கோவை: பிழைப்பு தேடி கோவை வந்த வடமாநில தொழிலாளர்களிடம் பணம், செல்போன் உள்ளிட்டவைகளை அடித்து பிடுங்கி அவர்களை எட்டாயிரம் ரூபாயுக்கு ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு புரோக்கர்கள் விற்ற சம்பவம் குறித்து தகவலறிந்து உடனடியாக சிஐடியு தலையிட்டு மூன்று தொழிலாளர்களை மீட்டனர்.

சத்தீஸ்கர்  மாநிலம் பிளாஸ்பூர் மாவட்டத்தை  சேர்ந்தவர்கள்  தனேஷ்வர், வினோத்குமார்  மற்றும்  மகேந்திர குர்கே. இவர்கள் கோவையில் பணியாற்றும் தங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு கோவையில் வேலை கேட்டுள்ளனர். இதன்பின்னர் வேலைக்கான உறுதிசெய்து கொண்டு கடந்த 15 ஆம்தேதி பிளாஸ்பூரில் இருந்து கோவைக்கு வேலை தேடி வந்துள்ளனர். கோவை ரயில்நிலையத்தில் நண்பர்களின் வருகைக்காக காத்திருந்தபோது இரண்டு புரோக்கர்கள் இவர்களின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு நல்ல வேலை கிடைத்தால் தொடர்பு கொள்கிறேன் வந்துவிடுவிங்கள் என தெரிவித்து சென்றுள்ளனர்.   இதனையடுத்து கோவை கள்ளப்பாளையம் பகுதியில் பணியாற்றும் இவர்களது நண்பர்கள்   தனியார்  வாகன  உதிரிபாகங்கள்  தயாரிப்பு நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் செவ்வாயன்று  ரயில்நிலையத்தில் செல்போன் எண்ணை பெற்ற புரோக்கர்கள் ஈரோட்டில்  அதிக  ஊதியத்தில் நல்ல  வேலை உள்ளதாகவும் உடனே கோவை ரயில்நிலையம் வருமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இவர்களும் நம்பி சென்றுள்ளனர். அங்கே இவர்களோடு சேர்ந்து ஒரிசா மாநிலத்தை சேர்ந்த எட்டு பேரும் இருந்துள்ளனர். இந்த 11 பேரையும் கோவையில்  இருந்து  ஈரோட்டிற்கு  அழைத்து சென்றுள்ளனர். நடு இரவில் ஒரு அறையில்  அடைத்து வைத்து அடித்து  உதைத்து  அனைவரின் பணம்  மற்றும் செல்போன்களை  பிடிங்கியுள்ளனர். இதனையடுத்து இவர்களை ஒரு வேனில் ஏற்றி ஈரோடு,  ஆத்தூர்,  உளுந்தூர்பேட்டை  ஆகிய  பகுதிகளுக்கு  ஏஜெண்ட்கள்  அழைத்து சென்று பேரம் பேசியுள்ளனர்.

இறுதியா உளுந்தூர் பேட்டை அருகில் போர் வெல்  நிறுவனத்தை சேர்ந்த ஒருவரிடம் நபர் ஒருவருக்கு  8  ஆயிரம்  ரூபாய் என்கிற அளவில் பேரம் பேசி எண்பாதாயிரத்திற்கு விற்றுள்ளனர். தாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்ன வேலை என்பதையறியாமல் இவர்கள் அழுதுள்ளனர். இதனைக்கண்ட போர்வெல் நிறுவனத்தின் உரிமையாளர் உங்களை பணம் கொடுத்து வாங்கியுள்ளேன். ஒழுங்காக வேலை செய்யவில்லையென்றால் கிட்னி உள்ளிட்ட  உடல் உறுப்புகளை விற்று விடுவோம்  என  மிரட்டியுள்ளனர். இதனால் பயமடைந்த வடமாநில தொழிலாளர் ஒருவர் யாருக்கும்   தெரியாமல் உரிமையாளர் மறைத்துவைத்திருந்த செல்போன்  மூலம்  சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனது தந்தைக்கு தாங்கள் கடத்தப்பட்டிருப்பதாக குறுஞ் செய்தியை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது தந்தை அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும், கோவையில் பணியாற்றும் அவர்கள் ஊரைச்சார்ந்தவர்களிடம் தகவலை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் சிஐடியு கோவை மாவட்ட புலம் பெயர்ந்தோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

சிஐடியு சங்கத்தினர் புதனன்று மதியம் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். ஆனால் தங்கள் எல்லைக்குள் கள்ளப்பாளையம் வரவில்லையென்றும் சூலூர் காவல்நிலையம் செல்லுமாறு அலைகழித்துள்ளனர். இதனையடுத்து குறுஞ்செய்தி அனுப்பிய செல்போன் எண்ணை பிடித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசிய சிஐடியுவினர் உடனடியாக விடுவிக்கவில்லை யென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட 11 வடமாநில தொழிலாளர்களையும் ஈரோடு அருகே ஒரு ஆள்நடமாட்டம் இல்லாத காட்டிற்குள் நடு இரவில் விட்டுவிட்டு சம்பந்தப்பட்ட புரோக்கர்கள் ஓடியுள்ளனர். வழிதெரியாத சாலையில் இருந்த நடந்தே வந்து ஈரோடு பிரதான சாலைக்கு வந்துள்ளனர். இதனையடுத்து ஒரிசாவை சார்ந்தவர்கள் எப்படியாவது நாங்கள் எங்கள் ஊருக்கே சென்றுவிடுகிறோம் என்று எட்டுபேரும் வேறுவழியில் சென்றுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மூன்றுபேர் மட்டும் மீண்டும் கோவைக்கு செல்லும் டெம்போவில் ஏறி கோவை வந்தனர். சிஐடியு புலம்பெயர்ந்தோர் சங்க அலுவலகத்திற்கு வந்த அவர்களை சிஐடியுவினர் தங்கவைத்து உணவு உள்ளிட்ட உதவிகளை செய்தனர்.

இதுகுறித்து சிஐடியு மாவட்ட பொருளாளரும், புலம்பெயர்ந்தோர் சங்க பொதுச் செயலாளருமான எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: கோவை  மாவட்டத்தில் வட மாநில  தொழிலாளர்கள்  தரகர்கள்  மூலம்  அடிமைகளாக  விற்பனை செய்யப்பட்டு  வருவதாகவும்,  அதனை தடுக்க  அரசும்,  காவல்துறையும்  எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை  என  குற்றம் சாட்டினார்.

மேலும்  கொத்தடிமைகளாக  விற்க முயன்ற  தரகர்களை  கைது  செய்து நடவடிக்கை  எடுக்க வேண்டு மென  வலியுறுத்திய  அவர் , இதுதொடர்பாக  காட்டூர் காவல்  நிலையத்தில்  புகார்  அளித்ததாகவும்,  எல்லையை  காரணம்  காட்டி காவல் நிலையத்தில் புகாரினை  வாங்க  மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார். வட மாநில இளைஞர்களை  கொத்தடிமைகளாக  விற்றதாக  புகார்  அளிக்கப்பட்டுள்ள என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: