திருப்பூர், செப்.20-
திருப்பூரில் நொய்யல் ஆற்றில் வெண்மை நுரைப் படலம் பரவி காணப்பட்ட நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் “வழக்கம் போல்” ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் குளம், குட்டைகள் நிரம்பியதுடன், நொய்யல் ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நொய்யலாறு ஓடும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வெண்படலம் போர்த்தியது போல் நுரை பொங்கி  ஓடியது. திங்கள்கிழமை இரவு சலவை ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யலாற்றில் திறக்கப்பட்டிருக்கலாம். சலவை ஆலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களே இதுபோன்ற நுரை பொங்க காரணமாக அமையும், எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட சலவை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, பொறியாளர் இளங்குமரன் தலைமையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தி னர் திருப்பூரிலிருந்து தொடங்கி சூலூர் குளம் வரையிலும் கோவையிலிருந்து நொய்யல் வரும் வழித்தடத்தில் சென்று ஆய்வு செய்தனர். அதேபோல் திருப்பூரிலிருந்து ஒரத்துப்பாளையம் நோக்கி நொய்யல் செல்லும் வழியில் சுகுமார்நகர் தடுப்பணை வரையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறுகையில், மழை இல்லாத நாட்களில் நொய்யலில் விடப்பட்ட உள்ளூர் பயன்பாட்டு கழிவுநீர் மற்றும் ஆலைகளில் வெளியாகிய கழிவுநீர் தேங்கிக்கிடந்து,

தற்போது வெள்ளத்தால் அடித்து வரப்படுகிறது. இதனால் நுரை பொங்க வாய்ப்புள்ளது. திருப்பூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆலைகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்படவில்லை. முறைகேடுகளில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: