மாஸ்கோ பிரகடனம்;                                                                                                                                                                   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவராக விளங்கிய
ஏ.எஸ்.கே. அவர்கள் 1969 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த உலக கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச மாநாட்டின் பிரகடனத்தை வியட்நாமுக்கு சுதந்திரம், விடுதலை, சமாதானம்! என்ற தலைப்பில் தமிழாக்கி தந்துள்ளார். அந்தப் பிரகடனம் வருமாறு:

வியட்நாம் மக்கள் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தில் பிரவேசித்துள்ள இன்று, வியட்நாம் ஜனநாயகக் குடியரசு, தெற்கு வியட்நாம் தேசிய விடுதலை முன்னணி இவற்றின் முன் முயற்சியால் நியாயமான அரசியல் தீர்வுக்கு அவசியமான நிலைகள் யாவும் சிருஷ்டிக்கப் பெற்றுள்ள இன்று நாம் கோருவதாவன:

பாரீஸில் நடைபெறும் நான்கு தரப்பு மாநாட்டில் முட்டுக்கட்டை போடும் அமெரிக்கா, தனது நிலைமையைக் கைவிட வேண்டும்;

அமெரிக்கா வியட்நாமில் தனது ஆக்கிரமிப்பு செயல்களை உடனே நிறுத்த வேண்டும், தென்வியட்நாமிலிருந்து தனது படைகளையும் தனது சுற்றுக் கிரகங்களின் படைகளையும் முழுமையாக நிபந்தனையின்றி விலக்கிக் கொள்ள வேண்டும்;

– அந்நியர் தலையீடின்றி தமது உள் விவகாரங்களை தென் வியட்நாமிய மக்கள் தாமே நிர்ணயித்துக் கொள்வதற்கான உரிமையை அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும்;

– வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் அரசுரிமைக்கும் பந்தோபஸ்திற்கும் எதிரான எல்லா நடவடிக்கைகளையும் அமெரிக்கா நிறுத்திவிட வேண்டும்;

– அமெரிக்கா, லாவோஸில் தனது தலையீட்டை நிறுத்த வேண்டும். அவற்றின் எல்லைகளை அங்கீகரிக்க வேண்டும், தென்கிழக்கு ஆசியா, கிழக்காசிய நாடுகள் விஷயத்தில் தனது ஆக்கிரமிப்பு நோக்கங்களைக் கைவிட வேண்டும். 1954, 1962ஆம் ஆண்டுகளின் ஜெனீவா உடன்பாட்டைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

தாய்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்கொரியாவின் பொம்மை ஆட்சி, ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு, ஜப்பான் இவை வியட்நாமில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு துணையாக நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடும் செயல்களை நிறுத்த வேண்டும்.

கம்யூனிஸ்ட்டுகளின் பல லட்சம் பேர் கொண்ட வலிமைமிக்க படையின் சார்பாக நேர்மையான மக்களே! சமாதானம், நீதி, சுதந்திரம், சுயாதீனம் இவற்றை பேண விழைவோரே! உங்களை கேட்டுக் கொள்கிறோம்.

வியட்நாமில் அமெரிக்கா நடத்திவரும் கொலைகார போரை எதிர்த்து உலகம் முழுவதிலும் உங்களது கண்டனக்குரலாக உறுதியாக எழுவதாக!

வீர வியட்நாம் மக்களுடன் ஒருமைப்பாடு தெரிவிக்கும் சர்வதேச இயக்கத்தில் மேலும் தீவிரமாக பங்கெடுப்பீர்!

வியட்நாமிலிருந்து அமெரிக்கப் படைகளும் அதன் சுற்றுக்கிரகங்களின் படைகளும் விலக வேண்டும் என்று கோருக!

வியட்நாம் மக்களின் மாற்றவியலாத உரிமைகளை உத்தரவாதம் செய்யும் அடிப்படையில் வியட்நாம் பிரச்சனைக்கு தாமதமின்றி சமாதானப்பூர்வமாக தீர்வுகாணக்கோருவீர்!
தென்வியட்நாம் விடுதலை முன்னணியின் பத்து அம்ச ஆலோசனைக்கு ஆதரவு அளிப்பீர்!
அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடி வரும் வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக ஏகாதிபத்திய – எதிர்ப்பு சக்திகளும் சமாதானம் விழையும் சக்திகளும் உடனடியாக புதிய, பல வகையான மேலும் வலிமை வாய்ந்த ஒன்றுசேர்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தலையீட்டாளர்களுக்கு அவர்களது சுற்றுக்கிரங்களுக்கு படைவீரர், ஆயுதங்கள், தளவாடங்கள் ஏற்றி அனுப்புவதை பகிஷ்கரியுங்கள்!

ஜெனீவா உடன்பாடு கையொப்பமிடப்பட்டதன் ஆண்டுவிழா நாளான ஜூலை 20 ஆம் தேதியை வியட்நாமினுடைய ஒருமைப்பாடு தினமாக அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு சமாதிகட்டும் போராட்ட நாளாக மாற்றுவோம்!

சுதந்திரம், சுயாதீனம் இவற்றுக்காக போராடும் வீர வியட்நாம் மக்கள் புகழ் ஓங்குக!
சர்வதேச ஒருமைப்பாட்டு பதாகையினை உயர்த்திப் பிடிப்போம்!

வியட்நாமுக்கு சுதந்திரம், விடுதலை, சமாதானம் தேவை!

வியட்நாம் மக்களின் நியாயமான லட்சியம் வெற்றியுறுவது திண்ணம்!

மாஸ்கோ, ஜூன் 10, 1969
(பிராவ்தா, ஜூன் 11, 1969)
கம்யூனிஸம்(1847-1975) அன்று முதல் இன்று வரை எனும் நூலிருந்து…

Leave A Reply

%d bloggers like this: