திருப்பூர், செப்.20-
தனிநபர் கழிப்பிடத் திட்டத்தில் கழிப்பிடம் கட்டிக் கொண்டால் தான் நூறு நாள் திட்டத்தில் வேலை தரப்படும் என நிபந்தனை விதிப்பதை ஏற்க முடியாது என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க அவிநாசி ஒன்றிய மாநாடு எதிர்ப்புத் தெரிவித்தது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க அவிநாசி ஒன்றிய மாநாடு அவிநாசி பி.ராமமூர்த்தி நினைவகத்தில் புதன்கிழமை ஒன்றியத் துணைத் தலைவர் ஏ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டைத் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இம்மாநாட்டில் 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகரித்து, தினசரி ரூ.400 சம்பளம் வழங்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் வாராவாரம் வேலை செய்யும் இடத்திலேயே சம்பளம் பட்டுவாடா செய்ய வேண்டும். வடுகபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு மூன்று மாதங்களாக கொடுக்காத வேலையை உடனடியாக வழங்க வேண்டும். தனிதபர் கழிப்பிடம் கட்டினால் தான் 100 நாள் வேலை வழங்கப்படும் என கட்டாயப்படுத்த கூடாது. 100 நாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றியத் தலைவராக எஸ்.மல்லப்பன், துணைத் தலைவராக கே.குருநாதன், ஒன்றியச் செயலாளராக ஏ.சண்முகம், துணைச் செயலாளராக வி.பி.முருகேசன், பொருளாளராக கே.குப்புசாமி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.