கோவை, வங்கி உதவியாளர் பணியிடத்திற்கு பிராந்திய மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்கிற விதியை மாற்றிய மத்திய அரசின்  குளறுபடியால் தமிழக மாணவர்களின் வங்கி வேலைவாய்ப்பு பறிபோவதாக வங்கி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை  பத்திரிக்கையாளர்  மன்றத்தில் வியாழனன்று  வங்கி  தேர்வுகளுக்கு தயாராகும் ராசிக், சுரேஷ்குமார், சண்முகப்பிரியா உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள்  செய்தியாளர்களை  சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:  இந்தியாவிலேயே  தமிழகத்தில்  தான்  அதிகளவான வங்கி உதவியாளர்  பணியிடங்கள்  இருப்பதாகவும் நடப்பாண்டில் ஆயிரத்து  277 இடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக  பொதுத்துறை  வங்கி  உதவியாளர்  பணியிடங்களுக்கு  தமிழ்  மொழி கட்டாயம்  என்ற விதிமுறையை மத்திய அரசின் கீழ் இயங்கும் ஐபிபிஎஸ் தேர்வாணையம்  தளர்த்தப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினர். இதன் விளைவாக வங்கி தேர்வு முடிந்து பணியிடங்கள்  நிரப்பப்பட்டபின்னர்  6  மாதங்களுக்கு  மாநில மொழி  தேர்வு  நடத்துகின்றனர். இதனால் மற்ற மாநிலத்தவர் தமிழகத்தில் வங்கிக்கான பணியிடத்தில் எளிதாக தேர்வெழுதி வெற்றி பெற்ற பின்னர் பிராந்திய மொழிப்பாடத்திற்கான தேர்வை எழுதுகின்றனர்.

கடந்த  இரண்டு  ஆண்டுகளாக  மாநில மொழி  தேர்வு  நடத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டு  வருவதாகவும்  பிராந்திய  மொழி  தேர்வு  புறக்கணிக்கப்பட்டு இருப்பதால்  தமிழக  இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றனர். பிற  மாநில இளைஞர்கள்  அதிகளவில்  பணியிடங்களுக்கு  தேர்வு  செய்ய  வாய்ப்புள்ளதாகவும் இதனால் வங்கி  தேர்வுகளுக்கு தயாராகும்  தமிழகத்தை  சேர்ந்த  10  இலட்சம் மாணவர்கள்  பாதிக்கப்பட்டு  உள்ளதாக தெரிவித்தனர். மேலும், வங்கிகளில் தொடர்பு கொள்ளும் உள்ளூர் மக்களுடன் வேற்று மொழி பேசும் பணியாளர்களினால் பொதுமக்களின் சேவை பாதிக்கப்படும் என குற்றம் சாட்டினார். தமிழகத்தில்  உள்ள  ஆயிரத்து  277 பணியிடங்களும்  தமிழ் எழுத, படிக்க  தெரிந்த  தமிழக  மாணவர்களை  கொண்டே  நிரப்ப  வேண்டுமெனவும்,  இதுதொடர்பாக  தமிழக  முதலமைச்சர்  மற்றும்  அரசியல் கட்சித்தலைவர்களுக்கு  தபால்  மூலம்  மனு அளிக்க  உள்ளதாகவும்  மாணவர்கள்  தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.