாரியாக இவ்வாறு இருக்கும் நிலங்களுக்கான குத்தகை அல்லது வேறு அரசு ஆவணங்கள் இல்லை.சில இடங்களில் பெரிய பணக்கார நில உடைமையாளர்கள் சிறிய மற்றும் ஏழை நில உடைமையாளர்களின் நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ள எதிர்மறை குத்தகை நிலையும் நிலவுகிறது.

பல மாநிலங்களில் பெரிய அளவில் விளை நிலங்கள் விவசாயம் பிரதானமாக இல்லாமல், பணக்கார நில உடைமையாளர்களின் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டதால் வெறுமனே உள்ளது. இவர்கள் ரியல் எஸ்டேட் காரணங்களுக்காக இந்த நிலங்களின் மீதான உரிமைகளை விட மறுக்கிறார்கள். இவ்வாறு விளைச்சலுக்கும் இல்லாமல் தாங்களும் பயன்படுத்தாமல் இருக்கும் நிலை இந்த முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்ச்சியினை காட்டுகிறது.

இவ்வாறு தரிசு நிலங்களையும், விளை நிலங்களையும் கூட்டுறவு அமைப்பு அரசை நிர்ப்பந்தித்து கையகப்படுத்தி விவசாய உற்பத்தியில் ஈடுபடுத்த முயற்சிக்க வேண்டும். இது தனியார் நிலங்களை விட்டுவிட்டும் செய்ய முடியும். இதனை கூட்டுறவு அமைப்பு உறுப்பினர்கள் நில உரிமையாளர்களுடன் கலந்து ஆலோசித்து எஞ்சி நிற்கும் நிலங்களை பகிர்ந்து செய்து முறைப்படுத்தலாம்.

விவசாய பொருட்கள் பதப்படுத்தலும்  (Agro Processing)  விற்பனை செய்வதும் கூட்டுறவுகள் உற்பத்தி மட்டுமல்லாமல், பதப்படுத்துதல், கொள்முதல் செய்தல், சந்தையில் விற்பனை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை செய்து விவசாயிகளை கார்ப்பரேட் மற்றும் இடைத்தரகர்களின் சுரண்டலிலிருந்து பாதுகாக்க முடியும். விவசாயத்தில் காண்ட்ராக்ட் முறையில் 100ரூ அந்நிய முதலீடு மற்றும் அரசு-தனியார் கூட்டு என்கிற RKVY திட்டத்திற்கு பதிலாக மத்திய,மாநில அரசுகளை நிர்ப்பந்தித்து விவசாயத் தொழிலாளர்களின் கூட்டுறவுகளில் முதலீடு செய்ய வைத்து கூட்டுறவுத் துறையினை வளர்க்கலாம்.

பல மாநிலங்களில் தமிழ்நாடு உட்பட குறிப்பிட்ட விவசாய உற்பத்தியில் அரசு உப குழுக்கள் உள்ளன. இந்த ஆவணம் கடலூரில் நடந்த 33ஆவது மாநாட்டில் ஏற்கப்பட்டு விவசாயம் விவசாயத் துறை சார்ந்த பொருட்கள் உற்பத்தி நவீனமயமாக்குதல் மற்றும் விவசாய சந்தைகளை பெருமளவில் விரிவாக்கி விவசாயிகளை அணிதிரட்டுவதில் கூட்டுறவுத் துறை பணியாற்ற முடியும் என கூறுகிறது.

விவசாய கூட்டுறவுத்துறை இவ்வாறு வெவ்வேறு பயிர்களை விளைவிக்கும் சிறு விவசாயிகளை ஒன்று திரட்டியும், அவர்களின் உற்பத்தி நவீன மயமாக்கலுக்கும், அவர்கள் உற்பத்திக்கு சந்தை கிடைப்பதற்கும் வழிவகை செய்தாலேயன்றி சிறு, குறு விவசாயிகளை கார்ப்பரேட் மற்றும் ஏகபோக முதலாளித்துவ சுரண்டலிலிருந்தும் அதனால் ஏற்படும் வறுமையிலிருந்தும் காப்பாற்ற முடியாது.இந்த சிறு, குறு விவசாயிகளை ஒன்று திரட்டி சிறு வகை உற்பத்தியிலிருந்து பெரும்வகையான உற்பத்திக்கு இவர்களை மாறச்செய்வதன் மூலம் தான் கார்ப்பரேட் சுரண்டலிலிருந்தும் வறுமையிலிருந்தும் விடுவிக்க முடியும். வெவ்வேறு பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலம், இடுபொருள் மற்றும் விலை ஆகியவற்றிற்கு கூட்டுறவு மூலம் கூட்டு உரிமைக்கு வழிவகை செய்வது தான் இன்றைய தலையாய கடமை. இதுதான் சிறு, குறு விவசாயிகளை கூட்டுறவுத் துறை மூலம் பெரிய அளவு விவசாய உற்பத்தியையும், நவீன உற்பத்தி மற்றும் விவசாயிகளின் கூட்டுச் செயலையும், சந்தை, கிடங்கு, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் ஆகியவைகளை ஏற்படுத்தும்.

கூட்டுறவுத்துறை கார்ப்பரேட்மயமாக்குவதை தடுப்பதற்கு பதிலாக அனைத்துப் பகுதியிலும் வெவ்வேறு பயிர்களை பயிர் செய்யும் விவசாயிகளை ஒன்றாக திரட்டி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்களை போராட்டத்தில் முன்னிறுத்தி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

விவசாயத்தில் பெரும் உற்பத்தியும் நவீனமயமாக்கலும்
வெவ்வேறு பயிர்களில் விஞ்ஞான தொழில்நுட்பங்களை புகுத்தி சிறு உற்பத்தியாளர்களை ஈடுபடுத்துவதால் ஏற்படுவது பெருமளவு உற்பத்தி. இவ்வாறு உற்பத்தியான பொருட்கள் கொள்முதல், கிடங்கு, பதப்படுத்துதல் ஆகியவை கிராம பகுதியிலிருந்து நகர்ப் பகுதிகளுக்கு ஒன்றிணைக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு நவீன இயந்திரங்களை பயன்படுத்த பயிற்சிகளை கொடுத்து அவர்களை பயிற்றுவித்தால் கடும் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள் நவீன இயந்திரங்களை பயன்படுத்திடும் நவீன விவசாயிகளாக மாறுவார்கள். தேவையான வசதிகளை கூட்டுறவு மூலம் பெற்று வருமானமும் லாபமும் கிடைக்கப் பெற்று கௌரவமான வாழ்க்கையினை வாழ முடியும். அவர்கள் கிராமத்திலிருந்து நகரங்களுக்கு அத்தக்கூலி தொழிலாளிகளாக இடம்பெயர வேண்டியதில்லை.இந்த விவசாயத் தொழிலாளர் சமூக கூட்டுறவு அமைப்பு நேரடியாக அவர்களின் உற்பத்திப் பொருட்களை அனைத்து மட்டத்திலும் கொள்முதல் செய்து சரியான விலையினை அவர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் கார்ப்பரேட் மற்றும் இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு ஆளாகாமல் செய்தால் அவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சமூக கூட்டுறவு தனியார் லாபத்திற்கு பதிலாக கூட்டு வருமானம் அதிகரிக்க வழி வகுக்கும். இந்த வருமான அதிகரிப்பே மேலும் முதலீட்டுக்கான வழி வகுக்கும். விவசாயம் பெரிய தொழில்மயமாக்கப்படும்.இந்த சமூக கூட்டுறவுக்கான அணிசேர்க்கை சிறு, குறு, விளிம்புநிலை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளிகளாவார்கள்.

இதற்கான நிதி திரட்டுவதற்கான மூலம் விவசாயத் தொழிலாளிகளும், சிறு – குறு விளிம்புநிலை விவசாயிகளுமாவார்கள். இதைத்தவிர உள்ளூர் சமூகத்திடமிருந்தும் அரசியல் நிர்ப்பந்தத்தினால் அரசிடமிருந்து கட்டாய நிதி உதவி கிடைப்பதிலிருந்து கிடைக்கப்பெற வேண்டும். விவசாயிகள் தாங்கள் சுதந்திரமாக சாதி, மத பிரிவினைக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து அரசின் முன் இந்த மாற்றுத் திட்டத்தினை முன்னிறுத்தி இந்த விவசாய நெருக்கடியிலிருந்து மீள தொழிலாளிகளுடன் சேர்ந்தும் இதர சமூக கூட்டுறவு ஆதரவாளர்களையும் இணைத்தும் போராட வேண்டும்.

இதேபோன்று மக்களின் நுகர்வுக்கான சந்தை கூட்டுறவு என்ற துணை அமைப்பையும் நிறுவி அகில இந்திய அளவில் சுதந்திரப் போராட்ட காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பின்போது சுதேசி என்ற கோஷத்தோடு போராடியது போல அந்நிய முதலீடு மற்றும் கார்ப்பரேட் சந்தைக்கு எதிராக இன்று நாம் ஒரு மகத்தான இயக்கத்தினை நடத்த வேண்டும். இந்த இயக்கம் நாட்டில் இந்த சமூக கூட்டுறவுக்கான செயலை வேகப்படுத்தும் அத்துடன் சந்தையினை சமூக கூட்டுறவின் கையில் கொண்டுவர முடியும். இதன் மூலம் அந்நிய மூலதனத் தாக்குதலை எதிர்கொள்ள முடியும். பல மாநிலங்களிலும் இதேபோல் முயற்சிகள் மேற்கொள்ள முடியும்.

நவீன விவசாயம்
இத்தகைய சமூக கூட்டுறவு மூலமாக செயல்படும் போது பெரிய விவசாய உற்பத்தியாளர்கள் தாங்கள் பெரிய உற்பத்தியாளர்கள் என்ற நினைப்பிலிருந்து இந்த சமூக கூட்டுறவில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது பெரிய அளவில் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளிகளும் ஒன்றிணைய வாய்ப்பினை ஏற்படுத்தும். விவசாயத்தினை நவீனப்படுத்தாமல் நவீன சமுதாயத்தினை ஏற்படுத்த முடியாது. இவ்வாறு சமூக கூட்டுறவு மூலம் பெரிய அளவு விவசாய கட்டமைப்பினை கையகப்படுத்தும் போது பெரிய பணக்கார கார்ப்பரேட்டுகளிடம் பணிபுரிவோர்கள் சிறு விவசாயிகளிடமிருந்து நிலத்தினை அபகரிப்பதை தடுக்க வருவார்கள். இதுவே முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான விவசாயத் தொழிலாளி அணி சேர்க்கைக்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் வழிவகுக்கும்.

இந்த விவசாய சமூக கூட்டுறவு சிறு, குறு விவசாயிகளுக்குத்தான் பாதுகாப்பு அளிக்கும். இரண்டாவதாக இந்த சமூக கூட்டுறவு அந்தந்த மாநிலத்தில் விவசாய உற்பத்தி உறவு நிலைமைக்கு ஏற்ப அமையும். இந்தியாவில் விவசாயத்தில் உள்ள முதலாளித்துவ உற்பத்தி முறை இன்றைய ஏற்றத்தாழ்வான வளர்ச்சி சூழலுக்கு சமூக கூட்டுறவு முறை ஒரே சிறந்த வழி என்று நாம் சொல்லவில்லை. எங்கு நில அபகரிப்பு என்பது மையமாக உள்ளதோ அங்கு இந்த சமூக கூட்டுறவு திட்டம் உதவாது. இங்கு சமூக கூட்டுறவு என்பது அடிப்படை முரண்பாடுகளுக்கு எதிராகவும் நமது நோக்கங்களுக்கு எதிராகவும் கூட்டுறவை திசை திருப்பும். இந்த சமூக கூட்டுறவு என்பது இன்றைய விவசாய நெருக்கடிகளுக்கான ஒரு சஞ்ஜீவி மருந்து இல்லை. இந்த சமூக கூட்டுறவு கார்ப்பரேட் விவசாய சுரண்டலை எதிர்த்து பரந்துபட்ட மக்களை ஒன்று திரட்ட பயன்படும்.

சமூக கூட்டுறவு இயக்கம்
இந்த சமூக கூட்டுறவினை அமலாக்க உள்ளூரில் அரசியல் மற்றும் ஸ்தாபன பலம் இருந்து சந்தை மற்றும் இதர மக்கள் எதிர்ப்பாளர்களை சந்திக்கும் சக்தி இருத்தல் வேண்டும். அரசினை நிர்ப்பந்தித்து இந்த மாற்றுக் கொள்கையினை சமூக கூட்டுறவினை ஏற்க செய்ய வேண்டும். நாம் பலவீனமாகவுள்ள பகுதியிலும் மாநிலங்களிலும் இதனை தவிர்க்க வேண்டும். தங்களின் நில உடைமையிலிருந்து விவசாயிகள் என்றும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று உணர வேண்டும்.

அரசு அதிகாரிகள் எந்த விதத்திலும் இந்த சமூக கூட்டுறவு செயல்பாடுகளில் தலையிட இடம் கிடையாது, உரிமையும் இல்லை. விவசாயத்தில் ஈடுபட்டு உற்பத்தி செய்பவர்களும் அதில் தொழிலாளியாக இருப்பவர்களுமே இதில் உறுப்பினர்களாக முடியும். இவர்கள் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்கள்தான் நிர்வாகிகள். இது உள்ளூரில் அரசியல் தலைவர்கள் இந்த அமைப்பினை கையகப்படுத்துவதை தடுக்கும்.

இவ்வாறு விவசாயிகளுக்கான சமூக கூட்டுறவு என்பது அவர்களை அரசியல்படுத்தும். கூட்டு விவசாயம் என்பது அவர்களை பாதுகாக்கும் ஒரு வழி மட்டுமல்லாமல் கார்ப்பரேட் விவசாயச் சுரண்டலுக்கு எதிராகவும், நவீன தாராளமயக் கொள்கைக்கு எதிராகவும் அணிதிரள வழிவகுக்கும்.விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்குவது என்பது சிறு உற்பத்தியாளர்களை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தி நிலத்தினை மையப்படுத்தும் திட்டமாகும். கார்ப்பரேட் விவசாயமும் விவசாயத் தொழிலும் ஒன்றுக்கொன்று எதிரானது. அதனால் விவசாயம் வளர்ச்சியடையாது. அதனால் விவசாயிகள் வறுமைக்குத்தான் தள்ளப்படுவார்கள். இதற்கு முதலாளித்துவத்தை ஒழிப்பதுதான் தீர்வு. சிறு உற்பத்தியாளர்களை அந்த இடத்தில் விஞ்ஞான தொழில்நுட்பங்களை புகுத்தியும் அதனை தாங்கள் தன்னார்வமாக ஏற்கும்படி செய்தும் பெரிய அளவு விவசாய உற்பத்தியினை செய்யும் அளவுக்கு மாற்ற வேண்டும். இந்த அணுகுமுறை தற்போதுள்ள ஏழ்மை நிலைமையிலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பையும், நம்பிக்கையினையும் வளர்ச்சியினையும் பெறவும் முதலாளித்துவக் கொடுமையிலிருந்து மீளவும் பயனளிக்கும்.

Leave A Reply

%d bloggers like this: