மாஸ்கோ பிரகடனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவராக விளங்கிய
ஏ.எஸ்.கே. அவர்கள் 1969 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த உலக கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச மாநாட்டின் பிரகடனத்தை வியட்நாமுக்கு சுதந்திரம், விடுதலை, சமாதானம்! என்ற தலைப்பில் தமிழாக்கி தந்துள்ளார். அந்தப் பிரகடனம் வருமாறு:
ராட்சசகரமான ராணுவ எந்திரத்தை ஏவிவிட்டபோதும், ஆக்கிரமிப்பாளர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி வியட்நாம் ஜனநாயக குடியரசின் பிரதேசங்கள் மீது குண்டுவீசுவதை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தென்வியட்நாம் விடுதலை முன்னணி சம அந்தஸ்தோடு பங்குகொள்ளும் நான்கு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புதல் தெரிவிக்க நேரிட்டது. தென்வியட்நாமில் மக்கள் விடுதலைப் படைகள் அமெரிக்க தலையீட்டார்களுக்கும் அவர்களது கைப்பாவைகளுக்கும் இடையீடின்றி அடிமேல் அடிகொடுத்து வருகிறார்கள். இந்தப் பிரதேசத்தின் மிகப்பெரும்பாலான பரப்பில் மக்கள் ஆட்சி நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கிப் பலத்தின் தர்மத்தில்தான் எடுபிடி பொம்மையாட்சி அதிகாரத்தில் நிற்கிறது.
இவையாவும் வீர வியட்நாம் மக்களின் வெற்றிகள். உலக சோசலிச அமைப்பின் வெற்றிகள், சர்வதேச கம்யூனிஸ்ட், தொழிலாளர் இயக்கத்தின் வெற்றிகள். சமாதானம் விழையும் முற்போக்கு சக்திகளின் வெற்றிகள். வெற்றிகரமாக வியட்நாம் போராட்டம் உலகசக்திகளின் பலாபலத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை பிரதிபலிக்கின்றது. சோசலிசம், ஜனநாயகம், தேசவிடுதலை சக்திகள் உலக ரீதியாக வளர்ந்து வரும் அளவில் அதன் வலிமையை பிரதிபலிக்கின்றது.
மனிதகுலத்தின் பொது விரோதியான ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் ஒருமைப்பாட்டையும், போராட்ட ஒற்றுமையையும் வளர்த்துக் கொள்வதில் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கமும் – ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் காட்டிய உறுதி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வியட்நாமுக்கு ஆதரவாக எழுந்த விரிவான இயக்கத்தில் தெளிவாயும் ஸ்தூலமாயும் பிரதிபலிக்கின்றது.
சுதந்திரம், விடுதலை இவற்றுற்காக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உறுதியாக போராடும் மக்கள் சோவியத் யூனியன், அனைத்து சோசலிஸ்ட் நாடுகள், உலகம் முழுவதும் உள்ள சமாதானம் விழையும் சக்திகள் இவற்றின் ஆதரவை தம்பால் கொண்ட மக்களை வெல்ல முடியாது என்பதை வியட்நாம் தேச பக்தர்களின் போராட்டம் காட்டுகின்றது.
சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அனைத்து ஏகாதிபத்திய – எதிர்ப்பு சக்திகளின் ஒற்றுமை இணைப்புகள் யாவும் பொது விரோதியான ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வலுப்பெறுந்தோறும் அவற்றின் வெற்றிகள் மேலும் அதிகரிக்கும்.
கம்யூனிஸ்ட் – தொழிலாளர் கட்சிகள் எவ்வளவு அதிக உத்வேகத்துடன் மக்கள் சுதந்திரப் பதாகையினை ஏந்தி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு கொள்கையினை எதிர்த்து முன்னணியில் நிற்கிறார்களோ, அதற்கேற்ப பொதுமக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் மேலும் விரிவாகவும் உறுதியாகவும் வளர்ச்சியுறும்.
பலமான தோல்விகளை அடைந்தபோதும் அமெரிக்காவின் ராணுவ வெறிவட்டாரங்கள் வியட்நாம் சம்பந்தமாக தமது ஆக்கிரமிப்பு, நவீன காலனி ஆதிக்க கொள்கையினை கைவிட்டுவிடவில்லை. வியட்நாம் பிரச்சனைக்கு ராணுவ ரீதியில் தீர்வுகாணவே தொடர்ந்து முயல்கின்றார்கள். ராணுவ மோதல்களை விஸ்தரிக்கும் ஆபத்தான பாதையில் பிடிவாதமாக நிற்கிறார்கள். லாவோஸ் பிரதேசங்களில் குண்டுவீச்சு அதிகரிக்கப்பட்டிருப்பதும் நடுநிலை நாடான கம்போடியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டல்கள் தொடர்ந்து நடத்தப்படுவதும் இதை நிரூபிக்கின்றன.
வியட்நாம் ஜனநாயக குடியரசு தென் வியட்நாம் தேசிய விடுதலை முன்னணி இவற்றின் நியாயமான கோரிக்கைகளைக் காரிய நோக்கத்துடனும் எதார்த்த முறையிலும் விவாதிப்பதற்கு பாரீஸ் மாநாட்டில் அமெரிக்க அரசும் அவ்வரசின் பிரதிநிதிகளும் பிடிவாதமாக மறுக்கின்றார்கள். முதன் முதலாக தெற்கு வியட்நாமிலிருந்து அமெரிக்கப் படைகளும் ஆக்கிரமிப்பில் பங்கு கொண்டுள்ள மற்ற நாடுகளின் படைகளும் நிபந்தனையின்றி முற்றாக பின்வாங்க வேண்டும் என்பதே இந்தக் கோரிக்கை. இதற்கு மாறாக அவர்கள் சண்ட பிரசண்ட சாதுர்யங்கள் மூலம் உலக மக்களை தவறான வழியில் இட்டுச் சென்று போர்முனையில் அடைந்த தோல்வியை நிர்ப்பந்தங்கள் மூலம் பேச்சுவார்த்தைகளில் மாற்றி வெற்றிபெற முயல்கிறார்கள்.
தென் வியட்நாமிலிருந்து அமெரிக்கா அதன் சுற்று கிரகங்களின் படைகள் நிபந்தனையின்றி முற்றாக வெளியேற வேண்டும் என்ற பிரச்சனைக்கு தீர்வுகாண்பதை மழுப்பித் தவிர்த்து படைகள் பரஸ்பரம் விலகிக் கொள்ள வேண்டும் என்ற பெயரில் வலியுறுத்துகிறார்கள். இது ஆக்கிரமிப்பாளரையும் ஆக்கிரமிப்புக்கு இரையானோரையும் ஒரே தரத்தில் வைப்பதாகும். ஆனால் போரைக் கட்டவிழ்த்துவிட்டதும், விடாப்பிடியாகத் தொடர்ந்து நடத்தி வருவதும் அமெரிக்க ஏகாதிபத்தியமே என்ற உண்மையை மறைப்பதில் அதற்கு என்றும் வெற்றிகிட்டாது.
வியட்நாமில் அமெரிக்கத் தலையீடு உலகச் சமாதானத்திற்கு இடைவிடாத அபாயம், சமாதானம், தேச சுதந்திரம், ஜனநாயகம், சமூக முன்னேற்றம் இவற்றுக்குப் போராடி வரும் மக்கள் அனைவருக்கும் அப்பட்டமானச் சவாலாகும். சர்வதேசக் கம்யூனிஸ்ட், தொழிலாளர் இயக்கம் தொழிலாளி வர்க்க சர்வதேசியக் கோட்பாடுகளுக்கு விசுவாசமுடன், எதிர்காலத்திலும் சரி, சகோதர ஒருமைப்பாட்டு உணர்வுடன் வியட்நாம் மக்கள் தமது நியாயமான லட்சியத்தில் இறுதி வெற்றிபெறும் வரையில் அவசியமான சகல உதவிகளையும் செய்யும். இதன்மூலம், உலக முழுவதிற்குமான சமாதான நோக்கத்திற்கும், சுதந்திரம், சோசலிசம் என்ற லட்சியத்திற்கும் கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகள் மிகப்பெறும் பங்குப் பணியினை ஆற்றுகின்றன.
வியட்நாம் பிரச்சனைக்கு நியாயமான பரிகாரம் காண்பது வியட்நாம் மக்களின் அடிப்படை தேசிய உரிமைகளைப் பெறுவதின் அடிப்படையில் மட்டுமே சாத்தியம் என்று கம்யூனிஸ்ட்டு, தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச மாநாடு மனமார எடுத்துக் கூறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.