புதுதில்லி;        ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனையை விரைவு படுத்துவதற்காக, அந்நிறுவனத்தின் சொத்துக்களை முதலில் விற்க பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது. ஏர் இந்தியாவிடம் உள்ள சில சொத்துக்கள் அந்நிறுவனத்துக்குச் சொந்தமில்லை, 99 ஆண்டு குத்தகைக்குத்தான் அரசு தந்துள்ளது என்பது தற்போதுதான் பாஜக அரசின் கவனத்திற்கு வந்துள்ள நிலையில், அவற்றை விற்பதற்கான முயற்சிகளை அரசு துவக்கியுள்ளது.

நகர வளர்ச்சி அமைச்சகத்துக்குச் சொந்தமான அத்தகைய இரு இடங்கள் டெல்லியில் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சொத்துக்களை விற்பதன்மூலம் ரூ.5 ஆயிரம் கோடி கிடைக்கும் என்றும், இவை நிறுவனத்தின் கடன்களை திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, நடைமுறை மூலதனத்துக்காகப் பெறப்பட்ட ரூ.33 ஆயிரம் கோடி கடன் உட்பட, ரூ.52 ஆயிரம் கோடி கடன் உள்ளது.

இதற்குச் செலுத்தப்படும் ரூ.4500 கோடி வட்டி, நிறுவனத்தின் வருவாயில் 21 சதவீதமாகும்.
இக்கடன்களை அடைப்பதற்காக, துணை நிறுவனங்களை தனித்தனியே விற்பனை செய்வது குறித்தும், ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை குறித்து ஆராய்ந்து வருகிற, நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையிலான குழு பரிசீலித்து வருகிறது.

விஸ்டாரா, ஏர் ஆசியா ஆகிய நிறுவனங்களில் பங்குகள் வைத்துள்ள டாடா குழுமம், சர்வதேச விமானச் சேவையைத் துவக்க விரும்பும் இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. விமானப் பராமரிப்புத் தொழிலில் உள்ள பர்ட் குழுமம், செலிபி ஆகிய நிறுவனங்களும் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில், வியூக விற்பனைக்கு ஆலோசகர்களை நியமிக்கும் முயற்சியில் அரசும் ஈடுபட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: