கோவை, செ.22-
கோவையில் மழை பெய்து அணைகள் நிரம்பியதால், 5 நாட்களுக்கு ஓருமுறை குடிநீர் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் குறித்தும், சீரான குடிநீர் வழங்குவது குறித்தும் வெள்ளியன்று அதிகாரிகளுடம் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்திற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவையில் டிசம்பர் 3 ஆம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். மேலும், கோவை மாவட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட அதிக மழை பெய்துள்ளது. இதனால் சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வருகிறது.

ஆகவே, வெள்ளிகிழமை முதல் தினமும் 80 எம்.எல்டி தண்ணீர் சிறுவாணி அணையில் இருந்து எடுத்து விநியோகம் செய்யப்படும். இதன்மூலம் கோவையில் 15 நாட்களுக்கு ஓரு முறை சிறுவாணி தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் 5 நாட்களுக்கு ஒரு முறை கோவை பொது மக்களுக்கு சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இதேபோல், மாவட்டம் முழுவதும் சீராக தண்ணீர் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, வறட்சி காலத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துகொள்வதாகவும், பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.