திருவனந்தபுரம்;
மதவெறியர்களின் படுகொலை பட்டியலில், கௌரி லங்கேஷூக்கு அடுத்த இடத்தில் தன்னைத்தான் வைத்திருக்கிறார்கள் என்றும், ஆனால், மரணத்தை பற்றி எனக்கு எந்த பயமும் கிடையாது என்றும் புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரும் சிந்தனையாளருமான கே.எஸ். பகவான் கூறியுள்ளார்.கர்நாடகத்தில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், சங்-பரிவார கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டு சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், இந்துத்துவத்துக்கு எதிராக தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் கே.எஸ். பகவானும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியிருப்பது, அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னடத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான கே.எஸ்.பகவானுக்கு கன்னட சாகித்ய அகாடமியானது, 2013-ஆம் ஆண்டு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ அளிக்க முடிவு செய்தது. அப்போதே கன்னட சாகித்ய அகாடமி அலுவலகத்துக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளில், ‘பகவானுக்கு விருது கொடுக்கக் கூடாது; அவர் இந்துக்களுக்கு எதிராக எழுதுபவர்’ என்று மிரட்டல்கள் விடப்பட்டன. இதுபற்றி அப்போதே பெங்களூரு போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இப்போதும் இந்துத்துவா சக்திகளின் அச்சுறுத்தலிலேயே தான் வாழ்ந்து வருவதாக கே.எஸ். பகவான் கூறியுள்ளார்.கேரள மாநிலம் காலடியிலுள்ள சங்கராச்சாரியா சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில், புதனன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கே.எஸ். பகவான் கலந்து கொண்டார். பின்னர் பெங்களூருவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “அமைதியை விரும்பும் சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கும், நல்லிணக்கத்தை வற்புறுத்துபவர்களுக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருப்பதாகவும், ஆனால் மரணத்தைப் பற்றியெல்லாம் தனக்கு எப்போதும் பயம் கிடையாது” என்றும் பகவான் தெரிவித்தார்.

“நான் இடதுசாரியும் கிடையாது, வலதுசாரியும் கிடையாது; நான் மனித நேயவாதி; அனைவரும் இங்கே மதிப்போடும் அமைதியோடும் வாழ வேண்டும் என்பதே என் எண்ணம்; குறுகிய சிந்தனை உடையவர்கள் என்னைக் கொல்லலாம்; ஆனால் என் சிந்தனைகளைக் கொல்ல முடியாது!” என்று குறிப்பிட்ட பகவான், விவேகானந்தர் அனைத்து தரப்பினரின் புத்தகங்களையும் படித்தார்;

ஆனால் இப்போதோ சிலர் எந்தப் புத்தகங்களையும் படிக்காமல் கருத்துச் சுதந்திரம் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.எந்த மதம் கூறுவதையும் அப்படியே நம்பாதீர்கள்; நீங்கள் கேள்வி கேளுங்கள், உங்கள் கேள்விகளின் மூலம் விடை தேடுங்கள் என்றே தான் சொல்வதாகவும் அவர் விளக்கமளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: