ஐதராபாத்:

தெலுங்கானாவில் அரசின் இலவச புடவைகளை பெண்கள் சண்டை போட்டு வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவ்வாறு வழங்கப்பட்ட புடவை தரமற்றது என்பதால் அதை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானாவில் தசரா பண்டிகையை ஒட்டி அரசு சார்பில் ஏழை பெண்களுக்கு இலவச புடவைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்காக அரசு தரப்பில் சூரத் மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலே புடவைகள் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியினர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் புடவைகளை வழங்கினர். சில பகுதிகளில் புடவை வாங்க வந்த பெண்களிடம் பெரும் சண்டை வெடித்தது. சில இடங்களில் புடவைகளை வாங்க வரிசையில் நின்ற பெண்கள் ஆக்ரோஷமாக சண்டை போட்ட காட்சியும் உள்ளூர் மீடியாக்களில் ஒளிபரப்பானது. ஐதராபாத்தில் அரசின் திட்டம் கடைசியில் பெரும் அடிதடியில் முடிந்தது. போலீசார் பெரும் சிரமப்பட்டு சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே சமூக வலைதளங்களில் பெண்கள் குழுவாக அரசு வழங்கிய புடவைகளை எரித்து அதைச் சுற்றி கும்மியடித்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வீடியோவும் வெளியானது.
புடவைகள் மிகவும் மோசமாக உள்ளது என்றும் தரையை சுத்தம் செய்யக்கூட உதவாது எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முதல்வர் சந்திரசேகர ராவை விமர்சனம் செய்யும் விதமாகவும் வீடியோ வெளியாகியது. ‘‘இதுபோன்ற புடவையை கட்டிக்கொண்டு சந்திரசேகர ராவின் மகள் கவிதா தசரா விழாவில் நடனம் ஆடுவாரா?’’ என கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் செலவு செய்யப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் சந்திரசேகர ராவின் அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பெண் ஒருவர் கூறுகையில், ‘‘இன்றைய வேலையை விட்டுவிட்டு வந்தோம். எங்களுக்கு ரூ. 400 நஷ்டம். நாங்கள் கடைக்கு சென்றிருந்தால் கூட நல்ல புடவையை வாங்கியிருப்போம். இவ்வளவு நேரம் வரிசையில் இன்று மோசமான புடவையை கொடுத்துள்ளனர். ரூ. 50க்கு கூட புடவைகள் தேறாது. தரையை சுத்தம் செய்யக்கூட உதவாது. எங்களை அவமதிப்பதற்கு பதிலாக இந்த திட்டத்தை செயல்படுத்தாமலே இருந்து இருக்கலாம்’’ என்றனர்.

Leave A Reply

%d bloggers like this: