===பி.கிருஷ்ணபிரசாத்===
கட்டுரையாளர் : நிதிக் காப்பாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்
கடந்த இருபத்தைந்து வருடங்களாக நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கையினால் சிறு விவசாயிகள் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலை கூட தங்கள் விளைச்சலுக்கு கிடைக்காமல் அவர்களின் நிலங்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 1991லிருந்து கடந்த இருபது வருடத்தில் ஏறத்தாழ 1.5 கோடி விவசாயிகள் ( நாளொன்றுக்கு 2035 விவசாயிகள் வீதம்) விவசாயத்தில் வருமானம் பாதிக்கப்பட்டு விவசாயத்தினை விட்டொழித்து வாழ்வாதாரத்திற்காக வேறு வேலை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நாடு விடுதலை அடைந்த பின் அப்போதைய அரசானது நாட்டின் இறையாண்மையினைப் பாதுகாக்க பொதுத்துறைக்கும் விவசாயத்திற்கும் முக்கியத்துவமும் கொடுத்தது. ஆனால் இன்றோ விவசாயத்தினை கார்ப்பரேட் மயமாக்கும் நோக்கத்துடன் நிலங்களை கார்ப்பரேட்டுகள் கையகப்படுத்துவதற்கு சாதகமாக அரசே விவசாயத்திற்கான முதலீட்டினை வெட்டுகிறது.
இதனால் விவசாயம் செய்ததற்கான செலவுகூட கிடைக்காமலும் அவர்களது குடும்பங்கள் அத்தியாவசிய செலவுக்குக் கூட வருமானம் கிடைக்காமல் போய்விட்டது. நிலங்களை அடகு வைத்து கடன் வாங்கி விவசாயம் செய்து, வருமானம் கிடைக்காமல் போனதால் தங்கள் நிலங்களை இழந்தும், வறுமைக்கு தள்ளப்பட்டும் அதனால் தற்கொலை என்பதே வாழ்க்கை என மாறியுள்ளது; அதிலிருந்து தப்பிக்கவே கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கி ஏதுமற்றவர்களால் புலம்பெயர நேரிடுகிறது.
விலையே ஒரு சுரண்டல் முறையாகிறது
முதலாளித்துவத்தின் கொடூரமான வளர்ச்சியில் விவசாய விளைபொருட்களுக்கு கொள்முதல் விலை குறைக்கப்படுகிறது; இடுபொருட்களின் விலை அதிகரிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளின் வருமானம் சுருங்கி கடுமையாக சுரண்டப்படுகிறார்கள். இதன் எதிர்விளைவாகவே நாடு முழுவதும் இன்று விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகத்தான் மத்தியப் பிரதேசத்தில் மாண்ட்சூரில் காவல் துறை துப்பாக்கிச்சூட்டுக்கு ஆறு விவசாயிகள் பலியானார்கள். மகாராஷ்டிராவில் விவசாயிகளின் பெரும் எழுச்சி ஏற்பட்டது. ராஜஸ்தானில் மாபெரும் எழுச்சி என பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த விவசாயிகள் கேட்பது, சுவாமிநாதன் குழு முன்வைத்த அனைத்து விவசாய பொருட்களுக்கும் அடக்க விலையுடன் ஐம்பது விழுக்காடு விலை மற்றும் நியாயமான கடன் நிவாரணம் என்பதே.
விரிவான உற்பத்தியின் முக்கியத்துவம்
இன்று உலகளாவிய அளவில் விவசாய உற்பத்தி பொருட்களில் பத்து விழுக்காடுதான் எளிய மக்களால் நுகரப்படுகிறது. மீதி தொன்னூரு விழுக்காடு பன்னாட்டு நிறுவனங்கள், முதலாளிகள், இடைதரகர்கள் இடையே பிரிக்கப்படுகிறது. இதனால் விவசாய( இடுபொருட்கள் – கொள்முதல்) பொருட்கள் இவர்களது இரும்புப் பிடியில் சிக்கியுள்ளன. எனவே விவசாயமும் அதனை ஒட்டிய நவீன சந்தைகளும்பன்னாட்டு மற்றும் பெரும் முதலாளிகளின் கைவசம் உள்ளது.
இதனால் விவசாயத்துறை மீதும் விவசாயிகள் மீதும் அவர்களது நிலம், உற்பத்தி, விலை, உற்பத்திக் கருவிகள் ஆகியவற்றில் இவர்கள் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.
இந்த சூழலில் சிறு விவசாயிகள் விவசாயம், விவசாயம் சார்ந்த உணவுத்துறை பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றில் பெரிய அளவில் உற்பத்தியும் சந்தை வலைபின்னலும் கொண்டதான கூட்டுறவு முறை உற்பத்தியில் ஈடுபடுவதே, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உடனடி சாத்தியமான முறையாக இருக்கும்.
விவசாயத்தில் கூட்டுறவு முறை பொருந்தும்… எப்படி?
விவசாயத்தில் பெரிய அளவிலான கூட்டு உற்பத்தி என்பதை பல்வேறு அனுபவங்களிலிருந்து பெறுகிறோம். ஆணும், பெண்ணும் பங்காளர்களாகவும் நிறுவனமாகவும் இணைந்து அந்த நிறுவனத்தை உற்பத்தியில் ஈடுபடுத்துவது என்பதே கூட்டு உற்பத்தி. அதில் லாபம் என்பது ஒரு பகுதியே. அது லாபத்திற்கு பதில் மக்களை முன்னிறுத்துகிறது. அது விவசாய கூட்டு சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார நிலைமைகளை வளர்த்தெடுக்கிறது.
விவசாயக் கூட்டுறவு என்பது விவசாய உற்பத்தி, விவசாயம் சார்ந்த துணைப் பொருட்கள், உற்பத்தி பக்குவப்படுத்துதல் மற்றும் சந்தை ஆகியவற்றில் உறுதுணையாகவும், இடைதரகர்களிடமிருந்து விடுவிப்பு மற்றும் இந்த நவீன தாராளமயக் கொள்கையின் சந்தைச் சுரண்டலிலிருந்து ஒரளவு பாதுகாப்பும் இருக்கும்.
கூட்டுறவு முறையினை பலப்படுத்துவது என்பது பொதுத்துறையினை பலப்படுத்துவது போலாகும்.
உலக நாடுகளில் கூட்டுறவு
உலக நாடுகளில் கூட்டுறவு என்பது புதுமையானது அல்ல. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு இல்லை. சர்வதேச விவசாய வளர்ச்சி நிதியத்தின் அறிக்கையின் படி சிறுதொழில் முதல் பகாசுர நிறுவனங்கள் வரை கூட்டுறவு முறை உற்பத்தி பல நாடுகளில் பல்வேறு துறைகளில் செயல்படுகிறது.
உலகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் – அமைப்புகளில் 100 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். 10 கோடிப் பேருக்கும் மேல் வேலை வழங்கும் துறையாகவும்- 20 சதவீதத்துக்கு மேல் பன்னாட்டு நிறுவனமாகவும் உள்ளது. 2009 இல் பிரேசில் நாட்டில் கூட்டுறவுத் துறையில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துணை உற்பத்தி 37.7 சதவீதமாகவும் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.45 சதவீதமாகவும் இருந்தது.
மொரீஷியஸ் நாட்டில் 60 சதவீதத்துக்கு மேலாக கூட்டுறவுத் துறையில் தான் விவசாயத்துறை இருக்கிறது. அமெரிக்காவில் பால் உற்பத்தியானது 80 சதவீதத்துக்கு மேலாக கூட்டுறவுத் துறையில் தான் உள்ளது. விவசாயமானது பெரும்பாலான நாடுகளில் கூட்டுறவுத் துறையில் தான் இயங்குகிறது. வியட்நாமில் 44 சதவீதம் கூட்டுறவு விவசாயத்துறை வலுவாக உள்ளது. இந்தியாவில் 50 சதவீதத்துக்கு மேல் கூட்டுறவுத் துறையில் தான் விவசாயக்கடன் தருவதும் அல்லது சந்தை, கிடங்கு மற்றும் இதர சேவைகள் வழங்குவதும் உள்ளது.
சோசலிச நாடுகளில் நிலச்சீர்திருத்தம் மிகப்பெரும் தாக்கத்தினை வளர்ச்சியில் ஏற்படுத்தியது. நிலச்சீர்திருத்தம் இந்நாடுகளில் பிரபுத்துவ அடிமை நிலையிலிருந்து விவசாயிகளை மீட்டு நிலங்களை அவர்களுக்கு அளித்தது. ஆரம்ப காலத்திலிருந்தே இந்த கூட்டுறவு முறை அவர்களுக்கு விவசாய உற்பத்தியிலும், வருமானத்திலும், உதவியது; தொழில் நுட்ப வளர்ச்சியையும் இயந்திர அமலாக்கத்தினையும் வளர்த்தது.
இந்தியாவின் அனுபவம் என்ன?
சுதந்திரப் போராட்டக் காலங்களிலேயே விடுதலைப் போராட்ட வீரர்களின் தலைமையில் பல பள்ளிகளும், ஆலைகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வோடு கூட்டுறவுத் துறையில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டது. 1946இல் குஜாரத்தில் தனியார் துறையின் ஆதிக்கத்தினை எதிர்த்து கூட்டுறவுத் துறையில் கெயிரா பால்பொருட்களின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது.
பின்னாளில் அதுவே ‘அமுல்’ என்றாகியது. இந்தியப் பொருளாதாரத்தில் கிராமங்களில் கூட்டுறவு 50 சதவீதத்துக்கு மேல் சர்க்கரை கைத்தறி, கிடங்குகள் போன்றவற்றில் முக்கியப் பங்காற்றியது. உரம் நூற்பாலை, மீன் பிடித்தல், பால் உற்பத்தி போன்ற துறைகளில் கூட்டுறவு முக்கிய பங்காற்றியது. 2005இல் 12.3மில்லியன் ( ஒரு மில்லியன்=10 லட்சம்) பால் கூட்டுறவு உறுப்பினர்கள் மொத்த பால் உற்பத்தியில் 22 சதவீதம் பால் உற்பத்தி செய்துள்ளனர்.
கேரளாவில் கூட்டுறவு என்பது அதிக அளவில் 12,000 கூட்டுறவு சங்கங்கள் இருப்பதால் விவசாயக் கடன், விற்பனை, சுகாதாரத்துறை போன்றவற்றிலும் செயலாற்றுகின்றன. மேலும் காபி, தேங்காய், ஏலம் போன்ற வாசனை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியன விற்பதிலும் அவை செயல்பட வாய்ப்புள்ளது. ரப்பர் உற்பத்தி மற்றும் விற்பனையில் கூட்டுறவு விவசாயிகளுக்கு பலனளித்துள்ளது.
” ரப்கோ” என்ற கூட்டுறவு முறை, ரப்பர் பதப்படுத்துதல் மற்றும் விற்பனையில் மிகப்பெரிய பங்காற்றுகிறது. குடும்பஸ்ரீ என்கிற திட்டம் தரிசு நிலங்களை உழுவதிலும் கிராமப்புற தொழில்களை வளர்ப்பதிலும் அந்த பொருட்களை விற்பதிலும் ஈடுபடுகிறது. கேரளத்தில் பல வருடங்களுக்கு முன்பு இடதுசாரியின் ஆட்சியில் நிலச்சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டாலும், அதன் பலன்களை நவீனமயமாக்குவதிலும், உற்பத்தியினை அதிகரிக்கவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தையில் விற்பதற்கும் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.
திரிபுரா அனுபவம்
திரிபுராவில் விவசாயிகள் – விஞ்ஞானிகளிடையே இருக்கும் சமதள உறவினால் அரிசி மற்றும் கடுகு உற்பத்தியில் ஏகபோக விதை விற்பனையாளர்களிடமிருந்தும் அவர்களின் தில்லு முல்லுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டும் தாவர வளர்ச்சி, விதை வளர்ச்சி ஆகியவற்றிலும் கூட்டுறவு முறை செயல்படுத்தப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பழங்களை பக்குவப்படுத்துவதில் கூட்டுறவு முறை செயல்படுகிறது.
மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற முதலாளித்துவ நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பில் அவர்களது ஆதிக்கத்தில் தான் கூட்டுறவு செயல்படுகிறது. இதற்கு உதாரணமாக சர்க்கரை ஆலைகளைச் சொல்லலாம்.
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள் ஆகியோர்களை பயிற்றுவித்து இந்த கூட்டுறவு அமைப்பினை ஜனநாயகப்படுத்த வேண்டும். இது நம் முன்னுள்ள பிரதான கடமையாகும்.
கூட்டுறவும் நவீன தாராளமயமும்
இந்தியாவில் இந்த கூட்டுறவு முறை செயல்பாட்டிற்கு 1991லிருந்து அமலில் உள்ள நவீன தாராளமயக் கொள்கை சவாலாக உள்ளது. கூட்டுறவுகளின் சுதந்திரமான செயல்பாட்டில் அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தலையீடானது அதிகரித்துள்ளது. உதாரணமாக வைத்தியநாதன் கமிட்டியானது கூட்டுறவினை வெறும் விவசாயக் கடன் கொடுப்பதும் அதற்கான வங்கியாக மட்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் மற்ற சேவைகளிலிருந்து கூட்டுறவை விலக்க வேண்டும் என்றும் ஒரு பிற்போக்கான பரிந்துரையை அளித்துள்ளது.
மேலும் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டு குறைவினால் கூட்டுறவுத் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நவீன தாராளவாதிகள் தங்கள் நலனை கருதி இந்த கூட்டுறவினை தங்களின் உற்பத்தி ஆலைகளின் துணை கருவியாக மாற்ற ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா(சுமுஏலு) என்ற பெயரிலும் மற்ற வகையிலும், தங்களின் விவசாய பொருள்களின் விற்பனையினை அதிகரிக்கவும் இடை தரகர்களை வெளியேற்றுவதை நிறைவேற்றிக் கொள்ளவும் திட்டமிடுகின்றனர். இவர்களின் விவசாய சந்தைக்கான ஒரு வங்கியாக இதனை பார்க்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.