கோவை, செப்.20-
கோவையில் மர்ம காய்ச்சலுக்கு 10 வயது சிறுமி பலியான நிலையில், நீண்ட நாட்களாக பரமரிக்கப்படாத பொதுக்கழிப்பிடத்தின் காரணமாகவே நோய் பரவுவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் கழிப்பிடத்தை இடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாநகராட்சி 47 ஆவது வார்டுக்கு உட்பட்டது கணபதி, பாலன் நகர் செக்கான் தோட்டம், இங்குள்ள குடியிருப்பு பகுதியில் பல வருடங்களாக பாரமரிப்பு இல்லாமல் பொது கழிப்பிடம் உள்ளது. இதனால் கடும் துர்
நாற்றம் வீசுவதோடு மக்கள் குடியிருக்க முடியாத நிலை உள்ளது. இதனையடுத்து இப்பகுதியினர் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் இந்த கழிப்பிடத்தை இடிக்க வேண்டும் என புகார் தெரிவித்திருந்தனர்.

ஆனால், மாநாகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பொதுகழிப்பிடத்தில் மழை நீர் உட்பட கழிவு நீர்களும் தேங்கியவாறே உள்ளது. இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த தாஜ் என்ற 10 வயது சிறுமி செவ்வாயன்று மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்புக்கு இந்த பொது கழிப்பிடத்தினால் ஏற்பட்ட சுகாதார கேடு தான் காரணம். ஆகவே, பொதுக்கழிப்பிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும். இல்லையெனில் அந்த கழிப்பிடத்தை தாங்களே இடித்து அகற்றி விடுவதாக கூறி பொதுமக்கள் ஓன்று சேர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு நகரக்குழு உறுப்பினர்கள் நாராயணன், முத்துசாமி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஓரு வாரத்திற்குள் பயன்பாட்டில் இல்லாத இந்த கழிப்பிடம் இடிக்கப்படும். பாலன் நகர் குடியிருப்பு பகுதி முழுவதும் சுத்தம் செய்து தரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் 3 வயது குழந்தை திவ்யஸ்ரீ, புதனன்று டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: