திருப்பூர், செப். 22-
திருப்பூரில் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் செலுத்தியவர், அதற்கான ரசீதைக் கேட்டதால் ஆத்திரமடைந்த காவல் துணை ஆய்வாளர் இருசக்கர வான ஓட்டியின் கழுத்தைப் பிடித்துத் தள்ளி, அசல் ஓட்டுநர் உரிமத்தையும் பறித்துக் கொண்டார். திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட வீரபாண்டி சோதனைச் சாவடியில் புதன்கிழமையன்று இரவு 11.30 மணியளவில் சிறப்பு துணை ஆய்வாளர் தனசேகரன் தலைமையில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பல்லடம் சாலை கெம்பேநகரைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவரின் மகன் சௌந்தர்ராஜன் (வயது 27) அந்த வழியாக வந்தார்.

அவர் புதிய பேருந்து நிலையம் அருகில் சொந்தமாக சலூன் கடை வைத்துள்ளார். இரவு வேலை முடிந்து வீடு திரும்பியபொழுது தலைகவசம் அணியாமல் வந்ததால் அவரை காவலர்கள் தடுத்து நிறுத்தி ரூ.100  அபராதம் விதித்தனர். அந்த தொகையை சௌந்தர்ராஜன் செலுத்திவிட்டார். இதன்பின் அபராதம் செலுத்தியதற்கு கையெழுத்திட்ட ரசீது தரும்படி கேட்டிருக்கிறார்.  இதனால் ஆத்திரமடைந்த தனசேகரன், நீ என்னிடமா ரசீது கேட்கிறாய்? அடித்து இடுப்பை உடைத்து விடுவேன்! என்று மிரட்டியதுடன், அவரது கழுத்தைப் பிடித்து தள்ளியுள்ளார். அது மட்டுமின்றி, அவரது அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தையும் பறித்துக் கொண்டார். அதற்கு எந்த ஒப்புகைச் சீட்டும் தரப்படவில்லை. அதனை உரிமம் நீக்கம் செய்வதற்கு போக்குவரத்து துறையிடம் ஒப்படைத்து உள்ளதாக கூறப்படுகிறது. துணை ஆய்வாளர் தனசேகரன் வாகன ஓட்டிகளிடம் இது போல் தகாத செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் ஆய்வாளர் சுப்புரத்தினத்திடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அபராதம் கட்டியதற்கான கையெப்பமிட்ட ரசீது தராதது தவறு. கையெழுத்து போட்ட ரசீதை தவறாக பயன்படுத்தி விடுவார்களோ என்றுதான் தரவில்லை. அசல் உரிமத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைசீட்டு தராமல் விட்டதும் தவறுதான் என்றார்.திருப்பூர் மாநகரில் காவல்துறையினர் இதுபோல் தொடர்ச்சியாக வாகன ஓட்டிகளிடம் அபராதம் என்ற பெயரில் பணம் பறிப்பதும், அசல் உரிமத்தை பறித்துக் கொள்வதும் அதிகரித்துள்ளது. இது வாகனஒட்டிகள் மத்தியில் மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் முறையாக வாகனத் தணிக்கை செய்து, தவறு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால், பணம் பறிப்பதற்கான செயலில் ஈடுபடுவதுதான் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

(ந.நி.,)

Leave a Reply

You must be logged in to post a comment.