===ஏ.எஸ்.கே===
கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச மாநாடு சகோதர வியட்நாம் மக்களுக்கு அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கு எதிரான யுத்தத்தில் அவர்கள் ஈட்டிய வரலாற்றுப் புகழ்படைத்த வெற்றிகளுக்காக ஆர்வம் நிறைந்த போர்க்குணமிக்க வாழ்த்துக்களை தெரிவித்து உளம்நிறைய பாராட்டுகின்றது.
வியட்நாம் மக்களின் முன்னணிப் படையான தொழிலாளர் கட்சிக்கும் அதன் மத்தியக் கமிட்டிக்கும் மாபெரும் தேசபக்திக்கும் சர்வதேசவாதியும் – சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிகு உறுப்பினருமான தோழர் ஹோ-சி-மின் அவர்களுக்கும் நாம் சிறப்பாக மரியாதை தெரிவிக்கின்றோம்.
வியட்நாம் தொழிலாளர் கட்சி அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை ஆவேசமூட்டுகின்ற சக்தியாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் விளங்குகிறது. இக்கட்சி தென்கிழக்கு ஆசியாவில் தேசிய நலன்களையும் சோசலிசத்தின் எல்லைகளையும் முரணின்றிப் பாதுகாக்கிறது.
தென் வியட்நாம் மக்களின் சட்டப்பூர்வமான பிரதிநிதியின் அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கு எதிரான வீரஞ்செறிந்த போராட்டத்தின் சோதனைகளில் வென்ற ஒழுங்கமைப்பாளனும் தலைவனுமான தென்வியட்நாம் தேசவிடுதலை முன்னணிக்கு உள்ளார்ந்த வாழ்த்துக்களை வழங்குகிறோம். தென் வியட்நாம் தேச விடுதலை முன்னணியின் அரசியல் வேலைத்திட்டமானது வியட்நாம் மக்கள் அனைவரையும் அவர்களது அறவழிப்பட்ட விடுதலைப் போராட்டத்தில் ஒன்றுபடுத்துவதற்கான அடிப்படையாகும்.
தென்வியட்நாம் தேச விடுதலை முன்னணியின் மத்தியக் கமிட்டியால் 1969 மே 8ஆம்தேதியன்று முன்வைக்கப்பட்ட ‘வியட்நாமின் அமைதிக்கு உதவிபுரியும் தென்வியட்நாம் பிரச்சனையின் பொதுவான பரிகாரத்தின் கோட்பாடுகளும் பிரதான உள்ளடக்கமும்’ என்ற பத்து அம்சத் திட்டத்திற்கு சர்வதேச மாநாடு நிபந்தனையின்றி ஆதரவு தருகிறது.
இந்த திட்டமானது 1954ஆம் ஆண்டில் நிறைவேறிய வியட்நாம் பற்றிய ஜெனீவா உடன்பாடுகளின் தலையாய கோட்பாடுகளையும் தற்போது வியட்நாமில் உள்ள நிலைமையையும் தனக்கு ஆதாரமாக கொண்டுள்ளது.
இது ஐந்து அம்சங்களைக் கொண்ட தென் வியட்நாம் தேச விடுதலை முன்னணியின் அரசியல் திட்டத்தையும் நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டு வியட்நாம் ஜனநாயக குடியரசு சர்க்காரின் நான்கு அம்ச நிலைக்கு இசைவாக உள்ளது. தென் வியட்நாம் பிரச்சனைகளுக்காக முன்மொழியப்பெற்ற பரிகாரமானது வியட்நாம் மக்களின் தேசிய உரிமைகளுக்கும் உலக சமாதான நலன்களுக்கும் முற்ற முழுக்க உகந்ததாக உள்ளது. இது தென் வியட்நாம் மக்களுக்கு சுய நிர்ணய உரிமைக்கும் வியட்நாமின் நிலையான சமாதானம் நிலவுவதற்கும் உத்தரவாதம் அளிக்கின்றது. இந்தோ சீனாவில் உள்ள இதர மக்களின் நலன்களுக்கும் இது இணக்கமானதாக இருக்கிறது.வியட்நாம் மக்கள் தமது தாயகத்தைப் பாதுகாக்க போரிடுவதற்குள்ள உரிமையானது எல்லா மக்களும் தமது தற்காப்புக்காக போரிடுவதற்குள்ள புனிதமானது, புராதனப்படுத்த முடியாததாகும்.
சுதந்திரம், விடுதலை, இவற்றுக்காக வியட்நாம் மக்கள் நடத்தும் போராட்டம் மக்களகத்தே ஆழமான மரியாதை செலுத்தி பாராட்டும் உணர்ச்சிகளை தோற்றுவிக்கிறது. வியட்நாம் மக்கள் தமது வெற்றியில் கொண்டுள்ள உறுதி, வீரசாகசம், நம்பிக்கை ஆகிய இவை சமாதானத்தை பேணிக் காப்பதற்கும் ஒடுக்கு முறையிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் மக்களை விடுவிப்பதற்குமான போராட்டத்திற்கு எடுத்துக்காட்டாகவும் ஆவேசமூட்டுவதாகவும் விளங்குகின்றது.
வியட்நாம் மக்கள் தமது தாயகத்தை பாதுகாத்து நிற்கும் போதிலேயே தமது சர்வதேசிய கடமையையும் ஆற்றுகின்றனர். உலகம் முழுவதிலும் சமாதானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் மேன்மை மிக்க லட்சியத்திற்கும் சேவை புரிகின்றனர். வியட்நாம் மக்களின் இந்த அறப்போராட்டத்தில் அதன் பக்கத்தே ஒருமைப்பாடு கொண்டு உறுதியுடன் நின்றுள்ளோம். தொடர்ந்து நின்று வருவோம்.
அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக வியட்நாம் மக்கள் நடத்தும் போராட்டம் சோசலிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையே முற்போக்கு சக்திகளுக்கும் பிற்போக்கு சக்திகளுக்கும் இடையே நடைபெறும் உலகு தழுவிய போராட்டத்தின் மிக முக்கிய இணைப்புப் பகுதிகளின் ஒன்றாகும்.வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகள் தமது ஆயுத தலையீட்டை நிறைவேற்றும் வேளையில் ஆசியாவில் உள்ள சோசலிச எல்லைக் காவல் அரண் ஒன்றை தகர்த்தெறிவதற்கும் சமாதானம், சுதந்திரம், முன்னேற்றம் ஆகியவற்றிற்கான பாதையிலிருந்து இந்தோ- சீனா மக்களைத் தடுத்து நிறுத்திவிடவும் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றில் நடைபெறும் புரட்சிகர தேச விடுதலை இயக்கத்திற்கு பேரடி கொடுக்கவும் சோசலிச நாடுகள் எல்லா ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் இவற்றின் ஒருமைப்பாட்டின் வல்லமையை சோதிக்கவும் முனைந்தன.
அமெரிக்க நாடுகளின் அளப்பெரும் ஆதரவுடன் முதன்மையாய் சோவியத் யூனியனின் அளவில்லா ஆதரவுடன் உலகின் சமாதானத்தை விரும்பும் மக்கள் அனைவரது உதவியும் கொண்டு ஏகாதிபத்தியத்தின் மிகவும் ஆற்றல்மிக்க சக்தியான அமெரிக்காவுக்கு வியட்நாம் மக்கள் தமது வல்லமைக்கு எல்லையே இல்லை என்பதைத் தெளிவாக்கியுள்ளனர்.
வெகுஜனங்களை அழிப்பதற்கான கிருமி, ரசாயன ஆயுதங்களையும் இதர சாதனங்களையும் வியட்நாமுக்கு, வியட்நாம் மக்களுக்கு எதிராக அமெரிக்கத் தலையீட்டாளர்கள் பயன்படுத்திய கொள்ளைத் தனமான கொடிய செயல்கள் – இது மனித இனப்படுகொலைச் செயலே – மனிதகுலம் முழுவதன் சீற்றத்தை கிளப்புகிறது. இச்செயல்கள் ஏகாதிபத்தியத்தின் உண்மையான, மனிதகுல விரோத சாரத்தை எல்லாம் மக்களும் காணும் படி வெளிப்படுத்தியுள்ளன. இவையாவும் சில முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வட்டாரங்கள் அடங்கலாக பரந்த பகுதிகளிடையே இருந்து மென்மேலும் அரசியல் தார்மீகத் துறைகளில் தனிமைப்படுவதற்கு வழிகோலியுள்ளன. அமெரிக்காவிலேயே வியட்நாமில் நடைபெறும் களங்கமிக்க யுத்தத்தை எதிர்க்கும் மக்கள் வட்டாரங்கள் மென்மேலும் விரிவடைகின்றன. இதன் விளைவுகள் அமெரிக்க சமுதாயத்தையே ஆட்டங் கொடுக்கச் செய்கின்றன.
வியட்நாம் மக்களின் வீரகாவியம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மக்கள் இயக்கத்தின் தீர்மானமான அம்சங்களில் ஒன்று. இது வாலிபர், மாணவர், போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலம் பிரதிபலிக்கிறது.
ராட்சசகரமான ராணுவ எந்திரத்தை ஏவிவிட்டபோதும், ஆக்கிரமிப்பாளர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி வியட்நாம் ஜனநாயக குடியரசின் பிரதேசங்கள் மீது குண்டுவீசுவதை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தென்வியட்நாம் விடுதலை முன்னணி சம அந்தஸ்தோடு பங்குகொள்ளும் நான்கு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புதல் தெரிவிக்க நேரிட்டது. தென்வியட்நாமில் மக்கள் விடுதலைப் படைகள் அமெரிக்க தலையீட்டார்களுக்கும் அவர்களது கைப்பாவைகளுக்கும் இடையீடின்றி அடிமேல் அடிகொடுத்து வருகிறார்கள். இந்தப் பிரதேசத்தின் மிகப்பெரும்பாலான பரப்பில் மக்கள் ஆட்சி நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கிப் பலத்தின் தர்மத்தில்தான் எடுபடி பொம்மையாட்சி அதிகாரத்தில் நிற்கிறது.
இவையாவும் வீர வியட்நாம் மக்களின் வெற்றிகள். உலக சோசலிச அமைப்பின் வெற்றிகள், சர்வதேச கம்யூனிஸ்ட், தொழிலாளர் இயக்கத்தின் வெற்றிகள். சமாதானம் விழையும் முற்போக்கு சக்திகளின் வெற்றிகள். வெற்றிகரமாக வியட்நாம் போராட்டம் உலகசக்திகளின் பலாபலத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை பிரதிபலிக்கின்றது. சோசலிசம், ஜனநாயகம், தேசவிடுதலை சக்திகள் உலக ரீதியாக வளர்ந்து வரும் அளவில் அதன் வலிமையை பிரதிபலிக்கின்றது.
மனிதகுலத்தின் பொது விரோதியான ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் ஒருமைப்பாட்டையும், போராட்ட ஒற்றுமையையும் வளர்த்துக் கொள்வதில் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கமும் – ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் காட்டிய உறுதி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வியட்நாமுக்கு ஆதரவாக எழுந்த விரிவான இயக்கத்தில் தெளிவாயும் ஸ்தூலமாயும் பிரதிபலிக்கின்றது.
சுதந்திரம், விடுதலை இவற்றுற்காக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உறுதியாக போராடும் மக்கள் சோவியத் யூனியன், அனைத்து சோசலிஸ்ட் நாடுகள், உலகம் முழுவதும் உள்ள சமாதானம் விழையும் சக்திகள் இவற்றின் ஆதரவை தம்பால் கொண்ட மக்களை வெல்ல முடியாது என்பதை வியட்நாம் தேச பக்தர்களின் போராட்டம் காட்டுகின்றது.
சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அனைத்து ஏகாதிபத்திய – எதிர்ப்பு சக்திகளின் ஒற்றுமை இணைப்புகள் யாவும் பொது விரோதியான ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வலுப்பெறுந்தோறும் அவற்றின் வெற்றிகள் மேலும் அதிகரிக்கும்.
கம்யூனிஸ்ட் – தொழிலாளர் கட்சிகள் எவ்வளவு அதிக உத்வேகத்துடன் மக்கள் சுதந்திரப் பதாகையினை ஏந்தி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு கொள்கையினை எதிர்த்து முன்னணியில் நிற்கிறார்களோ, அதற்கேற்ப பொதுமக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் மேலும் விரிவாகவும் உறுதியாகவும் வளர்ச்சியுறும்.
பலமான தோல்விகளை அடைந்தபோதும் அமெரிக்காவின் ராணுவ வெறிவட்டாரங்கள் வியட்நாம் சம்பந்தமாக தமது ஆக்கிரமிப்பு, நவீன காலனி ஆதிக்க கொள்கையினை கைவிட்டுவிடவில்லை. வியட்நாம் பிரச்சனைக்கு ராணுவ ரீதியில் தீர்வுகாணவே தொடர்ந்து முயல்கின்றார்கள். ராணுவ மோதல்களை விஸ்தரிக்கும் ஆபத்தான பாதையில் பிடிவாதமாக நிற்கிறார்கள். லாவோஸ் பிரதேசங்களில் குண்டுவீச்சு அதிகரிக்கப்பட்டிருப்பதும் நடுநிலை நாடான கம்போடியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டல்கள் தொடர்ந்து நடத்தப்படுவதும் இதை நிரூபிக்கின்றன.
வியட்நாம் ஜனநாயக குடியரசு தென் வியட்நாம் தேசிய விடுதலை முன்னணி இவற்றின் நியாயமான கோரிக்கைகளைக் காரிய நோக்கத்துடனும் எதார்த்த முறையிலும் விவாதிப்பதற்கு பாரீஸ் மாநாட்டில் அமெரிக்க அரசும் அவ்வரசின் பிரதிநிதிகளும் பிடிவாதமாக மறுக்கின்றார்கள். முதன் முதலாக தெற்கு வியட்நாமிலிருந்து அமெரிக்கப் படைகளும் ஆக்கிரமிப்பில் பங்கு கொண்டுள்ள மற்ற நாடுகளின் படைகளும் நிபந்தனையின்றி முற்றாக பின்வாங்க வேண்டும் என்பதே இந்தக் கோரிக்கை. இதற்கு மாறாக அவர்கள் சண்ட பிரசண்ட சாதுர்யங்கள் மூலம் உலக மக்களை தவறான வழியில் இட்டுச் சென்று போர்முனையில் அடைந்த தோல்வியை நிர்ப்பந்தங்கள் மூலம் பேச்சுவார்த்தைகளில் மாற்றி வெற்றிபெற முயல்கிறார்கள்.
தென் வியட்நாமிலிருந்து அமெரிக்கா அதன் சுற்று கிரகங்களின் படைகள் நிபந்தனையின்றி முற்றாக வெளியேற வேண்டும் என்ற பிரச்சனைக்கு தீர்வுகாண்பதை மழுப்பித் தவிர்த்து படைகள் பரஸ்பரம் விலகிக் கொள்ள வேண்டும் என்ற பெயரில் வலியுறுத்துகிறார்கள். இது ஆக்கிரமிப்பாளரையும் ஆக்கிரமிப்புக்கு இரையானோரையும் ஒரே தரத்தில் வைப்பதாகும். ஆனால் போரைக் கட்டவிழ்த்துவிட்டதும், விடாப்பிடியாகத் தொடர்ந்து நடத்தி வருவதும் அமெரிக்க ஏகாதிபத்தியமே என்ற உண்மையை மறைப்பதில் அதற்கு என்றும் வெற்றிகிட்டாது.
வியட்நாமில் அமெரிக்கத் தலையீடு உலகச் சமாதானத்திற்கு இடைவிடாத அபாயம், சமாதானம், தேச சுதந்திரம், ஜனநாயகம், சமூக முன்னேற்றம் இவற்றுக்குப் போராடி வரும் மக்கள் அனைவருக்கும் அப்பட்டமானச் சவாலாகும். சர்வதேசக் கம்யூனிஸ்ட், தொழிலாளர் இயக்கம் தொழிலாளி வர்க்க சர்வதேசியக் கோட்பாடுகளுக்கு விசுவாசமுடன், எதிர்காலத்திலும் சரி, சகோதர ஒருமைப்பாட்டு உணர்வுடன் வியட்நாம் மக்கள் தமது நியாயமான லட்சியத்தில் இறுதி வெற்றிபெறும் வரையில் அவசியமான சகல உதவிகளையும் செய்யும். இதன்மூலம், உலக முழுவதிற்குமான சமாதான நோக்கத்திற்கும், சுதந்திரம், சோசலிசம் என்ற லட்சியத்திற்கும் கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகள் மிகப்பெறும் பங்குப் பணியினை ஆற்றுகின்றன.
வியட்நாம் பிரச்சனைக்கு நியாயமான பரிகாரம் காண்பது வியட்நாம் மக்களின் அடிப்படை தேசிய உரிமைகளைப் பெறுவதின் அடிப்படையில் மட்டுமே சாத்தியம் என்று கம்யூனிஸ்ட்டு, தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச மாநாடு மனமார எடுத்துக் கூறுகிறது.வியட்நாம் மக்கள் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தில் பிரவேசித்துள்ள இன்று, வியட்நாம் ஜனநாயகக் குடியரசு, தெற்கு வியட்நாம் தேசிய விடுதலை முன்னணி இவற்றின் முன் முயற்சியால் நியாயமான அரசியல் தீர்வுக்கு அவசியமான நிலைகள் யாவும் சிருஷ்டிக்கப் பெற்றுள்ள இன்று நாம் கோருவதாவன:
பாரீஸில் நடைபெறும் நான்கு தரப்பு மாநாட்டில் முட்டுக்கட்டை போடும் அமெரிக்கா, தனது நிலைமையைக் கைவிட வேண்டும்; அமெரிக்கா வியட்நாமில் தனது ஆக்கிரமிப்பு செயல்களை உடனே நிறுத்த வேண்டும், தென்வியட்நாமிலிருந்து தனது படைகளையும் தனது சுற்றுக் கிரகங்களின் படைகளையும் முழுமையாக நிபந்தனையின்றி விலக்கிக் கொள்ள வேண்டும்;
– அந்நியர் தலையீடின்றி தமது உள் விவகாரங்களை தென் வியட்நாமிய மக்கள் தாமே நிர்ணயித்துக் கொள்வதற்கான உரிமையை அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும்;
– வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் அரசுரிமைக்கும் பந்தோபஸ்திற்கும் எதிரான எல்லா நடவடிக்கைகளையும் அமெரிக்கா நிறுத்திவிட வேண்டும்;
– அமெரிக்கா, லாவோஸில் தனது தலையீட்டை நிறுத்த வேண்டும். அவற்றின் எல்லைகளை அங்கீகரிக்க வேண்டும், தென்கிழக்கு ஆசியா, கிழக்காசிய நாடுகள் விஷயத்தில் தனது ஆக்கிரமிப்பு நோக்கங்களைக் கைவிட வேண்டும். 1954, 1962ஆம் ஆண்டுகளின் ஜெனீவா உடன்பாட்டைக் கண்டிப்பாக அனுஷ்டிக்க வேண்டும்.தாய்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்கொரியாவின் பொம்மை ஆட்சி, ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு, ஜப்பான் இவை வியட்நாமில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு துணையாக நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடும் செயல்களை நிறுத்த வேண்டும்.
கம்யூனிஸ்ட்டுகளின் பல லட்சம் பேர் கொண்ட வலிமைமிக்க படையின் சார்பாக நேர்மையான மக்களே! சமாதானம், நீதி, சுதந்திரம், சுயாதீனம் இவற்றை பேண விழைவோரே! உங்களை கேட்டுக் கொள்கிறோம்.
வியட்நாமில் அமெரிக்கா நடத்திவரும் கொலைகார போரை எதிர்த்து உலகம் முழுவதிலும் உங்களது கண்டனக்குரலாக உறுதியாக எழுவதாக!
வீர வியட்நாம் மக்களுடன் ஒருமைப்பாடு தெரிவிக்கும் சர்வதேச இயக்கத்தில் மேலும் தீவிரமாக பங்கெடுப்பீர்!
வியட்நாமிலிருந்து அமெரிக்கப் படைகளும் அதன் சுற்றுக்கிரகங்களின் படைகளும் விலக வேண்டும் என்று கோருக!
வியட்நாம் மக்களின் மாற்றவியலாத உரிமைகளை உத்தரவாதம் செய்யும் அடிப்படையில்
வியட்நாம் பிரச்சனைக்கு தாமதமின்றி சமாதானப்பூர்வமாக தீர்வுகாணக்கோருவீர்!
தென்வியட்நாம் விடுதலை முன்னணியின் பத்து அம்ச ஆலோசனைக்கு ஆதரவு அளிப்பீர்!
அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடி வரும் வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக ஏகாதிபத்திய – எதிர்ப்பு சக்திகளும் சமாதானம் விழையும் சக்திகளும் உடனடியாக புதிய, பல வகையான மேலும் வலிமை வாய்ந்த ஒன்றுசேர்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தலையீட்டாளர்களுக்கு அவர்களது சுற்றுக்கிரங்களுக்கு படைவீரர், ஆயுதங்கள், தளவாடங்கள் ஏற்றி அனுப்புவதை பகிஷ்கரியுங்கள்!
ஜெனீவா உடன்பாடு கையொப்பமிடப்பட்டதன் ஆண்டுவிழா நாளான ஜூலை 20 ஆம் தேதியை வியட்நாமினுடைய ஒருமைப்பாடு தினமாக அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு சமாதிகட்டும் போராட்ட நாளாகக் கருதி மாற்றுவோம்!
சுதந்திரம், சுயாதீனம் இவற்றுக்காக போராடும் வீர வியட்நாம் மக்கள் புகழ் ஓங்குக!
சர்வதேச ஒருமைப்பாட்டு பதாகையினை உயர்த்திப் பிடிப்போம்!
வியட்நாமுக்கு சுதந்திரம், விடுதலை, சமாதானம் தேவை!
வியட்நாம் மக்களின் நியாயமான லட்சியம் வெற்றியுறுவது திண்ணம்!
மாஸ்கோ, ஜூன் 10, 1969(பிராவ்தா, ஜூன் 11, 1969)
– கம்யூனிஸம்(1847-1975) எனும் நூலிருந்து…

Leave a Reply

You must be logged in to post a comment.