ஈரோடு, செப்.22-
குடிநீர் மற்றும் சமுதாய கூடம் ஏற்படுத்தி தரக்கோரி கொடுமுடி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா கொளாநல்லி ஊராட்சிக்கு உட்பட்ட சத்திரத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 100 வருடங்களுக்கு முன்பாக பொது கிணறு அமைக்கப்பட்டு கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது வறட்சியின் காரணமாக கிணற்றில் தண்ணீர் முற்றிலும் வற்றிவிட்டது. இதைத்தொடர்ந்து கிணற்றை மீண்டும் ஆழப்படுத்தியும் தண்ணீர் ஊற வில்லை. இதனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக அக்கிராம மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். கிராமத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக் கூடம் அமைத்து தர வேண்டும் எனக்கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர் உமா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தற்காலிகமாக தண்ணீர் வாகனங்கள் மூலம் தினமும் தண்ணீர் விநியோகம் செய்யப்படும். புதிய ஆழ்துளை கிணறு அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆழ்துளை கிணறு அமைத்து தரப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்க கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: