திருப்பூர், செப்.18 –
வேலை உரிமையை இளைஞர்களின் அடிப்படை உரிமையாக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்து, மாநில உரிமையைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சைக்கிள் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்பட்டது.

15 வேலம்பாளையம் நகர வாலிபர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று அணைப்பாளையம் பகுதியில் துவங்கிய இந்த பிரச்சார பயண இயக்கத்தை சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தொடக்கி வைத்தார். வாலிபர் சங்க நகரத் தலைவர் நவீன் தலைமையில் செயலாளர் சின்னசாமி, துணைத் தலைவர் அருண் கார்த்திக், துணைச் செயலாளர் ஹனிஃபா உள்பட நிர்வாகிகள், சங்க முன்னணி ஊழியர்கள் சுமார் நூறு பேர் பங்கேற்றனர். அணைப்பாளையம், ரங்கநாதபுரம், சாமுண்டிபுரம், அம்மன்நகர், பிடிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வேலம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இப்பயணம் நிறைவடைந்தது. இதில் பங்கேற்றோர் வேலை உரிமையை அடிப்படை உரிமையாக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். முடிவில், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் சம்சீர்அகமது பிரச்சார இயக்கத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.